தமிழ்நாட்டுக்கு பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த ஆக.30-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி சென்றார். அங்கே முதல்நாள் தமிழர்கள் மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர், அதன்பின்னரே முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு தமிழ்நாட்டிற்கான பல்வேறு முதலீடுகள் ஈர்த்தார்.
இதைத்தொடர்ந்து இங்கிலாந்து சென்ற முதலமைச்சர், அங்கே Oxford பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். இதைத்தொடர்ந்து அங்கேயும் பல்வேறு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. இங்கிலாந்து, ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் 17,613 வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த சூழலில் இங்கிலாந்தில் அண்ணல் அம்பேத்கர் இலண்டன் பொருளியல் பள்ளியில் (LSE) படிக்கும்பொழுது, தங்கியிருந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இல்லத்துக்கு சென்ற முதலமைச்சர், பின்னர் காரல் மார்க்ஸின் நினைவிடத்துக்கு சென்று செவ்வணக்கம் செலுத்தினார். இதைத்தொடர்ந்து லண்டன் நகரில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். மேலும் இது தொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மரியாதை செலுத்திய திருவள்ளுவர் சிலை நெற்றியில் விபூதி பூசப்பட்டிருப்பதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியான நிலையில், அது எடிட் செய்யப்பட்ட போலி புகைப்படம் என தெரியவந்துள்ளது.
அதாவது உண்மையில் முதலமைச்சர் மரியாதையை செலுத்திய திருவள்ளுவர் சிலையின் நெற்றியில் விபூதி இல்லை. ஆனால் வேண்டுமென்றே முதலமைச்சர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அந்த புகைப்படத்தில் விபூதி இருப்பதுபோல் எடிட் செய்து பரப்பி வருகின்றனர். இந்த போலி புகைப்படத்தை அதிமுக, பாஜக நிர்வாகிகள், ஆதரவாளர்களே பெரும்பாலும் பரப்பி வருகின்றனர்.
உண்மைக்கு புறம்பான செய்தியை முதலில் பாஜக மட்டுமே பரப்பி வந்த நிலையில், தற்போது போலி செய்தியை பரப்புவதில் அதிமுகவும் முனைப்புக் காட்டி வருகிறது.
வெளிநாடுகளில் முதலீடுகளை ஈர்த்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.