
ராமநாதபுரம் நகர மையப்பகுதியில் அமைந்துள்ள 2.44 ஏக்கர் நிலத்தை ராமநாதபுரம் வெளிப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்காகப் பதிவாளர் ராமநாதன் என்பவர் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதில் முதற்கட்டமாக ரூ.25 லட்சத்தைப் பெற்றுக்கொண்ட அவர், மீதமுள்ள தொகையை வழங்கினால் மட்டுமே பத்திரம் வழங்கப்படும் என நில உரிமையாளரை வற்புறுத்தியுள்ளார்.இதனால் அதிருப்தியடைந்த நில உரிமையாளர், லஞ்ச ஒழிப்புத்துறையில் இது குறித்து புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி ரசாயனம் தடவிய ரூ.3 லட்சம் பணத்தை ராமநாதனிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த அதிகாரிகள் அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.
இந்த முறைகேட்டிற்கு உடந்தையாகச் செயல்பட்ட இடைத்தரகர் அயூப்கான் என்பவரும் கைது செய்யப்பட்டு, அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் லட்சம் மற்றும் ஊழல் தலைவிரித்தாடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.






