
திருவாரூர் மாவட்ட தி.மு.க செயலாளர் பூண்டி கலைவாணன் இல்ல திருமண விழா தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிகழ்வில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ”தேர்தல் முடிவுக்குப் பிறகு நம் தலைவர் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது. நம்முடைய கழகத்தின் நிகழ்ச்சியாக மிகுந்த எழுச்சியுடன் இந்தத் திருமண நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
யார் எந்தப் பக்கம் போனாலும் டெல்டா தி.மு.க-வுடன்தான் என்பதை நிரூபித்த உங்களுக்கு நன்றி! ஒட்டுமொத்த டெல்டாவும் கழகத்தின் கோட்டைதான். இது போன்ற கழகக் குடும்பங்கள் தமிழ்நாடு முழுவதும் இருப்பதால்தான், கழகம் எவ்வளவு பெரிய புயலைச் சந்தித்தாலும் மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது.
நம் தலைவர் தலைமையில் தி.மு.க மீண்டும் வெற்றி வாகை சூடும்.தி.மு.க ஒரு சமுதாய இயக்கம்; தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். தி.மு.க எப்போதும்போல மக்கள் பணியைத் தொடரும். தேர்தல் அரசியலில் தோல்வி அடைந்தாலும் கொள்கை அரசியலில் தோற்க மாட்டோம்.
இந்த ஆட்சியாளர்கள் யாரென்று போகப்போக உண்மை தெரியவரும்; அவர்கள் தானாகவே வெளிப்படுவார்கள்.தாயிடம் இருக்கும் குழந்தை, கிளுகிளுப்பைத் காட்டுபவரிடம் தற்காலிகமாகச் செல்லும். ஆனால், இறுதியில் மீண்டும் தாயிடமே திரும்ப வரும். இந்தத் தற்காலிகக் கவர்ச்சி எந்தப் பிரச்சினைக்கும் தீர்வாக மாறாது. இறுதியில் தமிழ்நாட்டிற்குத் தாயாக இருக்கின்ற நம் தலைவரையும் தி.மு.க-வையும் நோக்கியே மக்கள் வருவார்கள்" என தெரிவித்துள்ளார்.






