தமிழ்நாடு

“இந்த திட்டங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான்”: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இந்த திட்டங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் நடக்கிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“இந்த திட்டங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான்”: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவாரூர் மாவட்ட தி.மு.க செயலாளர் பூண்டி கலைவாணன் இல்ல திருமண விழா தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.

அப்போது கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது வருமாறு:-

பூண்டி கலைச்செல்வன் – மல்லிகா ஆகியோரின் குமாரி திருநிறைசெல்வி டாக்டர் கலையழகி அவர்களுக்கும், நந்தகோபால் மேற்கொண்டார் - சோபனா ஆகியோரின் குமாரன் திருவளர்செல்வன் டாக்டர் ராம்பாலாஜி அவர்களுக்கும், நம்முடைய அன்பான வாழ்த்துக்களோடு இந்த மணவிழா நிகழ்ச்சி நிறைவேறி இருக்கிறது.

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நண்பர் என்ற பெருமையைப் பெற்ற, நினைவில் வாழும் பூண்டி கிருஷ்ணசாமி அவர்களின் இல்லத்தில் நடக்கும் இந்தத் திருமண விழாவில், நாம் எல்லாம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.

அதிலும் குறிப்பாக, இந்த மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமைப் பொறுப்பேற்று, மணவிழாவை நடத்தி வைத்து, அதே நேரத்தில் மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பைப் பெற்றமைக்காக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன்.

கழகம் தொடங்கிய நாளிலிருந்து கொரடாச்சேரி பகுதியில் பேரூர் கழகச் செயலாளர் பொறுப்பேற்று, கழகம் நடத்தியிருக்கும் போராட்டங்கள் அனைத்திலும் பங்கெடுத்தவர் நம்முடைய பூண்டியார் அவர்கள்.

அவருடைய வழியில் இயக்கப் பணியாற்றி, கழகத் தோழர் இல்லங்களில், உள்ளங்களில் சிறப்பான இடத்தைப் பெற்றவர் நம்முடைய கழகத் தீரர் பூண்டி கலைச்செல்வன் அவர்கள்.

அவருடைய அருமைத் தம்பியாக, இன்றைக்கு இந்தத் திருவாரூர் மாவட்டக் கழகப் பொறுப்பேற்றுப் பணியாற்றிக் கொண்டிருக்கும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் அவர்கள், இன்றைக்கு இந்த மணவிழா நிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்று இதைச் சிறப்பான வகையில் நடத்திக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு ஆயிரக்கணக்கான குடும்பங்கள், இன்றைக்கு இந்த இயக்கத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறது, பணியாற்றிக் கொண்டிருக்கிறது, பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதைத்தான் நம்முடைய தம்பி உதயநிதி அவர்கள் பெருமையோடு எடுத்துச் சொன்னார். தோல்வி, வெற்றி என்பது இரண்டையும் சமமாகக் கருதிப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் தொண்டன்தான் தி.மு.க. என்பதை யாரும் மறுத்திட, மறைத்திட முடியாது.

இன்றைக்கு நடைபெற்று முடிந்திருக்கும் தேர்தலில், ஏதோ நாம் தோற்றுவிட்டது போன்று, அதுவும் படுதோல்வி அடைந்துவிட்டது போன்று, இத்தோடு தி.மு.க.வின் கதை முடிந்துவிட்டது என்று கவிதை இரங்கற்பா பாடுவதற்குகூட முன்வந்திருக்கிறார்கள். நம்முடைய இன எதிரிகள் அந்தச் சூழ்ச்சியில் இன்றைக்கு ஈடுபட்டிருக்கிறார்கள்.

தி.மு.க.வைப் பொறுத்தவரைக்கும் எத்தனையோ தேர்தல்களைப் பார்த்திருக்கிறது. 1949-இல் தொடங்கிய நம்முடைய கழகம், 1957-இல் நடைபெற்ற தேர்தலாக இருந்தாலும் சரி, 1962-இல் நடைபெற்ற தேர்தலாக இருந்தாலும் சரி, 1967-இல் நடைபெற்ற தேர்தலாக இருந்தாலும் சரி, 1971-இல் நடைபெற்ற தேர்தலாக இருந்தாரும் சரி, இவ்வாறு தொடர்ந்து நடைபெற்றிருக்கும் தேர்தல்களில் பல வெற்றிகளைக் கண்டதுண்டு; பல தோல்விகளையும் நாம் சந்தித்திருக்கிறோம்.

ஆனால், தோல்வி அடையும் நேரத்தில்தான் தி.மு.க. எப்போதுமே ஒரு பீனிக்ஸ் பறவையைப் போன்று கிளர்ந்து எழும் நிலையில் வரும். இப்போதுகூட இங்கு பேசியவர்கள் எல்லாம், ஏதோ சோகத்தில் இருப்பது போன்று பேசினார்கள். நான் பார்க்கிறேன், இந்த மேடையில் இருப்பவர்கள் மட்டுமல்ல; எதிரில் இருப்பவர்கள்கூட சோகமாக உட்கார்ந்து இருக்கும் காட்சியைப் பார்க்கிறோம். நாம் சோகமாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை. நாம்தான் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறோம்.

நம்முடைய திட்டங்களைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஐந்து ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது ஏழை-எளியவர்களுக்கு, விவசாயப் பெருங்குடி மக்களுக்கு, நெசவாளர்களுக்கு, தொழிலாளர் தோழர்களுக்கு, அடித்தளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, மாணவ - மாணவிகளுக்கு, பெண்களுக்கு - மகளிருக்கு, ஆசிரியர்களுக்கு என்று, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய ஆட்சி நம்முடைய திராவிட மாடல் ஆட்சி என்பதை யாரும் மறுத்திட, மறைத்திட முடியாது.

நாம் வெற்றி வாய்ப்பை இழந்து புதிய ஆட்சி பொறுப்பேற்றபோது, புதிய ஆட்சிக்கு பொறுப்பேற்றிருப்பவர்களுக்கு நான் வாழ்த்து சொன்னேன். நீங்கள் அந்த அறிக்கையைப் படித்திருப்பீர்கள். அதில், புதிதாக ஆட்சிக்கு வந்திருப்பவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்; ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: திராவிட மாடல் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றி இருக்கும் திட்டங்களை எல்லாம் நீங்கள் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தேன். நாம் வைத்திருக்கும் கோரிக்கை இன்றைக்கு அது எப்படி நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதை கண்கூடாகப் பார்க்கிறோம். அதனால்தான் சொன்னேன், நாம்தான் இன்றைக்கும் ஆட்சியில் இருக்கிறோம்.

நான் தேர்தல் நேரத்தில் சொன்னேன், இந்தத் திட்டம் இருக்கும் வரைக்கும், நான் பெண்களுக்கு – மாணவர்களுக்கு - மாணவிகளுக்குச் செய்திருக்கும் சாதனைகளை எல்லாம் யாராலும் மாற்றிட முடியாது. எனவே, அந்தத் திட்டம் நடக்கும் வரைக்கும் திராவிட ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்று நான் அப்போதே சொன்னேன். அதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை.

எனவே, இந்தத் தேர்தல் தோல்வியைப் பார்த்து, நான் சிதறிடவில்லை, மனச்சோர்வு அடைந்திடவில்லை.

234 தொகுதிகளிலும் இன்றைக்கு என்ன நிலை? எப்படி வெற்றி பெற்றிருக்கிறோம்? எப்படி வைத்து இருக்கிறோம்? என்ன காரணம் என்பது பற்றி ஆய்வு செய்வதற்காக, நாம் ஒரு குழுவை நியமித்திருக்கிறோம். அந்தக் குழு இன்று புறப்பட்டு, 234 தொகுதிகளிலும் ஆய்வு நடத்த இருக்கிறது.

அந்த ஆய்வின்போது, நம்மிடத்தில் என்ன குறை? நம்மிடத்தில் என்ன பிரச்சனை? மக்கள் என்ன நினைத்திருக்கிறார்கள்? எது விடுபட்டிருக்கிறது? ஏன் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம்? ஏன் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறோம்? ஏன் இந்தத் தொகுதியில் வெற்றி பெறவில்லை? என்பது பற்றி ஆய்வு செய்வதற்காக அந்தக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

அந்தக் குழு மட்டுமல்ல, "உடன்பிறப்பின் குரல்" என்று ஒரு வெப்சைட்-உம் ஆரம்பித்து இருக்கிறோம். அந்த வெப்சைட்டில், கழக அமைப்பைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல; பொதுமக்களும், அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களும் தங்களுடைய கருத்துக்களை வெளியிடலாம் என்று அந்த வெப்சைட்டை தொடங்கி இருக்கிறோம்.

எனவே, இந்தத் தேர்தலைப் பொறுத்தவரைக்கும் சொல்ல வேண்டும் என்றால், நம்முடைய கட்சி என்பது ஒரு கட்டமைப்பைக் கொண்டிருக்கும் கட்சி. எப்போது நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததோ, அப்போதே நாம் சட்டமன்றத் தேர்தல் பணியை தொடங்கி விட்டோம். பாக முகவர்கள்களை நியமித்தோம்; பூத் கமிட்டி அமைத்தோம்; "ஒன்றிணைவோம் வா" என்ற தலைப்பில் கழக உறுப்பினர்கள் சேர்க்கும் பணியைத் தொடங்கினோம்; SIR பணிகளை முடித்தோம். அதற்குப் பிறகு, இளைஞர் அணி மண்டல மாநாடு நடத்தினோம்; மகளிர் அணி மண்டல மாநாடு நடத்தினோம்; பாக முகவர்களை அழைத்து மண்டல மாநாடு நடத்தினோம்; ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமித்தோம்; மண்டல அளவில் பொறுப்பாளர்கள் அமைத்தோம். இவ்வளவு பணிகளையும் செய்து ஏன் நாம் ஆட்சிக்கு வர முடியவில்லை? ஆனால், எந்தப் பணியும் செய்யாமல், வாக்காளர்களைச் சந்திக்கவில்லை; பாக முகவர்கள் நியமிக்கவில்லை; இன்னும் சொல்ல வேண்டும் என்றால், கவுண்டிங் ஏஜென்ட் கூடப் பல இடங்களில் நியமிக்கவில்லை. அப்படிப்பட்டவர்கள் வெற்றி பெற்று இன்றைக்கு ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அது தவறல்ல.

ஆனால், அதில் என்ன நடந்திருக்கிறது? இன்ஸ்டாகிராம் எனும் சோசியல் மீடியாவைப் பயன்படுத்தி, மிகவும் சோகமாகச் சிறு பிள்ளைகளை, குழந்தைகளைப் பிரச்சாரம் செய்ய வைத்து, அவருடைய தாத்தா – பாட்டிகளை – அப்பா - அம்மாக்களை, அவர்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடத்தில் அந்த குழந்தைகள் மூலமாகப் பிரச்சாரங்களை நடத்தி, ஒரு திட்டமிட்ட பணி நடந்து முடிந்திருக்கிறது. அது நம்முடைய கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டது. ஆனால், இனிமேல் நாம் உஷாராக இருந்து அதையும் முறியடிக்கும் வகையில், திட்டங்களை எல்லாம் தீட்டி இருக்கிறோம்.

எனவே, நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய கழகம் இருக்கிறது; நம்முடைய இயக்கம் இருக்கிறது; நாங்கள் இருக்கிறோம். எதைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. மீண்டும் நாம்தான் ஆட்சிக்கு வருவோம், வருவோம் என்ற நம்பிக்கையோடு பணியாற்றுங்கள்.

எனக்கு இருக்கும் கவலை எல்லாம், இந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்களைத் தொடர்ந்து, இன்னும் ஐந்து ஆண்டுகள் அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் இன்னும் பல பணிகள் நிறைவேற்றி இருப்போம். அது தடைபட்டிருக்கிறது.

நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும், இன்றைக்கு மக்களிடத்தில் நாம் போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை உரிமையோடு எடுத்துச் சொல்லும் வகையில், நம்முடைய கடமையை ஆற்றுவோம், ஆற்றுவோம் என்று எடுத்துச் சொல்லி,

இன்றைக்கு மணக்கோலம் கொண்டிருக்கும் மணமக்களை, நான் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புவது, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லி இருக்கும் "வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொண்டர்களாய்" நீங்கள் வாழுங்கள், வாழுங்கள், வாழுங்கள் என்று சொல்லி, உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள் என்று கேட்டு விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

இவ்வாறு அவர் உரையாற்றினர்.

banner

Related Stories

Related Stories