தமிழ்நாடு

“காதலிக்கு பரிசு கொடுக்க ஆடுகளை திருடிய த.வெ.க பிரமுகர்” : வழக்குப் பதிவு செய்தாத காவல்துறை!

காதலிக்கு பரிசு கொடுக்க ஆடுகளை திருடிய த.வெ.க- வை சேர்ந்த வாலிபரை பொது மக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

“காதலிக்கு பரிசு கொடுக்க ஆடுகளை திருடிய த.வெ.க பிரமுகர்” : வழக்குப் பதிவு செய்தாத காவல்துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மணி. இவருக்குச் சொந்தமான 10 ஆடுகளை, இன்று அதிகாலை அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்பவரும் ஒரு சிறுவனும் இணைந்து திருடிச் சென்றுள்ளனர்.ஆடுகள் அடைக்கப்பட்டிருந்த பட்டிக்கு அருகே இருந்த நாய்கள் தொடர்ந்து குரைத்ததால், சத்தம் கேட்டு மணி மற்றும் அவ்வூர் மக்கள் விழித்துக் கொண்டனர்.

உடனே அவர்கள் ஒன்றிணைந்து, ஆடுகளைத் திருடிக்கொண்டு தப்பியோட முயன்ற தனுஷ் உள்ளிட்ட இருவரையும் விரட்டிப் பிடித்தனர்.இது குறித்து ஓமலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், செங்கானூரைச் சேர்ந்த தனுஷ் தனது காதலிக்குப் பரிசுப் பொருட்கள் வாங்கித் தருவதற்காக ஆடுகளைத் திருடியது அம்பலமானது.மேலும், பொதுமக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட தனுஷ், தவெக சேர்ந்தவர் என்பதும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக வேட்பாளருக்கு ஆதரவாகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் ஓமலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், கடத்தலுக்குப் பயன்படுத்திய மொபட்டைப் பறிமுதல் செய்தனர். இருப்பினும், ஆடுகளைத் திருடிய தவெக பிரமுகர் தனுஷ் மீது வழக்குப் பதிவு செய்யாமல், போலீசார் அவரை எச்சரித்து மட்டும் அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

ஆடுகள் திருடப்படுவதைப் பொதுமக்களே நேரில் பார்த்து, சம்பந்தப்பட்ட நபர்களைப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்திருந்தனர். இருப்பினும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல், தவெகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரின் பரிந்துரையின் பேரில் போலீசார் அவர்களை விடுவித்ததாகக் கூறப்படுகிறது.

அப்பகுதியில் ஏற்கனவே 15-க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போயுள்ள நிலையில், இன்று காலை ஆடு திருடியவரை ஆதாரத்துடன் பிடித்துக் கொடுத்தும் வழக்குப் பதிவு செய்யாமல் போலீசார் எச்சரித்து அனுப்பிய சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories