
சென்னை புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் எட்வின் ஜார்ஜ். பட்டதாரியான இவர், சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். திருமணமான இவரை விட்டு அவரது மனைவி பிரிந்துவிட்ட நிலையில், எட்வின் ஜார்ஜ் தனது தந்தையுடன் வசித்து வருகிறார்.
தங்களுக்குள் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, இவருடைய தாய் குளத்தூரில் தனியாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.எட்வின் ஜார்ஜ் வ.உ.சி. நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் வசித்து வருகிறார்.
இவர் தனது வீட்டின் பால்கனியில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையரின் தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.அத்தகவலின் அடிப்படையில் போலீசார் எட்வின் ஜார்ஜின் வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தினர்.
அவரைப் பால்கனிக்கு அழைத்துச் சென்று, "இது என்ன செடி?" என்று கேட்டபோது, "இது கஞ்சா செடிதான்" என அவர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். மேலும், "இதை வளர்ப்பதால் என்ன தப்பு? நான் சாமி கும்பிடத்தான் இதை வளர்த்து வருகிறேன்; தினந்தோறும் இந்தச் செடிக்கு நான் பூஜையும் செய்வேன்" என்று அவர் கூறியதைக் கேட்டு போலீசார் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
அதன் பின்னர், போலீசார் அவரது வீட்டைச் சோதனையிட்டபோது அங்கிருந்த ஊர்க்காவல் படை சீருடையைக் கண்டெடுத்தனர். இதுகுறித்து நடத்திய விசாரணையில், அவர் ஊர்க்காவல் படையிலும் பணிபுரிந்து வருவது தெரியவந்தது.
மேலும், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே. நகர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்திற்காக அவர் வேலை செய்ததாகவும், அதன் அடையாளமாகவே தனது வீட்டில் கட்சிப் கொடியை வைத்துள்ளதாகவும் எட்வின் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பால்கனியில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடியைப் பறிமுதல் செய்த போலீசார், எட்வின் ஜார்ஜைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளாரா அல்லது கஞ்சா வியாபாரிகளுடன் ஏதேனும் தொடர்பு வைத்துள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
"போதையில்லா தமிழகத்தை" உருவாக்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ஆர்.கே. நகர் தொகுதியில் அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவரே வீட்டின் பால்கனியில் கஞ்சா செடி வளர்த்து, பூஜித்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






