தமிழ்நாடு

“குதிரை பேரம் குறித்து முதல்வர் விஜய் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?” : திமுக எம்.பி வில்சன் காட்டம் !

“எதார்த்தத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால் பெரும்பான்மைக்கு தேவையான 118 வாக்குகளை பெற்று, நூலிழையில் தமிழக வெற்றிக் கழக அரசு தப்பிப்பிழைத்துள்ளது” என திமுக எம்.பி வில்சன் விமர்சித்துள்ளார்.

“குதிரை பேரம் குறித்து முதல்வர் விஜய் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?” : திமுக எம்.பி வில்சன் காட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தவெக அரசுக்கு பணத்திற்காகவோ அல்லது ஆதாயத்திற்காகவோ 26 உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்தது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட உறுப்பினர்களை அவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யவோ அல்லது வெளியேற்றவோ நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் என கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், “எதார்த்தத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால் பெரும்பான்மைக்கு தேவையான 118 வாக்குகளை பெற்று, நூலிழையில் தமிழக வெற்றிக் கழக அரசு தப்பிப்பிழைத்துள்ளது” என திமுக எம்.பி வில்சன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து திமுக எம்.பி வில்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 144 வாக்குகள் பெற்றதாக கூறப்படுவது சட்டப்படி தவறான கூற்றாகும். 118 (144-26) என்பது மட்டுமே சரி.. (25 அஇஅதிமுக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு அமமுக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு ) சட்டமன்றத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும், தங்களது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, அமைச்சர் பதவிகள் மற்றும் வாரியப் பதவிகள் தருவதாகக் கூறி தவெக வினர் அணுகியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் தமது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக வாக்களிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின் பத்தாவது அட்டவணையின் பிரிவு 2(b)-ன் கீழ் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களின் உத்தரவு ஒரு தெளிவான ஆணையாக கருதப்படுகிறது. ஊடகச் செய்திகளின் அடிப்படையில் பார்க்கும் போது, இது அவர் தரப்பிற்கு ஒரு வலுவான ஆதாரமாக உள்ளது. சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் உரையாற்றி முடித்த பிறகு, சட்டப்பேரவைத் தலைவர் அவர்கள் அதிமுகவின் அதிருப்திக் குழுவைச் சேர்ந்த திரு.எஸ்.பி.வேலுமணி அவர்களைப் பேசுவதற்கு அனுமதித்துள்ளார். மேலும், எஸ்.பி.வேலுமணி அவர்கள் தலைமையிலான அந்த அதிருப்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குழு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவும் அவர் அனுமதி வழங்கியுள்ளார்.

“குதிரை பேரம் குறித்து முதல்வர் விஜய் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?” : திமுக எம்.பி வில்சன் காட்டம் !

இது தமிழ்நாடு சட்டமன்ற விதிகளை முற்றிலும் மீறும் செயலாகும். மேலும், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அவர்களும் தமது கட்சியின் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரான திரு.காமராஜ் அவர்களும் குதிரை பேரத்தில் ஈர்க்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சூழ்நிலையில், எதிர்கட்சித்தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் தேமுதிக வைச் சார்ந்த திருமதி.பிரேமலதா விஜய்காந்த் அவர்கள் உள்ளிட்ட எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியின் இந்த குதிரை பேரத்திற்கு எதிராகத் தங்கள் கடும் கண்டனங்களை சட்டமன்றத்தில் பதிவு செய்துள்ளனர். ஆளும் கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை.

பிரதான எதிர்கட்சியினர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் உள்ளிட்ட அனைவரும் ஒண்றினைந்து, திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் தலைமையிலான அதிமுக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களும், அமமுகவின் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் கட்சிப் பொதுச்செயலாளர்களின் உத்தரவுகளைப் பின்பற்றாமலும், தார்மீக அடிப்படையில் இல்லாமலும் தங்களின் தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவும் பணப் பயன்களுக்காகவும் ஆளும் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அவர்கள் சட்டமன்ற விதிகளை முறையாகப் பின்பற்றியிருக்க வேண்டும்.. இவ்வளவு அவசரமாக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியிருக்கக்கூடாது என்பதே சரியான நிலைப்பாடாகும்.

குற்றச்சாட்டுகளை முன்வைத்த உறுப்பினர்களுக்கு அவற்றை நிரூபிக்க சபாநாயகர் போதிய கால அவகாசம் வழங்கியிருக்க வேண்டும். மேலும், கட்சித் தலைமைக்கு எதிராகச் செயல்படும் அந்த அதிருப்தியாளர்கள், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதித்திருக்கக் கூடாது என்பதே சட்ட ரீதியான வாதமாகும். மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அவர்கள் இந்த விதியைக் கண்டிப்பாகப் பின்பற்றியிருக்க வேண்டும்.. சட்டப்பேரவைத் தலைவர் அவர்களின் இந்த முடிவும், அதிருப்தி உறுப்பினர்களின் வாக்குகளும் முறையான ஆதாரங்களுடன் ஆளுநரிடமோ அல்லது நீதிமன்றத்திலோ முன்வைக்கப்பட்டால், அந்த 26 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்பட்டு, அவை செல்லாததாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

“குதிரை பேரம் குறித்து முதல்வர் விஜய் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?” : திமுக எம்.பி வில்சன் காட்டம் !

சட்டப்பேரவைத் தலைவர் அவர்கள் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளைக் கருத்தில் கொண்டு, குதிரை பேரம் குறித்த புகார்களை விசாரிக்க ஒரு குழுவை நியமித்திருக்க வேண்டும். மாண்புமிகு முதலமைச்சர் ச.ஜேசப் விஜய் அவர்கள், சட்டமன்ற அவையில் திரு. எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுக்கவோ அல்லது அவற்றுக்கு விளக்கம் அளிக்கவோ முன்வராதது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது. இராஜாராம் பால் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, இத்தகைய விவகாரங்களை விசாரிக்க ஒரு குழுவை அமைப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.

இத்தகைய விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, இந்த 26 உறுப்பினர்கள் பணத்திற்காகவோ அல்லது ஆதாயத்திற்காகவோ கட்சி மாறி வாக்களித்தது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட உறுப்பினர்களை அவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யவோ அல்லது வெளியேற்றவோ வழிவகுக்கும். இருப்பினும், எதார்த்தம் என்னவென்றால், திமுகவின் கூட்டணிக் கட்சிகள் உதவியால் பெரும்பான்மைக்குத் தேவையான 118 வாக்குகளைப் பெற்று நூலிழையில் தமிழக வெற்றிக் கழக அரசு தப்பிப்பிழைத்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories