
முரசொலி தலையங்கம்
14.05.2026
எதிர்க்கட்சித் தலைவரின் எழுச்சி உரை!
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகர், துணை சபாநாயகரை வாழ்த்தி, சட்டப்பேரவையில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க எழுச்சி உரையாகவே அமைந்திருந்தது. பெரும்பாலும் புதிய உறுப்பினர்கள் நிறையப் பேர் அவைக்குள் வந்திருப்பதால் இந்த உரை அவர்களுக்கு எடுத்த சட்டசபைப் பாடமாகவும் அமைந்திருந்தது. அன்றைய சென்னை மாகாணத்துக்கு 1920 ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்தல் நடந்தது. அதில் திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஆட்சி அமைத்தது.
நீதிக்கட்சியின் நீட்சியாக தந்தை பெரியார் அவர்களால் திராவிடர் கழகம் என்ற சமூக சீர்திருத்த அமைப்பு உருவானது. அந்தச் சமூக சீர்திருத்தக் கருத்துகளை நடைமுறைப்படுத்த திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை பேரறிஞர் அண்ணா உருவாக்கி, 1967 ஆம் ஆண்டு முதன்முதலாக கழகத்தை ஆட்சியில் அமர்த்தினார். ஐந்து முறை திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்தி நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியாகத் திகழ்ந்தார் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள். ஆறாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி, இந்தியாவே வியந்து பார்க்கும் திராவிட மாடல் ஆட்சியைக் கொடுத்தார் திராவிட நாயகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.
இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை மக்கள் வழங்கவில்லை. தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது த.வெ.க. இந்தச் சூழலில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தகுதியோடு சபைக்குள் சென்றுள்ளது தி.மு.க.
துணை முதலமைச்சராக இருந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி திராவிட மாடல் ஆட்சிக்கு பேரும் புகழும் ஏற்படுத்தித் தந்த மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து செயல்பட ஆணையிட்டுள்ளார் திராவிட நாயகன், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களின் போதும், இரண்டு சட்டமன்றத் தேர்தல்களின் போதும் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று, சுற்றிச் சுழன்று பணியாற்றியவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள். இளைஞரணிச் செயலாளராக இருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை கழகத்தை நோக்கி ஈர்த்தது மட்டுமல்ல; அவர்களை, கொள்கை வார்ப்புகளாக வார்ப்பித்தவர் மாண்புமிகு உதயநிதி அவர்கள்.

ஆட்சித் தகுதி, கட்சித் தகுதி ஆகிய இரண்டு தகுதிகளோடு வளர்ந்த அவர், தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பெடுத்திருப்பது மிகச் சிறப்பு ஆகும். தமிழினத் தலைவர் கலைஞரும், திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து, அன்றைய ஆளும்கட்சியின் தவறுகளை தினந்தோறும் சுட்டிக் காட்டி சிம்ம சொப்பனமாக இருந்தவர்கள் என்பதுதான் வரலாறு. அத்தகைய வரலாற்றின் தொடர்ச்சி தான் நான் என்பதை முதல் நாள் ஆற்றிய உரையிலேயே மெய்ப்பித்துக் காட்டவிட்டார் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.
தனது முதல் உரையையே முத்திரை பதிக்கும் உரையாக ஆற்றி விட்டார் மாண்புமிகு உதயநிதி அவர்கள். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சியைத் தந்த மு.க.ஸ்டாலின் ஆகியோரை வணங்கித் தொடங்கினார். தன்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு நன்றி சொன்னார். தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்காளர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள் அத்தனை பேருக்கும் நன்றியைத் தெரிவித்து நெகிழ வைத்தார் மாண்புமிகு உதயநிதி அவர்கள்.
இறுக்கமான சூழலை உடைக்கும் வகையில் மாண்புமிகு உதயநிதி அவர்களின் பேச்சு அமைந்திருந்தது. முதலமைச்சர் விஜயும், பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.சி.டி.பிரபாகரனும், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதி அவர்களும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். இதனை சுட்டிக் காட்டிப் பேசினார் மாண்புமிகு உதயநிதி.
“ஒரே கல்லூரியில் நாம் படித்திருந்தாலும் அரசாங்கத்தை நடத்துவதில் தி.மு.க. தான் சீனியர் பேட்ச். அது உங்களுக்குத் தெரியும். 1967-லேயே ஆட்சிக்கு வந்தது தி.மு.க. நாங்கள்தான் சீனியர்ஸ். அந்த அடிப்படையில் எங்களின் அறிவையும் அனுபவத்தையும் நாங்கள் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்று சொன்னதை பேரவையே ரசித்தது. முதலமைச்சர் விஜய் அப்போதுதான் சிரித்தார். “திராவிட முன்னேற்றக் கழகம் இந்தச் சட்டப் பேரவையில் எதிரிக் கட்சியாக இல்லாமல், ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நிச்சயம் செயல்படும். எங்கள் தலைவர் அவர்கள் சொன்ன மாதிரி, திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்குமே ஒரு ஆக்க சக்திதான்” என்பதை ஆணித்தரமாகச் சொன்னார் மாண்புமிகு உதயநிதி அவர்கள். அதே நேரத்தில் பலவீனமான ஆளும்கட்சி நீங்கள்என்பதையும் அழுத்தமாகச் சொன்னார் மாண்புமிகு உதயநிதி அவர்கள்.
அமைச்சரவைப் பொறுப்பேற்ற அன்று, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இதனைச் சுட்டிக் காட்டி கடுமையான கண்டனத்தை பதிவு செய்யத் தவறவில்லை மாண்புமிகு உதயநிதி. பா.ஜ.க.வின் மரபுகளுக்கு நீங்கள் அடிபணியக் கூடாது என்பதை, புதிய அரசுக்கு புத்திமதியாகச் சொன்னார்.
“நடந்து முடிந்த தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை ஆளுங்கட்சிக்கு மக்கள் வழங்காமல் போனாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தேர்தலைச் சந்தித்து வென்ற தோழமை இயக்க சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கக்கூடிய புதிய அரசிற்கும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்ற வார்த்தைகளில் மாண்புமிகு உதயநிதி அவர்களின் நுட்பமான ஆளுமைத் திறன் வெளிப்பட்டது.ஆளும்கட்சியினருக்கு கோபம் ஏற்படுத்தாத சொற்களால், உண்மையை உடைத்துச் சொல்லி அதனை அவைக் குறிப்பில் ஏற்றி விட்டார் மாண்புமிகு உதயநிதி.
“வெல்க தமிழ், வாழ்க தமிழ்நாடு! மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்” என்று தனது உரையை நிறைவு செய்துள்ளார் மாண்புமிகு உதயநிதி. திராவிட முன்னேற்றக் கழகம் தனது கொள்கை முழக்கத்தை எப்போதும் கைவிடாது என்பதற்கான எடுத்துக்காட்டாக எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு உதயநிதி அவர்களின் உரை அமைந்திருந்தது.






