முரசொலி தலையங்கம்

”நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் 7 சாபங்கள்.. பொருளாதார அவசர நிலையா?” - முரசொலி தலையங்கம் கேள்வி!

பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு தனது 7 கோரிக்கைகளை கூறி நாட்டின் நலனுக்காக என தெரிவித்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளார் என முரசொலி விமர்சித்துள்ளது.

”நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் 7 சாபங்கள்.. பொருளாதார அவசர நிலையா?” - முரசொலி தலையங்கம் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

முரசொலி தலையங்கம்!

13.05.2026

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு ஏழு சாபங்களை விடுத்துள்ளார்.

1.முடிந்தவரையில் வீட்டில் இருந்தே வேலை பாருங்கள்.

2. திருமணத்துக்கு தங்கம் வாங்க வேண்டாம்.

3. பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். மின் வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும்.

4. சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும். 5. யூரியா போன்றவற்றைத் தவிருங்கள். இயற்கை விவசாயத்துக்குத் திரும்புங்கள்.

6. வெளிநாட்டுப் பொருட்களை தவிருங்கள். உள்நாட்டு உற்பத்தியை அதிகரியுங்கள்.

7. ஓராண்டுக்கு வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்ல வேண்டாம்.

இதுதான் பிரதமரின் சாபங்கள். அதாவது, 'நாடு பல பிரச்சினைகளில் மாட்டப் போகிறது. என்னால் எதுவும் செய்ய முடியாது. எல்லாவற்றையும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்' என்கிறார் பிரதமர்.

அப்படியானால் இந்தியா அனைத்திலும் வளர்ந்து விட்டது என்று பீற்றிக் கொண்டது எல்லாம் சும்மாவா? இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பொருளாதாரமாக உள்ளது என்று சொன்னாரே? உலகின் ஐந்தாவது பொருளாதார நாட்டால் இப்போதைய பிரச்சினையை தற்காலிகமாகக் கூட தீர்க்க முடியாதா?

உலகளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவப்பட்ட திறனில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாகச் சொல்லப்பட்டது. அதனை வைத்துச் சரி செய்ய முடியவில்லையா?

"25 ஆண்டுகளில் உலகம் பல ஏற்றத்தாழ்வுகளைக் கண்டுள்ளது. ஆனால் இந்தியா ஒரு தனிப்பட்ட நிலைப்பாட்டில் காணப்படுகிறது. உலகம் மந்த நிலையைப் பற்றிப் பேசும் போது இந்தியா வளர்ச்சியின் கதையை எழுதுகிறது” என்று கடந்த ஆண்டு சொன்னாரே பிரதமர்! வளர்ச்சியின் கதையை எழுதும் பிரதமர், எதற்காக இப்போது சோக கீதம் பாடுகிறார்?

75 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இந்தியாவை வளர்த்துவிட்டதாகச் சொன்னவர், இப்போது மக்கள் தலையில் அனைத்துச் சுமைகளையும் தூக்கி வைப்பது ஏன்?

”நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் 7 சாபங்கள்.. பொருளாதார அவசர நிலையா?” - முரசொலி தலையங்கம் கேள்வி!

ஈரான் - அமெரிக்கா போர் மீண்டும் வெடிக்கலாம் என்ற பீதியை மீண்டும் கிளப்புகிறார்கள். போர் ஓய்ந்திருந்தாலும் ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் விதித்துள்ள தடை அப்படியேதான் இருக்கிறது. இதனால் எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பொருட்கள் மட்டுமின்றி யூரியா முதலான விவசாய இடுபொருட்கள் இந்தியாவுக்குக் கிடைப்பதிலும் மிகப்பெரிய நெருக்கடி எழுந்துள்ளது. இதனைச் சமாளிக்க இதுவரை பிரதமர் என்ன செய்தார்?

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவு, பொருளாதாரப் பாதிப்பைக் குறைக்க இதனைச் செய்ய வேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளார் பிரதமர். தங்கம் அதிக அளவில் வாங்குவது இந்தியப் பொருளாதாரத் தைப் பாதிக்கும் என்றும், ரூபாய் மதிப்பை சரிவடையச் செய்யும் என்றும் அவர் கருதுகிறார். தங்கம் இறக்குமதிக்காகச் செலவிடப்படும் அந்நியச் செலாவணியைக் குறைத்து, போரினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க இந்த நடவடிக்கை உதவும் என்று அவர் நினைக்கிறார். தங்கம் வாங்கு வதை ஓராண்டு காலத்துக்கு மொத்தமாக நிறுத்தினால் 72 பில்லியன் டாலர்கள் (6.85 லட்சம் கோடி) சேமிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

“பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு விடுத்திருக்கும் வேண்டுகோள், இந்தியாவில் பொருளாதார அவசரநிலை பிறப்பிக்கப்படுமா? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் சொல்லி இருக்கிறார். அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 360, நாட்டில் பொருளாதார அவசர நிலையைப் ( financial emergency) பிறப்பிக்கும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது. அதனைச் சுட்டிக் காட்டி தனது ஐயத்தைக் கிளப்பி இருக்கிறார்.

“இந்தியாவின் அல்லது அதன் ஆட்சிப்பகுதியின் ஏதேனும் ஒரு பகுதியின் நீதி நிலைத்தன்மைக்கோ அல்லது கடன் நிலைக்கோ அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான ஒரு சூழல் உருவாகியுள்ளது என்று குடியரசுத் தலைவர் திருப்தியடைந்தால், அவர் ஒரு பிரகடனத்தின் மூலம் அத்தகைய அறிவிப்பை வெளியிடலாம்." என அந்த உறுப்பு கூறுகிறது. இதன் படி மாநி லங்களின் செயல்பாட்டையே கட்டுப்படுத்தி விடுவார்கள். ஒன்றிய மாநில அரசுகளின் ஊழியர்களது ஊதியத்தைக் குறைக்கவும் அது அதிகாரமளிக் கிறது. பொருளாதார அவசரநிலை பிறப்பிக்கப்பட்டால் மாநில அரசுகள் பட்ஜெட்டுகளை நிறைவேற்ற முடியாது. அதைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்” என்று அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

வெளிநாட்டு நெருக்கடி என்று சொல்லி இந்தியாவில் பொருளாதார நெருக்கடி நிலையைப் பிறப்பித்து மாநிலங்களின் நிதி அதிகாரத்தைப் பறித்துத் தன் கையில் வைத்துக்கொள்ள நினைக்கிறார் பிரதமர் மோடி.

இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (CAD) 84.5 பில்லியன் டாலராக ( GDP யில் 2 விழுக்காடு ) அதிகரிக்கும் என்று ஐ.எம்.எஃப். கணித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 8 லட்சத்து 4 ஆயிரத்து 77 கோடி நடப்புக் கணக்கு பற்றாக்குறை உள்ளது. இதனைத் தவிர்க்க ஒன்றிய பா.ஜ.க. அரசு என்ன செய்தது?

யாரும் வெளிநாடு போக வேண்டாம் என்று சொன்ன பிரதமர் அவர்கள், வரும் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 5 நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளப் போகிறார். ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே, இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் செல்ல இருக்கிறார்.

“நாம் அனைவரும் இணைந்துப் போராட வேண்டும். தேசபக்தி என்பது நாட்டுக்காக உயிரிழப்பது அல்ல. நாட்டுக்காக வாழ்ந்து அதற்காக ஒருவர் தன் கடமையை நிறைவேற்றுவதும் தேசபக்தி தான்" என்று பிரதமர் சொல்லி இருக்கிறார். ஒவ்வொரு மக்களும் பல்வேறு இழப்புகளை தாரை வார்த்துத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு மேல் நாட்டு மக்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் பிரதமர்?

banner

Related Stories

Related Stories