
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து இரண்டு நாட்களே ஆன நிலையில், கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் பரணி பாலாஜியின் பிறந்தநாள் விழா திருக்கோவிலூர் நகரின் முக்கிய பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள், சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி மாவட்டச் செயலாளருக்காகக் காத்திருந்தனர்.
அவர் வந்தவுடன், பல்வேறு இடங்களில் சாலையின் மையப்பகுதியிலேயே பட்டாசுகளை வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். உரிய முன் அனுமதி பெறாமல், சாலையின் நடுவே அதிக அளவில் நிர்வாகிகள் திரண்டதால், திருக்கோவிலூர் - திருவண்ணாமலை - விழுப்புரம் செல்லும் பிரதான சாலையான தென்பெண்ணை ஆற்றுப் பாலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
"மக்களின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் கிடையாது" எனத் க முதலமைச்சர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது தெரிவித்திருந்தார். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு நாட்களிலேயே, ஒரு மாவட்டச் செயலாளரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிர்வாகிகள் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முழுவதுமே இதேபோல்தான் த.வெ.க-வினர் பொதுமக்களுக்கு இடையூறுகளைச் செய்து வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் பல சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். 'இதுதான் அவர்கள் சொல்லும் மாற்றமா?' எனவும் மக்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.






