தமிழ்நாடு

'ஜனநாயகன்' தயாரிப்பாளருக்கு பதவி... மேகதாது விவகாரத்தில் குரல் கொடுப்பாரா? - திருச்சி சிவா கேள்வி!

'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

'ஜனநாயகன்' தயாரிப்பாளருக்கு பதவி... மேகதாது விவகாரத்தில் குரல் கொடுப்பாரா? - திருச்சி சிவா கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

த.வெ.க. ஆட்சி அமைத்த 40 நாள்களில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் கடத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பண மோசடி புகார்கள் என குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மேலும், பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்களின் பின்னணியில் த.வெ.க.வைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக வெளியாகும் தகவல்கள் பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இது ஒருபுறம் என்றால், முதலமைச்சர் விஜய்க்கு நெருக்கமானவர்களுக்கு தொடர்ந்து அரசின் உயர்பதவிகள் வழங்கப்படுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, முதலமைச்சர் விஜய்யின் நம்பிக்கைக்குரிய ஜோதிடரான ராதன் பண்டிட், தமிழக முதலமைச்சரின் சிறப்புப் பணி அதிகாரியாக (OSD) நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அவரது நியமனம் திரும்பப் பெறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, விஜய்யின் அரசியல் பிரிவு தனிச் செயலாளராக (Private Secretary) ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டார். அதேபோல், தற்போது தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கும் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

'ஜனநாயகன்' தயாரிப்பாளருக்கு பதவி... மேகதாது விவகாரத்தில் குரல் கொடுப்பாரா? - திருச்சி சிவா கேள்வி!

இந்நிலையில், இதுகுறித்து திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கர்நாடகாவைச் சேர்ந்தவரும், 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளருமான வெங்கட நாராயணாவை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்திருப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இதனால் எழும் முக்கியமான கேள்வி என்னவென்றால், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலனுக்காக அவர் உறுதியாக குரல் கொடுப்பாரா? என்பதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தனது அரசு ஒருபோதும் இடமளிக்காது என்று சட்டப்பேரவையிலேயே உறுதியாக தெரிவித்திருந்தார். அந்த அணை கட்டப்பட்டால், காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரே தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பதால், மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை அவர் உறுதியாக முன்னிறுத்துவாரா என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தெளிவான விளக்கத்தையும், மக்களுக்கு உரிய உறுதியையும் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதாக தனது பதிவில் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

மேலும் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா வெளியிள்ள பதிவில், தன்னுடன் ஆடிய ‘அரிதாரங்கள்’ சிலருக்கு சட்டமன்றம்-அமைச்சரவை ! முதலீட்டுப் ‘புள்ளிக்கு’ தில்லியில் பதவி! கொள்கை தலைவர்களுக்கு ‘சாதி’ சிறை ! அரசாணை இல்லாமலே அரசுக்குள் ‘அதிகாரத் தோழர்கள்’ இருட்டில் ‘இளிக்கும்’ வெளிப்படை நிர்வாகம்! நன்றாகவே மணக்கிறது “மாற்றம்” . நாசியை மூடப்போகிறோமா? நாற்றத்தை போக்கிடப்போறோமா? வாழ்க ஜனநாயக ‘ன்’ (ம்) !!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories