தமிழ்நாடு

“சட்டப்பேரவையில் இப்போதும் உடன்பிறப்புகள் உருவில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” : ப.திருமாவேலன்!

என்ன என் தம்பிமார்கள் சட்டசபைக்குள் செல்கின்றனர்.அவர்கள் உருவில் நான்? செல்கிறேன்

“சட்டப்பேரவையில் இப்போதும் உடன்பிறப்புகள் உருவில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” : ப.திருமாவேலன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

- இன்றைய முரசொலியில் ஊடகவியலாளர் ப.திருமாவேலன் எழுதிய கட்டுரை...

என்னையே நோக்கி, யான் இந்த நெடும்பகை தேடிக் கொண்டே...

இராமாயணத்தில் இராவணன் சொன்னதாக கவி கம்பன் வர்ணிக்கும் வரிகள் இன்றைய சூழலுக்கு பொருத்தமானவை...

முன்னையோர், இறந்தார் எல்லாம், இப்பகை முடிப்பர் என்றும், பின்னையோர், நின்றோர் எல்லாம், வென்றனர் பெயர்வர் என்றும், உன்னை, 'நீ அவரை வென்று தருதி' என்று உணர்ந்தும், அன்றால்; என்னையே நோக்கி, யான் இந்நெடும்பகை தேடிக் கொண்டேன்...

- என்பான் இராவணன். இந்திரஜித்தைப் பார்த்து இராவணன் சொல்வதாக இப்பாட்டு வருகிறது.

"களத்தில் போரிட்டு ஏற்கனவே இறந்து போனவர்கள் இந்தப் பகையை முடிப்பார்கள் என்று நினைத்தோ, இப்போது உயிருடன் இருக்கும் வீரர்கள் எதிரிகளை வென்று திரும்புவார்கள் என்று நினைத்தோ, நீ எதிரிகளை வீழ்த்துவாய் என்று நினைத்தோ நான் இல்லை. என்னை நம்பியே நான் இப்போரில் இறங்கினேன்" என்பது தான் இந்த வரியின் பொருள்.

“என்னை நம்பியே இப்போரில் இறங்கினேன்" என்ற சொல்லுக்கு இலக்கணமாக நம் முன்னே ஒரு முகம் தெரிகிறது. அதுதான் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் முகம்.

தேர்தலுக்கு முன் அவரோடு இருந்தவர்கள், தேர்தலுக்குப் பிறகு எதைச் சொல்லி என்ன முடிவு எடுத்தாலும் அவர் முகம் மாற வில்லை. அதே சிரித்த முகத்தோடு தான் இருக்கிறார். ஏனென்றால். அவர் தன்னை நம்பியே இப்போரில் இறங்கினார்.

தானே அலைந்தார். நேரகாலம் பார்க்காமல் அலைந்தார். எத்தனை ஊர்கள்? எத்தனை பொதுக்கூட்டங்கள். நடைபயணப் பரப்புரையை விடாமல் நடத்தினார். காலையில் நடந்தார். கடும்பகல் நடந்தார். மாலையில் நடந்தார். இரவிலும் நடந்தார் தன் கால்களால் களத்தைச் சீர் செய்தார். நேர் செய்தார். போர் செய்தார். தன்னை நம்பியே போர் செய்தார். இந்த யுத்தம் இழப்பை தந்திருக்கலாம். களம் காணாமல் போய்விடவில்லை என்பதை உணர்ந்த தலைவர் அவர்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட தினமே அறிவாலயம் வந்தார். காலையும் மாலையும் அறிவாலயம் வந்தார். வருத்தமான முகத்துடன் வந்தவர்களையும் சிரித்த முகத்தோடும் வரவேற்றார் தலைவர். இந்தப் பக்குவம் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலம். அறிவாலயம், நிலத்தில் நிற்கவில்லை. இந்த பலத்தில்தான் நிற்கிறது. தி.மு.க. இதுவரை தோல்வி அடைந்தது இல்லையா? தோற்றுள்ளது. ஆனால் இந்த 4. தோல்வி அதிக கவலை அளிப்பதாக இருப்பதற்கு என்ன காரணம்?

மதிப்பீடுகளுக்கு மரியாதை தரத் தெரியாதவர்களாக மக்களில் சிலர் வளர்கிறார்களே என்பதால்தான்.

"தோல்வி அடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" என்று கேட்டபோது, புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்கோவ் இப்படி விளக்கினார்: "எந்த சமூகத்தில் அற்பமானவை பெரும் தலைப்புகளாக மாற்றப்படுகிறதோ, நல்லுணர்வு சிந்தனைகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவையாகத் தள்ளி வைக்கப்படுகின்றனவோ, எந்தச் சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகமாகும்” என்று சொன்னார் அவர். நாம் இதனை காலத்தின் தோல்வியாக நினைப்பதால்தான் கலங்க வேண்டி உள்ளது.

“சட்டப்பேரவையில் இப்போதும் உடன்பிறப்புகள் உருவில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” : ப.திருமாவேலன்!

இப்படியும் ஒரு காலம் முன்பு இருந்தது. அதனை மாற்றித் தான் திராவிடப் பேரியக்கம் எழுந்தது. அதையே மீண்டும் செய்தாக வேண்டும்.

கொளத்தூரில் தலைவர் வெற்றி பெற முடியாமல் போனதுதான் ஆட்சிக்கு வராமல் போனதை விட அதிக வேதனையைத் தருகிறது. மறுநாள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூருக்கு போன போது மக்கள் கடலில் அல்ல, கண்ணீர் கடலில்தான் நீந்தினார். ஒரு வர் தோல்விக்கு, ஒரு நாடு அழுததை இப்போதுதான் பார்க்கிறோம். சமூக ஊடகங்களில் அழுதபடியே பலரும் கதறினார்கள். கண்ணீர் அபிஷேகம் தான் தலைவருக்கு கிடைத்த போற்றுதல்கள் ஆகும்.

காஞ்சியில் பேரறிஞர் அண்ணாவே தோற்றார். "புனித ஜெருசலத்துக்காக ஐரோப்பிய நாடுகள் போரிட்டன. ஐரோப்பிய படைக்குத் தலைமை வகித்த 'ரிச்சர்ட் மன்னன் உள்ளே வரக்கூடாது. மற்றவர்கள் வரலாம்' என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. 'நான் உள்ளே போகாவிட்டால் என்ன? என் படைகள் உள்ளே போகிறது' என்றான் மன்னன். அது போல என்னை சட்டசபைக்குள் நுழைய விடவில்லை. அதனால் என்ன என் தம்பிமார்கள் சட்டசபைக்குள் செல்கின்றனர்.அவர்கள் உருவில் நான் ம்? செல்கிறேன்" என்று எழுதினார்.

இப்போதும் உடன்பிறப்புகள் உருவில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான் உள்ளே செல்கிறார்! அவர்கள் யாரை நம்பி உள்ளே செல்கிறார்கள்? தன் தலைவரை நம்பியே பேரவைக்குள் செல்கிறார்கள்! பேரவைகள் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு போர் அவைகளே.

banner

Related Stories

Related Stories