முரசொலி தலையங்கம்

“தி.மு.க. கூட்டணி கட்சிகள் தயவோடுதான் புதிய ஆட்சி” : விஜய்க்கு நினைவூட்டிய முரசொலி!

கல்லாப்பெட்டி கட்சிகளின் அலுவலகத்துக்கு விஜய் ஏன் போனார்? ஏன் முகத்தை தொங்கப் போட்டுச் சென்றார்? முகத்தை தொங்கப் போட்டு உட்கார்ந்து இருந்தார்?

“தி.மு.க. கூட்டணி கட்சிகள் தயவோடுதான் புதிய ஆட்சி” : விஜய்க்கு நினைவூட்டிய முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (11.05.2026)

என்ன பேச்செல்லாம் பேசினார் விஜய்?

தி.மு.க. கூட்டணியைக் கல்லாப்பெட்டி கூட்டணி என்றார் விஜய். அந்தக் கட்சிகள் தயவோடுதான் ஆட்சி அமைத்துள்ளார் விஜய்.

அறிவாலயம் வாசல் வழியாக நடந்து போனாலே அந்தக் கட்சிகளை அழைத்து உள்ளே போட்டு சீட்டுக் கொடுத்து விடுவார்கள் என்று சொன்னார் விஜய். அவர்கள் தயவில்தான் இப்போது முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறார் விஜய் .

கல்லாப்பெட்டி கட்சிகளின் அலுவலகத்துக்கு விஜய் ஏன் போனார்? ஏன் முகத்தை தொங்கப் போட்டுச் சென்றார்? முகத்தை தொங்கப் போட்டு உட்கார்ந்து இருந்தார்?

காங்கிரஸ் கட்சியைப் பற்றி என்ன சொன்னார் விஜய்? ‘சில பல கோடிகளைக் கொடுத்து தமிழ்நாடு காங்கிரஸை, ஸ்டாலின் தனது பைக்குள் போட்டுக்கிட்டார்’ என்று பேசினார். இன்று சில பல கோடிகள் கொடுத்துத்தான் காங்கிரஸ், ஆதரவைப் பெற்றாரா விஜய்? பிரவீன் சக்கரவர்த்தி போன்ற விஷப்பூச்சிகள் நிரம்பிய காங்கிரஸ் கட்சிக்கு விஜய் என்ன கொடுத்தார்? மூன்றாவது நாளே அந்தக் கட்சி பனையூரில் பெட்டிப் பாம்பாக அடங்கியதற்கு விஜய் என்ன கொடுத்தார்?

‘சில பல கோடிகள் கொடுத்து காங்கிரஸ் கட்சியை, ஸ்டாலின் தனது பைக்குள் போட்டுக்கிட்டார்’ என்று சொன்னதை யாரும் ராகுலுக்கு மொழிபெயர்த்துச் சொல்லவில்லையா? அவருக்கு ரோஷம் வரவில்லையா? ஆச்சர்யமாக இருக்கிறதே?

த.வெ.க. ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மையை பெற்றுள்ளதா? இல்லையே? ரோஷக்கார விஜய், பதவிக்கு வந்திருக்கக் கூடாதே? பதவி ஏற்றிருக்கக் கூடாதே?

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் வெற்றி பெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சி ஆகிய கட்சிகளின் தயவோடுதான் விஜய் ஆட்சி அமைத்துள்ளார்.

அந்தக் கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையை வாங்கிப் பாருங்கள் விஜய். உங்களை ஆதரித்து, உங்கள் தலைமையை ஏற்றுக் கொண்டு அவர்கள் உங்கள் ஆட்சியை ஆதரிக்கவில்லை. தமிழ்நாட்டில் இன்னொரு தேர்தல் வரக்கூடாது, ஆளுநர் ஆட்சி வரக்கூடாது, குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதால் த.வெ.க. ஆட்சி அமைக்க ஆதரவு என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். விஜய் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் ஆதரிக்கவில்லை. இதை விஜய் முதலில் உணர வேண்டும்.

‘‘தமிழ்நாடு அரசியலில் நீண்ட காலமாகவே தி.மு.க. கூட்டணி யில் இருந்து வரும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதே நிலையில் தொடரும்” என்று தான் அய்யா காதர் மொய்தீன் சொல்லி இருக்கிறார்கள். ‘‘தி.மு.க. கூட்டணியில்தான் விடுதலைச் சிறுத்தைகள் நீடிக்கிறது. நெருக்கடியான சூழலில் குடியரசுத் தலைவர் ஆட்சியைத் தடுக்கவே த.வெ.க.வுக்கு ஆதரவு தர முன்வந்தோம்” என்று சொல்லி இருக்கிறார் தொல்.திருமாவளவன்.

“தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியுடன் கை கோத்துப் போராடுவோம்’’ என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகமும் அறிவித்துள்ளார்கள். எனவே தி.மு.க. கூட்டணியில் தொடரும் கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சி அமைத்துள்ளார் விஜய். இதனை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

“தி.மு.க. கூட்டணி கட்சிகள் தயவோடுதான் புதிய ஆட்சி” : விஜய்க்கு நினைவூட்டிய முரசொலி!

‘’அது என்ன ஸ்டாலின் சார் கூட்டணி பேரு? ... என்ன மக்கள் நலக் கூட்டணியா? மொத்த பேக்கேஸும் அங்க தான இருக்குது. ரிசல்ட் என்னன்னு தெரிஞ்சதுனால என்னவோ அவர் அப்படியே மக்கள் நலக் கூட்டணியா அதை மாத்திக்கிட்டாரோன்னு தெரியலை. உடைஞ்ச கிளாஸை ஒட்ட வெச்சது மாதிரி, கிழிஞ்ச துணியை தச்சு வெச்சது மாதிரி. ஒட்டுப் போட்ட ஒரு கூட்டணி. அவ்வளவு தான்.” என்று பேசியவரும் இதே விஜய்தான். அவரது ஆட்சியே இன்று உடைஞ்ச கிளாஸை ஒட்ட வைத்தது மாதிரிதான் அமைந்துள்ளது. கிழிஞ்ச துணியை தச்சு வெச்ச மாதிரிதான் இருக்கிறது.

இந்த உடைஞ்ச கிளாஸையாவது ஒழுங்காக பயன்படுத்தவும். கிழிஞ்ச துணியை வைத்தாவது தமிழ்நாட்டு மானத்தை காப்பாற்றவும்.

பதவிக்கு வந்த பிறகு மட்டுமல்ல, பதவிக்கு வருவதற்கு முன், பொதுவாழ்க்கைக்கு வருவதற்கு முன்னும் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும். தீயினால் சுட்ட வடுகூட ஆறிவிடும். நாவினால் சுட்ட வடு மாறாது. ‘பல வலிகளைத் தாண்டி வந்துள்ளேன்’ என்கிறார் விஜய். இல்லை, பலரையும் வலி ஏற்படுத்திவிட்டு வந்திருக்கிறார் விஜய். அவரால் கரூரில் பலியான 41 உயிர்களை மறக்க முடியுமா? தமிழ்நாட்டு வரலாற்றில் கருப்பு நாட்களில் ஒன்று. அந்தக் குடும்பத்தினரைக் கூட நேரில் பார்க்காமல் சென்னை ஹோட்டலுக்கு வர வைத்து பார்த்த கொடூரக் காட்சி, சினிமாவில் கூட பார்க்காதது.

அரசியல் என்பது சினிமா அல்ல. கோடிக்கணக்கான மக்களை ஆள்வது அல்ல அரசியல். கோடிக்கணக்கான மக்களுக்காக வாழ்வதுதான் அரசியல்.

ஒரு ஹீரோவின் ஆட்டத்தை மக்கள் பார்ப்பது சினிமா. கோடிக்கணக்கான மக்களின் ஆட்டத்தை ஒரு தலைவன் பார்ப்பது அரசியல். வேடிக்கை காட்டி வாழ்ந்துவிட முடியாது. வேடிக்கை பார்த்தும் ஆண்டு விட முடியாது என முரசொலி தனது தலையங்கத்தை நிறைவு செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories