தமிழ்நாடு

இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!

இஸ்லாமியச் சிறுமி ஒருவருக்கு, இந்து தம்பதியினரைச் சட்டப்பூர்வப் பாதுகாவலர்களாக நியமித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.

இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டின் மதநல்லிணக்கம் என்பது ரம்ஜானுக்குப் பிரியாணி பரிமாறுவதும், தீப ஒளித்திருநாளில் இனிப்புகளை இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வழங்குவது மட்டுமன்று; வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு மாலை போடும் இந்துக்களும், சபரிமலைக்குச் செல்லும் கிறிஸ்தவர்களும், புனித யாத்திரை செல்லும் பிற மதத்தினருக்கு உணவளிக்கும் இஸ்லாமியர்களுமே தமிழ்நாட்டின் அடையாளங்கள்.

இதற்கு மற்றுமொரு சிறந்த எடுத்துக்காட்டு இதோ;-

மதுரையைச் சேர்ந்த பாலாஜி என்பவர், தான் தத்தெடுத்து வளர்க்கும் இஸ்லாமியச் சிறுமிக்குச் சட்டபூர்வப் பாதுகாவலராகத் தன்னை நியமிக்கக் கோரிய மனுவை நிராகரித்த மதுரை குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு வழங்கிய தீர்ப்பில்: 'மனுதாரருக்கு 2012-ஆம் ஆண்டு திருமணமாகிக் குழந்தை இல்லாத நிலையில், தத்தெடுக்க முடிவு செய்துள்ளனர். அருகில் வசித்து வந்தவருக்கு மூன்று குழந்தைகள் இருந்த நிலையில், வறுமையால் அனைத்துக் குழந்தைகளையும் பராமரிக்க முடியாத சூழலில், தனது மூன்றாவது பெண் குழந்தையை மனுதாரருக்கும் அவரது மனைவிக்கும் தத்து கொடுத்துள்ளார்.

மனுதாரர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்; குழந்தை இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர். குழந்தை பெண் என்பதாலும், தத்தெடுத்தவர்கள் இருவரும் அந்நியராக இருப்பதாலும் குடும்ப நல நீதிமன்றம் இதற்கு அனுமதி வழங்க மறுத்திருந்தது' எனக் குறிப்பிட்டனர்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, குழந்தையின் உயிரியல் தாய் குழந்தையைத் தத்துக் கொடுக்க முழுமையான சம்மதத்தை வழங்கியுள்ளார். குழந்தையும் மனுதாரரை 'அப்பா' என்றும், அவரது மனைவியை 'அம்மா' என்றும் அழைக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பற்றது.

எனவே, எந்த மதத்தைச் சேர்ந்தவரும் ஒரு சிறுமியின் பாதுகாவலராக நியமிக்கப்பட முடியும். குழந்தையின் நலனே மிக முக்கியமானது. இந்த வழக்கில் மேல்முறையீட்டாளரும் அவரது மனைவியும் குழந்தையை உண்மையான பாசத்துடன் வளர்த்து வருவதும், குழந்தையும் அவர்களைத் பெற்றோராக ஏற்றுக்கொண்டதும் உறுதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேல்முறையீட்டாளர் சட்டபூர்வப் பாதுகாவலராக நியமிக்கப்படுகிறார். மதுரை மாவட்டக் குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மத நல்லிணக்கம் பேணும் தமிழ்நாட்டின் மாண்பிற்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை சூட்டிய வைரக்கல்லாக இத்தீர்ப்பு ஜொலிக்கிறது என்றால் அது மிகையல்ல.

banner

Related Stories

Related Stories