
சென்னை கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த சாரு பிரபா என்பவர், இன்று தென்காசியில் இருந்து சென்னை நோக்கி வந்த பொதிகை அதிவிரைவு ரயிலில் பயணம் செய்தார். தாம்பரம் ரயில் நிலையத்தில் அவர் இறங்கிய பிறகு, தனது கையில் அணிந்திருந்த சுமார் 10 கிராம் எடையுள்ள வைரக் கற்கள் பதித்த தங்க வளையல் (மதிப்பு ரூ. 3,00,000) காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து உடனடியாக அடுத்த ரயிலில் எழும்பூர் நிலையத்திற்கு வந்த அவர், அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை துணை ஆய்வாளர்சுப்பாராவ் அவர்களிடம் புகார் அளித்தார். அந்தச் சமயம் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் எக்மோர் நிலையத்தின் 5-வது நடைமேடைக்கு வந்து சேர்ந்து, பின்னர் பராமரிப்புப் பணிக்காக யார்டிற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
உடனடியாகச் செயல்பட்ட துணை ஆய்வாளர், யார்டில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் குல்தீப் சிங்கிற்குத் தகவல் தெரிவித்தார். அவர் சம்பந்தப்பட்ட B3 பெட்டியில் தீவிரத் தேடுதல் நடத்தி, அங்கு விழுந்து கிடந்த வைர வளையலைப் பத்திரமாக மீட்டார்.
மீட்கப்பட்ட வளையல் ஆர்.பி.எஃப் அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டது. உரிய அடையாளங்களை உறுதி செய்த பின், உரிய ரசீதுடன் திருமதி. சாரு பிரபாவிடம் அந்த வளையல் ஒப்படைக்கப்பட்டது. தனது உடமையை விரைவாக மீட்டுக் கொடுத்த ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு அந்தப் பெண் பயணி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.






