
எல்லாவற்றிலும் வெற்றி, வெற்றி என்று சேர்த்துவிட்டால் வெற்றி பெற்று விட முடியாது. த.வெ.க. அரசின் முதல் ஆண்டு நிதிநிலை அறிக்கை, வெற்று அறிக்கையாகவே அமைந்துள்ளது.
படம் வெளியாவதற்கு முன்னால் அந்தப் படத்தில் ‘அது இருக்கிறது, இது இருக்கிறது’ என்று பலப்பல ‘பில்டப் பேட்டிகள்’ வெளியாகும். படம் வெளியானதும் பார்த்தால் அவர்கள் சொன்னது எதுவுமே இருக்காது. அப்படித்தான் இருக்கிறது நிதிநிலை அறிக்கை. அவர்களுக்குச் சொல்ல ஏதுமில்லை. சொல்லவும் இல்லை. அதனால் சொல்லிக் கொள்வது மாதிரி எதுவும் இல்லை.
‘கடன் வாங்கிவிட்டார்கள், கடன்தான் அதிகமாகிவிட்டது’ என்று முந்தைய ஆட்சியைக் குறை சொல்லிக் கத்தினார் விஜய். இன்று அவர் என்ன செய்கிறார்? அதே கடனைத் தான் வாங்கி வருகிறார். ‘’கடந்த முறை அரசின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியாக இருந்தது. இருப்பினும் மாநில வருவாய் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, கடன் வளர்ச்சி விகிதம் குறைவாகத்தான் உள்ளது.
ஒன்றிய அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் மாநில அரசால் கடன் பெற முடியும். எந்த மாநில அரசாக இருந்தாலும் கடன் வாங்கித் தான் செலவு செய்ய முடியும். வாங்கிய கடனை ஓரளவு திருப்பிச் செலுத்தி வருகிறோம். இருப்பினும், 50 ஆண்டுகள் ஆனாலும் இப்போதுள்ள கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது” என்று நிதித்துறைச் செயலாளர் எம்.ஏ.சித்திக் பேட்டி அளித்துள்ளார்.

இதற்கு முதலமைச்சர் விஜய் என்ன சொல்கிறார்?
‘அரசாங்கத்துக்கு வரவேண்டிய நிதியை சிலர் கொண்டு செல்கிறார்கள். அதைத் தடுத்தால் போதும்’ என்று களங்கம் கற்பித்தார் அன்றைய விஜய். அரசாங்கத்துக்கு வர வேண்டிய நிதியை அவர் கொண்டுவந்திருந்தால் இன்று, இப்போது, இவ்வளவு கடன் வாங்கும் நிலைமை வந்திருக்காதே? ஏன் அவரால் முடியவில்லை? ஏனென்றால் அன்று சொன்னது பொய். தி.மு.க. அரசாங்கத்தின்மீது களங்கம் கற்பிப்பதற்காக அப்போது வாய்க்கு வந்ததைச் சொன்னார்.
மே 10ஆம் தேதி விஜய், முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இன்னும் 3 மாதங்கள் கூட முழுமையாக முடியவில்லை. அதற்குள் ரூ.22 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். ‘கடன் அதிகமாகி விட்டது’ என்று சொன்ன விஜய், எங்கே போனார்? தூங்கி விட்டாரா?
‘இதோ இந்த நொடி முதல் எல்லாம் மாறப் போகிறது’ என்று பதவி ஏற்பு விழாவில் சொன்னார் விஜய். என்ன மாறி இருக்கிறது? ரூ.48 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை ரூ.55 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது தான் மாற்றமா?
முந்தைய தி.மு.க. ஆட்சியில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2.29 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது வரி வருவாய் ரூ.2.26 லட்சம் கோடியாகச் சரிந்துள்ளது. மேல்நோக்கிச் சென்றால் தான் மாற்றம். சென்றுள்ளதா விஜய் ஆட்சியில்?

‘’தமிழ்நாட்டை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சிகொண்ட மாநிலமாக மாற்றுவதே எனது இலக்கு ஆகும்” என்பது அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னது ஆகும். 2024–25 ஆம் நிதி ஆண்டில், திராவிட மாடல் ஆட்சியில் 11.19 விழுக்காடு வளர்ச்சியை தமிழ்நாடு கண்டது. இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்தது.
2025–26 ஆம் நிதி ஆண்டில் 10.83 விழுக்காட்டை தக்க வைத்து இரட்டை இலக்கச் சாதனையை இரண்டாவது முறையும் மெய்ப்பித்துக் காட்டினார் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு என்கிற சாதனையைச் செய்தார்கள். அதையே, ‘’அடுத்த பத்து ஆண்டுகளில் 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்று நிதிநிலை அறிக்கை சொல்கிறது.
இலக்கு நிர்ணயிக்கலாம். ஆனால் உண்மை என்ன? மூன்று மாதங்களாக தொழில்துறை சரிந்துவருகிறது. புதிதாக பொறுப்பேற்ற விஜய் அரசில், தமிழ்நாட்டின் தொழில் முதலீடுகள் சரியத் தொடங்கி இருப்பது Business standard என்ற தனியார் ஆய்வறிக்கை மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
முன்னணி ஆங்கில நாளிதழான Business Standard வெளியிட்டுள்ள செய்தியில், “கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் புதிய முதலமைச்சர்கள் பதவி யேற்றுள்ளார்கள். முதல் காலாண்டில் 4 மாநில தொழில் முதலீடு களில் தமிழ்நாடு பின்னடைவை சந்தித்துள்ளது. மற்ற 3 மாநிலங்களில் முன்மொழியப்பட்ட முதலீடுகள் கணிசமாக அதிகரித்துள்ளது” என்று சொல்லப்பட்டு உள்ளது.

திராவிட மாடல் ஆட்சியில், 26வது நிதியாண்டின் 4வது காலாண்டில், மொத்த தொழில் முதலீடு ரூ.76 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில், விஜய் ஆட்சியில் முதல் காலாண்டில், தமிழ்நாட்டு தொழில் முதலீட்டில் மைனஸ் ஆக குறைந்துள்ளது வெட்டவெளிச்சமாகி யுள்ளது. விஜய் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.
தமிழ்நாட்டை உயர்த்த வெற்றித் தமிழகம் – தொலை நோக்குத் திட்டங்களை உருவாக்கி இருப்பதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் சொல்கிறார். அத்தகைய தொலைநோக்குத் திட்டம் எதுவும் இந்த நிதி நிலை அறிக்கையில் இல்லை.
‘புதிய திட்டங்களுக்கு நிதி இல்லை’ என்று சொல்லும் இவர்களால் எந்தப் புதிய திட்டத்தையும் உருவாக்கி விட முடியாது. வருவாய் பெருக்கும் பார்வையும் இல்லை. முந்தைய தி.மு.க. அரசைக் குறை சொல்வதன் மூலமாக மாநிலத்தின் வருவாயைப் பெருக்கிவிட முடியாது. பழிவாங்கும் அரசியலை மட்டுமே பதவி ஏற்றதுமுதல் செய்து வருகிறார்கள். இத்தகைய குரூர எண்ணம் கொண்டவர்களால் நிர்வாகம் செய்யவும் முடியாது. இன்னமும் தேர்தல் காலத்தைப் போலவே இருக்கிறார் முதலமைச்சர்.
படத்தில் ஹீரோ வெற்றி பெற்றதும் படம் முடிந்து விடும். நிஜத்தில் அப்படி இல்லை. வெற்றிக்குப் பிறகு தான் இருக்கிறது கச்சேரி. அதில் ஒரு மதிப்பெண்கூட முதலமைச்சர் விஜயால் வாங்க முடியவில்லை.
விஜய் அரசின் முதல் நிதிநிலை அறிக்கை எதுவும் இல்லாத, வெற்று அறிக்கையாக அமைந்துள்ளது.






