
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் வண்ணமாக இருக்கிறது. குறிப்பாக இப்போது வரை நாட்டில் பாஜக ஆளும் மாநிலங்களிலேயே குற்றச்சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களிலேயே சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது தலைநகர் டெல்லியில் 17 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி முனையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள கல்காஜி கோயிலுக்கு நேற்று (செப்.21) தனது நண்பருடன் 17 வயது சிறுமி ஒருவர் சென்றுள்ளார். கோயிலில் இருந்து அருகே இருக்கும் ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் இருவரும் சுமார் 7 மணியளவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த 3 பேர் இருவரையும் விசாரித்துள்ளனர்.
மேலும் தாங்கள் போலீஸ் என்றும், தங்களிடம் இருந்த துப்பாக்கியை காட்டியும் அவர்கள் இருவரையும் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்த இருவரும் தங்களை விட்டுவிடுமாறு கெஞ்சியும், அந்த கும்பல் சிறுமியின் நண்பரை தாக்கிவிட்டு, சிறுமியை 3 பேரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி, இதுகுறித்து போலீசாருக்கு சுமார் 9 மணியளவில் புகார் அளித்தார். அதன்பேரில் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது அதில் முக்கிய குற்றவாளியான ஆசிப் என்பவர் பதுங்கியிருந்த இடத்தை அறிந்த போலீசார் உடனடியாக அவரை பிடிக்க விரைந்தனர்.
அப்போது ஆசிப், போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த குற்றவாளியை கைது செய்தனர். காலில் குண்டடி பாய்ந்த நிலையிலி, ஆசிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியும் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், மீதமிருக்கும் 2 குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமாக இருப்பதால், பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.






