தமிழ்நாடு

மோடி அரசு கொண்டு வந்த கருப்பு சட்டம் படுதோல்வி; டெல்லியை வீழ்த்திய தமிழ்நாடு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ் மண்ணில் கருப்பு – சிவப்பு – நீலக் கொடிகள்தான் பறக்கும்! மக்களை இழிவாக நடத்தும் ஆதிக்கத்திற்கான காவிக் கொடி ஒருபோதும் பறக்காது! தமிழர்கள் பறக்கவும் விடமாட்டார்கள்!

மோடி அரசு கொண்டு வந்த கருப்பு சட்டம் படுதோல்வி; டெல்லியை வீழ்த்திய தமிழ்நாடு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (17.04.2026) ஆண்டிப்பட்டியில்நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் விவரம்:

இயற்கையின் அழகும், வைகை அணையின் எழிலும் வரவேற்க, நான் தேனி மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன்!  இன்றைக்கு நாம் எதிர்கொண்டிருப்பது தேர்தல் களம் மட்டுமல்ல; போர்க்களம்!

தமிழ் - தமிழினம் - தமிழ்நாடு இந்தச் சொற்களைக் கேட்டாலே கசக்கும் கூட்டம், நம்முடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கக் கூடாது என்று சதி வேலையைச் செய்திருக்கிறார்கள். இந்தியாவில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மதவெறியை வளர்த்து, அதன் மூலமாக இந்த நாட்டை ஆள்வதற்குப் பாசிச பா.ஜ.க. செய்திருக்கும் சூழ்ச்சிதான், தொகுதி மறுவரையறை.

தென் மாநிலங்களில் தேர்தல் என்பது வெறும் சம்பிரதாயம்தான். மேலோட்டமாகப் பார்த்தால், பிரதமரும், உள்துறை அமைச்சரும் சொல்வது போன்று, நம்முடைய தொகுதி எண்ணிக்கையை அதிகரிப்பது போன்று, ஒரு ‘ஷோ’ தெரியும்; ஆனால், உள்ளபடியே நமக்கு வர வேண்டிய எம்.பி.-க்கள் எண்ணிக்கையைக் குறைத்திருக்கிறார்கள்.

இந்தச் சதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நான் கருப்புக் கொடி ஏற்றினேன். தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டித் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள்… தமிழ்நாடு மக்களின் பிரதிநிதியாக முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் என்னுடைய எதிர்ப்பு என்பது, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பு.

இதை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டு, டி.ஆர். பாலு அவர்கள் பேசினார். அதற்கு, மக்களவைத் தலைவராக அனைவருக்கும் பொதுவானவராக நடந்து கொள்ள வேண்டிய சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள், "நீங்கள் கருப்புக் கொடி ஏற்றினால் என்ன? நீலக்கொடி ஏற்றினால் என்ன?"என்று ஆணவத்தோடு பேசியிருக்கிறார். அவர் தனிப்பட்ட ஸ்டாலினை அவமதிக்கவில்லை; தமிழ்நாட்டின் குரலை – உணர்வுகளை ஏளனப்படுத்திப் பேசினார்.

இன்றைக்கு அதற்கான பதிலடியை அருமைத் தங்கை கனிமொழி அவர்கள் நாடாளுமன்றத்தில் தந்திருக்கிறார். தமிழர்களை அவமதிப்பதை மட்டுமே தங்களுடைய நோக்கமாக வைத்துப் பேசும் பா.ஜ.க.வின் குரலாக இருக்கும் ஓம் பிர்லா அவர்களுக்குத் தெளிவாகச் சொல்கிறேன்… இந்த மண்ணில் – சமத்துவம், சமூகநீதி, பொதுவுடைமைக்கான, கருப்பு – சிவப்பு – நீலக் கொடிகள்தான் பறக்கும்!

இன்னும் சொல்கிறேன்… திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் வரை, உங்களுடைய காவிக் கொடி ஒருபோதும் இங்கே பறக்காது! தன்மானமுள்ள தமிழர்கள் பறக்கவும் விடமாட்டார்கள்! நாடாளுமன்றத்தில் இன்றைக்கு நம்முடைய அத்தனை உரிமைகளையும் பறிக்கப் பார்க்கிறார்கள்; இந்த அநீதிக்கு முடிவுரை எழுத வேண்டும்; அதற்குத் தமிழ்நாட்டில் வலிமையான நம்முடைய மாநில அரசு அமைய வேண்டும்! தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக நெஞ்சுரத்தோடு போராடும் அரசு அமைய வேண்டும்!

அதற்காகத்தான், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்கு கேட்க உங்களில் ஒருவனாக நான் இங்கு வந்திருக்கிறேன். தமிழ்நாடா? டெல்லியா? என்ற இந்தப் போரில், பா.ஜ.க. எனும் சர்வாதிகார பருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும்! பா.ஜ.க.வுக்குத் துணைபோன துரோகத்தின் முழு உருவமான பழனிசாமியின் அடிமை அ.தி.மு.க. துரத்தியடிக்கப்பட வேண்டும்! 

அதற்கு, இந்த மேடையில் உங்களுடைய ஆதரவைக் கேட்டு வந்திருக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை நான் இப்போது உங்கள் அனுமதியோடு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

முதலில், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி. நம்முடைய வெல்லும் வேட்பாளர் பெருமதிப்பிற்குரிய சகோதரர் ஓ.பி.எஸ். என்று அனைவராலும் அழைக்கப்படும் ஓ. பன்னீர்செல்வம்அவர்கள். நம்முடைய அன்புக்குரிய ஓ.பி.எஸ் அவர்களுக்கு அறிமுகம் தேவையா? உங்கள் வீட்டுப் பிள்ளை! விசுவாசம் என்றால் ஓ.பி.எஸ் என்று சொல்லும் அளவுக்கு, அம்மையார் ஜெயலலிதா அவர்களின் நம்பிக்கையைப் பெற்றவர். விசுவாசத்தைக் காட்டியவர் மட்டுமல்ல; ஒரு உலக மகா துரோகியை உலகுக்கு அடையாளம் காட்டியவர் அவர்தான். அப்படிப்பட்ட நம்முடைய ஓ.பி.எஸ். அவர்களுக்கு, நம்முடைய வெற்றிச் சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் எல்லாம் வாக்கினை வழங்கிட வேண்டும்.

அடுத்து, கம்பம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் அவர்கள். கம்பத்தைத் தன்னுடைய அடையாளமாகப் பெயரில் இணைத்துக் கொண்டவர். தேனி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், உங்களில் ஒருவராக இருக்கும் இவர், ஏழாவது முறையாகக் கம்பம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

அடுத்து, ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் மகாராஜன் அவர்கள். ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவராக இருந்தவர். கடந்த இரண்டு முறையாக உங்களுடைய எம்.எல்.ஏ.-வாகச் சிறப்பாகப் பணியாற்றியவர். இப்போது மூன்றாவது முறையாகக் களமிறங்குகிறார். மகாராஜனுக்கு மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

அடுத்து, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சக்திவேல் என்கிற ஆற்றலரசு அவர்கள். கொள்கை உறவாக உடன் இருக்கும், எழுச்சித் தமிழர் அன்பு சகோதரர் தொல். திருமாவளவன் அவர்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர்! மக்கள் பணியாற்ற வந்திருக்கும் இவருக்கு, பானை சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும்.

இந்த நான்கு வேட்பாளர்களின் வெற்றி உறுதியா? உறுதி (மக்கள்). சட்டமன்றத்தில் உங்களுக்கு சீட் கன்பார்ம் ஆகிவிட்டது! அதனால் நீங்கள் உட்காரலாம்! நம்முடைய திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரை, வள்ளுவ முனை இருக்கும் கன்னியாகுமரியில் இருந்து, தமிழ்நாட்டின் வடக்கு வாசலாக இருக்கும் திருவள்ளூர் வரைக்கும் வளர்ச்சி அடைய வேண்டும்! அதற்குத் தேவையான அத்தனை உட்கட்டமைப்புவசதிகளையும் உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். 

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தத் தேனி மாவட்டத்திற்கு,  பாளையம்பரவு வாய்க்கால் திட்டம்,  18-ஆம் கால்வாய் திட்டம்,  சுருளி ஆறு மின் நிலையம்,  மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் பாதாளச் சாக்கடைத் திட்டம்,  ஆயிரம் ஏக்கர் நிலத்திற்குப் பாசன வசதி தரும் பி.டி.ராசன் கால்வாய்த் திட்டம்,  வைகைக் கால்வாய் சீரமைப்பு,  வராக நதியில் சோத்துப்பாறை அணை, காமாட்சிபுரம், கடமலைக்குண்டு, மார்க்கையன்கோட்டை பகுதிகளில் துணை மின் நிலையங்கள் என ஏராளமான பணிகளைச் செய்திருக்கிறோம்.

இவற்றின் தொடர்ச்சியாக, நம்முடைய திராவிட மாடல் அரசில் செய்யப்பட்டிருக்கும் திட்டங்களில் சிலவற்றை நான் ஹைலைட்டாகச் சொல்ல விரும்புகிறேன். வீரபாண்டி அருகே கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தப்புக்குண்டு சாலையில் அரசு சட்டக் கல்லூரி, கம்பம் தொகுதியில், கோப்பை, பண்ணைப்புரம், தேவாரம் பேரூராட்சி பகுதிகளில் கூட்டுக் குடிநீர்த் திட்டம், பதினெட்டாம் கால்வாய் தூர்வாரும் பணிகள், சின்னமனூர் நகராட்சி பகுதியில் சாலைகள்,  ஆண்டிப்பட்டி, வண்டியூர், சக்கம்மாள்பட்டி, சேடப்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் 11 பாலங்கள், தேக்கம்பட்டியில் முருங்கை ஆராய்ச்சி மையம், குமுளியில் நவீன பேருந்து நிலையம்.

பெரியகுளத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் பள்ளிக் கட்டடம், அங்கன்வாடி மையம், சமுதாய கூடம், 80 கோடி ரூபாய் மதிப்பில், தார் சாலை வசதி, குடிநீர் வசதி, கூட்டு நீர் திட்டம் என ஏராளமான சாதனைகளைச் செய்திருக்கிறோம். இப்படி நாம் சாதனைச் சரித்திரம் தொடர உங்களுடைய ஆதரவைக்கேட்கிறோம்.  ஆனால், பழனிசாமி யாருக்காக – எதற்காக வாக்கு கேட்க வருகிறார் என்றால், தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்யும் பா.ஜ.க.வை வளர்ப்பதற்காக – தமிழ்நாட்டைப் பா.ஜ.க.வுக்குத் தாரை வார்ப்பதற்காக வெட்கமே இல்லாமல் வாக்குக் கேட்கிறார்.

பழனிசாமி அமைத்திருக்கும் N.D.A. கூட்டணியால், தமிழ்நாட்டிற்கு ஒரே ஒரு நல்லதாவது நடக்கிறதா? தமிழ்நாட்டிற்குத் கெடுதல் செய்ய ஊழல்வாதிகளை மிரட்டி உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டணிதான், பழனிசாமி பாதம்தாங்கும் பா.ஜ.க. கூட்டணி!நானும் பிரதமர் மோடி அவர்களைப் பல ஆண்டுகளாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.. தமிழ்நாட்டிற்குச் செய்த ஒரு சிறப்புத் திட்டத்தையாவது சொல்லுங்கள் என்று கேட்கிறேன்…இதுவரைக்கும் அவரிடமிருந்து பதில் வரவில்லை… அதேபோன்று, அடிமைசாமியைப் பார்த்து, உங்களுடைய ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்கள் என்னென்ன என்று பட்டியலிடுங்கள் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.. அதற்கும் பதில் இல்லை! இப்படி, தமிழ்நாட்டிற்கு எதையும் செய்யாத இவர்களுக்கு, நீங்களும் வாக்கு இல்லை என்று சொல்ல வேண்டும்!

பக்கத்தில் இருக்கும் மதுரைக்கும்,  அதேபோன்று, திருச்சி - கோவைக்கும் மெட்ரோ கேட்டோம்… அனுமதி தரவில்லை!  ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி தரவில்லை.  சென்னை மெட்ரோ திட்டத்திற்கு முழுமையான பணத்தை இதுவரை தராமல் இழுத்தடிக்கிறார்கள்! 

இந்தியைத் திணிக்க வேண்டும் என்று, நம்முடைய வீட்டுக் குழந்தைகளின் படிப்புக்குத் தர வேண்டிய நிதியைக் கூடத் தராமல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.  3 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஜல்ஜீவன் இயக்கத்திற்கான மானியத்தைத் தராமல் இழுத்தடிக்கிறார்கள்.  ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தர வேண்டிய 2 ஆயிரத்து 246கோடியை இதுவரை தரவில்லை. 

இதையெல்லாம் பழனிசாமி என்றைக்காவது ஒரு நாளாவது தட்டிக் கேட்டிருக்கிறாரா? அந்த இலட்சணத்தில் அவர் என்ன சொல்கிறார்? ஆட்சிக்கு வந்தால் பா.ஜ.க.விடம் கோரிக்கை வைத்துத் திட்டங்களைக் கொண்டு வருவாராம்... கேட்கும்போதே உங்களுக்கெல்லாம் சிரிப்பு வருகிறதல்லவா? ஏற்கனவே முதலமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டின் உரிமைகளை எல்லாம் அடகு வைத்த பழனிசாமி, இப்போது புலிப்பாண்டியாக மாறி அழுத்தம் தருவாராம்... நம்முடைய ஊரில் சொல்வார்கள் அல்லவா… “அறுக்கத் தெரியாதவனுக்கு 52 அருவா”! இது பழனிசாமிக்காக உருவான பழமொழி!

நம்முடைய அண்ணன் ஓ.பி.எஸ் அவர்களிடம் கேளுங்கள், இன்னும் நிறையத் துரோகங்களைச் சொல்வார் அவர்.  பிரசாரத்தில் இருக்கும் தம்பி உதயநிதி ஒரு ஃபோட்டோவைக் காட்டுவதை ஊர் ஊராக பார்த்துக் கொண்டிருப்பீர்கள் நீங்கள். ஏன், பழனிசாமியின் அந்த பர்ஃபார்மென்ஸை லைவ்லேயே நீங்கள் எல்லோரும் டி.வி.-யில் பார்த்திருப்பீர்கள்… 

அம்மையார் சசிகலா காலில் விழுந்து, அவருடைய காலை வாரிவிட்டுத் துரோகத்தைச் செய்தவர். இப்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்து கொண்டு இருக்கிறார். பழனிசாமி மட்டுமல்ல. அந்தத் துரோகக் கூட்டத்தில் இன்னொரு துரோகியும் இருக்கிறார். அவரைப் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஊழல் வழக்கில் பல சட்டங்கள் இருப்பதை நாட்டுக்கே அறிமுகப்படுத்திய உத்தமர் அவர்! உலகத்திலேயே தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்கப் பார்த்துத் திகார் ஜெயிலுக்கு டூர் சென்றவர் அவர்! இப்போது தெரிந்திருக்கும் அவர் யார் என்று… “பழனிசாமியுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் தூக்கு மாட்டிக் கொள்வேன்” என்று சொன்னார்.

இன்னொருவர் காலில் விழுந்த பழனிசாமியிடம் இப்போது சரண்டர் ஆகியிருக்கிறார். அவரைப் பற்றிப் பேச முடியுமா? இப்படிப்பட்ட இலட்சணத்தில்தான் N.D.A. கூட்டணி இருக்கிறது! பா.ஜ.க.வுக்குப் பல்லக்குத் தூக்கும் இந்தத் துரோகிகளுக்கு, இந்தியைத் திணித்தாலும் கவலை இல்லை; நீட் தேர்விலிருந்து விலக்கு தரவில்லை என்றாலும் கவலை இல்லை; கல்வி நிதியை நிறுத்தினாலும் கவலை இல்லை; தமிழ்நாட்டிற்கான நிதியை நிறுத்தினாலும் கவலை இல்லை; நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு மூடுவிழா நடத்தினாலும் கவலை இல்லை; பேரிடர் இழப்பீடு நிதியைக் கொடுக்கவில்லை என்றாலும் கவலை இல்லை; இஸ்லாமிய மக்களின் வக்பு சொத்துகளைப் பறித்தாலும் கவலை இல்லை; கிறிஸ்தவர்களுக்கு எதிரான F.C.R.A. சட்டம் கொண்டு வந்தாலும் கவலை இல்லை; இப்போது நாடே கொந்தளிக்கும் தொகுதி மறுசீரமைப்பில்கூட, பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசுவதற்குத் தெம்போ - திராணியோ - துணிச்சலோ இல்லாமல், தமிழ்நாட்டு உரிமைகளை எல்லாம் அடகு வைக்கும் அரசியல் அவமானமாக இருக்கிறார்கள்!

ஆனால், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்பது, உரிமைக்காகப் போராடும் போர்க்குணம் நிறைந்த சுயமரியாதைமிக்க கூட்டணி! அதனால்தான், டீ- லிமிட்டேஷன் என்ற பெயரில் தமிழ்நாட்டின் கழுத்தில் கத்தியை வைக்கிறார்கள் என்று தெரிந்ததும் தேர்தல் பிரசாரத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம்; முதலில், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் அரசியல் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று சொல்லி, நம்முடைய எம்.பி.-க்களையெல்லாம் டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.

அதனால், தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் இந்த மேடைக்கு வர முடியவில்லை. அவரை நான்தான் அனுப்பி வைத்திருக்கிறேன். சென்றே தீர வேண்டும் அனுப்பி வைத்திருக்கிறேன். டெல்லிக்குச் சென்று அங்கு கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கு தமிழ்நாட்டில், தேர்தல் பிரசாரத்திற்கு இடையிலும், நான் உட்பட தமிழ்நாடு முழுவதும் சுயமரியாதைமிக்க நம்முடைய கூட்டணி சார்பாக, கருப்புக் கொடியை ஏற்றுகிறோம். தொகுதி மறுசீரமைப்பு மசோதா நகலை எரித்து நம்முடைய எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறோம். தமிழ்நாட்டு உரிமைக்காகப் போராடும் இந்த ஸ்டாலினின் கரங்களை நீங்களெல்லாம் வலுப்படுத்துவீர்களா? தமிழ்நாட்டின் தன்மானத்திற்காக என்னோடு சேர்ந்து தேனி மக்கள் போர் செய்வீர்களா?

ஏனென்றால், இந்தப் போரில் வெற்றி பெற்றால்தான், எதிர்காலத்தில் நம்முடைய தமிழ்நாடு – தமிழ்நாடாக இருக்கும். இல்லை என்றால், தட்சிணப் பிரதேசத்திலேயோ - யூனியன் பிரதேசத்திலேயோ  நாம் உரிமையே இல்லாமல் இருப்போம்! இந்த நிலை ஏற்படாமல் தமிழ்நாடு தலைநிமிர்ந்தே இருக்க வேண்டும் என்றுதான், நாட்டுக்கே வழிகாட்டியாகத் திராவிட மாடல் அரசை நாம்  நடத்திக் கொண்டிருக்கிறோம். 

0.07 விழுக்காடு வளர்ச்சி என்ற நிலையிலிருந்து பழனிசாமி படுகுழியில் தள்ளித் பரிதவிக்க விட்டுச் சென்ற தமிழ்நாட்டை மீட்டெடுத்து, இப்போது நாம் 11.19 விழுக்காடு என்ற வரலாறு காணாத வளர்ச்சியை உருவாக்கியிருக்கிறோம்.

இந்த வளர்ச்சிக்கு அடித்தளமான சாதனைகளில் சிலவற்றை மட்டும் நான் சொல்லட்டுமா? ஆட்சிப் பொறுப்புக்கு முதல் நாள், முதல் கையெழுத்து - மகளிர் அனைவரும் கட்டணமில்லாமல் விடியல் பயணம் செய்யலாம் என்று உத்தரவிட்டேன்.

ஒரு கோடியே 31 இலட்சம் மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாயை வழங்கிக் கொண்டிருக்கும், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” - இனி, உங்களுடைய உரிமைத்தொகை, ஆயிரம் அல்ல… நான் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு இரண்டாயிரம் ரூபாயாக உயரப் போகிறது!

அரசுப் பள்ளியில் படித்து, கல்லூரி செல்லும் மாணவ - மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம், இனி இந்தத் தொகை ஆயிரம் அல்ல... ஆயிரத்து 500 ரூபாயாக உயரப் போகிறது!

19 இலட்சம் பள்ளி மாணவர்கள் சூடாக - சுவையாகச் சத்தான உணவை வழங்கும் திட்டம், “காலை உணவுத் திட்டம்” - இந்தத் திட்டத்தை இப்போது ஐந்தாம் வகுப்பு வரை வழங்குகிறோம். இனி, எட்டாம் வகுப்பு வரைக்கும் விரிவாக்கம் செய்யப் போகிறோம்!

மக்களைத் தேடி மருத்துவம்!

இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48!

நான் முதல்வன்! 

தோழி விடுதி! 

கலைஞர் கைவினைத் திட்டம்! 

கலைஞர் கனவு இல்லம் என ஏராளமான திட்டங்கள் இருக்கிறது.

2021-இல் திராவிட மாடல் ஆட்சிக்காக, உங்களுடைய ஆதரவைக்

கேட்டு வந்தபோது நான் சொன்னேன். அடுத்த பத்தாண்டுகளுக்கானதொலைநோக்குப் பார்வையை உறுதிமொழிகளாகக் கொடுத்துவிட்டுத்தான் உங்களிடத்தில் வாக்குக் கேட்டேன். அந்த அடிப்படையில், தமிழ்நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு களமிறங்கியிருப்பது யாரு? யார் அந்த சூப்பர்ஸ்டார்! தேர்தல் அறிக்கை! “சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா…” சின்னக் குழந்தைகள்கூடச் சொல்லும். அதுதான் நம்முடைய தேர்தல் அறிக்கை!

அதில் என்னென்ன ஹைலைட்? இங்கு இருக்கும் மகளிரைக் கேட்கிறேன்… உங்கள் அண்ணன் - இந்த ஸ்டாலின் கொடுக்கப் போகும் கூப்பன் எவ்வளவு? எட்டாயிரம் ரூபாய் (மகளிர்)! மகளிர் எல்லாம் இப்போதே வீட்டுக்கு என்ன புதுப் பொருள் வாங்கலாம் என்று டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்! இந்தக் கூப்பனை வைத்து, உங்களுக்குத் தேவைப்படும் வீட்டு உபயோகப் பொருளை, புதியதாகவும் வாங்கிக் கொள்ளலாம்; இல்லை என்றால், பழைய பொருளை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய பொருளையும் வாங்கிக் கொள்ளலாம்! உங்களுக்குப் பிடித்த கடையில் – உங்களுக்குப் பிடித்த பிராண்ட்-ஐ வாங்கிக் கொள்ளலாம்!

அடுத்து, 20 இலட்சத்திற்கும் அதிகமான உழவர்கள் பயன்பெறும் வகையில், நவீன மின்சாரப் பம்புசெட்டுகளை வழங்கப் போகிறோம்! உயர்கல்வி முடித்த 5 இலட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், நான் முதல்வன் திட்டத்தில் ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகையோடு 6 மாதம் பயிற்சி வழங்கப் போகிறோம்.

பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.  முதியோர் உதவித்தொகை ஆயிரத்து 200 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.  மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும். 2030-ஆம் ஆண்டுக்குள் மாவட்ட மற்றும் வட்ட அளவிலான அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான கருவிகள் இரண்டு மடங்காக்கப்படும். 

கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாக வீடற்ற ஏழைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 10 இலட்சம் வீடுகள் கட்டித் தரப்படும். இவைபோக, இங்கே வந்தவுடனே என்னிடம் வைக்கப்பட்ட சில கோரிக்கைகளின் அடிப்படையில், தேனி மாவட்ட மக்களுக்கான வாக்குறுதிகளை இப்போது நான் அளிக்கப் போகிறேன். 

ஏலக்காய் உற்பத்தி பெருமளவு நடைபெறும் இந்தத் தேனி மாவட்டத்தில், ஏலக்காய் தொழிலுக்கான பொது வசதி மையம் பண்ணைபுரத்தில் அமைக்கப்பட உள்ளது. போடிநாயக்கனூர் பகுதியிலும் இத்தொழில் சிறப்பாக நடைபெறுவதால், மேலும் ஒரு "மைக்ரோ க்ளஸ்டர்"; போடிநாயக்கனூரில் அமைக்கப்படும்.

கம்பம் தொகுதி, சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வேளாண்மைக்கு தேவையான தண்ணீர் கொண்டு செல்லப்படும். 

கம்பம் உத்தமபாளையம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் உண்டு உறைவிடப் பள்ளி தொடங்கப்படும்.  மேலும், தென்மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சித் திட்டம்.  தேனியில் வேளாண் தொழில் பூங்கா ஒன்று உருவாகப் போகிறது. 

நான் இவ்வளவு நேரம் கூறியதெல்லாம் கொஞ்சம்தான். தேர்தல் அறிக்கை புத்தகத்தில் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. இன்றைக்கு நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில்  “வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது” என்று இருந்த நிலையை மாற்றி, “தெற்குதான் வழிகாட்டுகிறது” என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம். அப்படி வழிகாட்டும் தெற்கை ஒன்றிய அரசு வஞ்சிக்கலாமா?

மக்களாகிய நீங்கள், இந்தத் தேர்தலில் தெளிவாக முடிவெடுக்க வேண்டும்! இந்தத் தேர்தலில், பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கும் – பா.ஜ.க.வுக்கும் விழும் ஒவ்வொரு வாக்கும், தமிழ்நாட்டை நாசப்படுத்த அவர்களுக்குக் கொடுக்கும் வாய்ப்பு! டபுள் எஞ்சின் - டப்பா எஞ்சின் என்று உள்ளே நுழைந்து, தமிழ்நாட்டைச் சிதைத்துவிடுவார்கள்.

ஏற்கெனவே, பழனிசாமி ஆட்சியில் என்னென்ன கூத்துகள் அரங்கேறியது? எப்படியெல்லாம் உரிமைகள் பறிபோனது? என்று நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள். அந்த அவமான நிலை மறுபடியும் உருவாக வேண்டுமா? தமிழ் மானத்தை அடகு வைக்கும் பழனிசாமிக்கு நாம் பாடம் புகட்ட வேண்டாமா?  கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். பழனிசாமி தமிழ்நாட்டை ஆட்சி செய்த நான்கு ஆண்டுகள் என்பது, ஊழல்களும் - மக்கள் விரோத நடவடிக்கைகளும் நிறைந்த, இருண்ட ஆட்சிக்காலம்!

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், அவருடைய ஆட்சியின் அடையாளங்கள் என்ன? பொல்லாத ஆட்சிக்குப் பொள்ளாச்சியே சாட்சி! துப்புக்கெட்ட ஆட்சிக்குத் தூத்துக்குடியே சாட்சி! கொடூரமான ஆட்சிக்குக் கொடநாடே சாட்சி! கேடுகெட்ட ஆட்சிக்குச் சாத்தான்குளமே சாட்சி என்று அனைத்துமே எதிர்மறையாகத்தான் இருக்கின்றன!

தவறுக்கு மேல் தவறுகள் செய்த பழனிசாமி, தன்னுடைய தவறுகளில் இருந்து தப்பிக்க சரண்டரான இடம்தான், பா.ஜ.க. வாஷிங்மெஷின்! தன்னுடைய தவறுகளில் இருந்து தப்பிக்க அவர் கொடுத்த விலைதான், தமிழ்நாட்டின் உரிமைகள்! அ.தி.மு.க.வுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் பா.ஜ.க.வுக்கு விழும் வாக்குகள்! தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு விழும் தடைக்கற்கள்! 

எனவே, தமிழ்நாட்டை வட்டமிடும் பா.ஜ.க. எனும் பருந்தை விரட்டியடிக்க வேண்டும்! அதனால்தான், நடக்கும் தேர்தல் தமிழ்நாடு வெர்சஸ் N.D.A. என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்யும் பத்து தோல்வி பழனிசாமிக்கு, பதினோராவது தோல்வியைக் கொடுத்து, விரட்ட வேண்டும்! டெல்லியின் ரிமோட் கண்ட்ரோலுக்கு அடிமைகள் தமிழ்நாட்டில் ஆளக் கூடாது!

எனவே, தமிழ்நாடு வெற்றி பெற – தமிழ்நாடு, தமிழ்நாடாக இருக்க – நாம் தலைநிமிர்ந்து நடைபோட – மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். 

அதற்கு, போடி தொகுதியில் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், கம்பம் தொகுதியில் கம்பம் ராமகிருஷ்ணன் அவர்களுக்கும், ஆண்டிபட்டி தொகுதியில் மகாராஜன் அவர்களுக்கும், உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

பெரியகுளம் தொகுதியில் சக்திவேல் என்கிற ஆற்றலரசு அவர்களுக்குப் பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்தத் தேர்தலில் பா.ஜ.க.வின் ஆணவத்திற்கும், அ.தி.மு.க.வின் துரோகங்களுக்கும் ஒருசேர முடிவுரை எழுதுவோம்! 

தேனியில் நான் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு வெற்றிச் செய்தி வந்திருக்கிறது. நல்ல செய்தி வந்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு எதிராக கருப்புச் சட்டம் கொண்டுவந்தார்கள் அல்லவா? அவர்கள் கொண்டுவந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு, நாம் அதில் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த வெற்றி வெறும் டிரெய்லர்தான், அடுத்து நாம் பெறவிருக்கும் வெற்றிதான் மாபெரும் வெற்றி. தமிழ்நாடா? டெல்லியா? என்று நான் கேட்டேன் அல்லவா? தமிழ்நாடா? டெல்லியா?  (மக்கள் : தமிழ்நாடு) தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள்தான் இருக்கின்றன. ஒரு பக்கம் கோடைக்கால வெப்பம்! இன்னொரு பக்கம் தொகுதி

மறுவரையறைக்கு எதிராக நாம் பற்ற வைத்த நெருப்பின் வெப்பம்! இதில் நாம் வெற்றிபெற்றுவிட்டோம். இதற்கு இடையில்தான் நம்முடைய உடன்பிறப்புகள் களத்தில் இறங்கிப் பிரசார பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறீர்கள். ஐந்தாண்டு ஆட்சி எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு இந்த கடைசி 5 நாட்கள் போடும் உழைப்பும் ரொம்ப முக்கியம்!

 ஓய்வுக்கோ, சோர்வுக்கோ இடமே இல்லை! ஏனென்றால், நாம் இந்தத் தேர்தலில் சும்மா ஜெயித்து ஆட்சிக்கு வந்தால் போதும் என்று வேலை செய்யவில்லை. 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். அதற்காகத்தான் இவ்வளவு உழைப்பும்! தினமும் பல மணி நேரம் பேசிப் பேசி, கடைசி இரண்டு நாளாக எனக்கே

தொண்டையில் சின்ன கரகரப்பு வந்துவிட்டது. ஆனால், அதற்காக, தலைவராக நான் ஆற்ற வேண்டிய பணியையும், தொண்டையும் நான் மறக்கவில்லை. ஒவ்வொரு உடன்பிறப்பும் அப்படித்தான்! உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியையும், வாழ்த்துகளையும் இந்த நேரத்தில் சொல்லியே ஆக வேண்டும்!

தொடர்ந்து உழைப்போம்! சரித்திர வெற்றியைப் பெறுவோம்! அமையவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில் நம்முடைய சாதனைகளை நாமே முறியடிப்போம்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு வளம் பெற நல்லாட்சி தொடர்ந்திட வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக!தமிழ்நாடு வெல்லட்டும்!

banner

Related Stories

Related Stories