தமிழ்நாடு

“தரம்கெட்டுப் பேசும் பழனிசாமிக்கு மக்களே தக்க பதிலடி கொடுப்பார்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தி.மு.க.வின் தலைவரான பிறகு நான் தோற்கவே இல்லை; அதிமுக பொதுச்செயலாளரான பின்னர் பழனிசாமி வென்றதே இல்லை.

“தரம்கெட்டுப் பேசும் பழனிசாமிக்கு மக்களே தக்க பதிலடி கொடுப்பார்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று ஏப். 08 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை:-

கடையேழு வள்ளல்களில் ஒருவரான காரி ஆண்ட மலையமான் நாடும் - வீரத்தின் விளைநிலமாம் ராஜா தேசிங்கு கோட்டை கட்டி ஆண்ட பகுதியும் உள்ள விழுப்புரத்திற்கு நான் வந்திருக்கிறேன்.

விழுப்புரத்தின் பெருமைகளைச் சொல்ல வேண்டும் என்றால்,

கல்வெட்டுகளுக்கு தொண்டூர்!

குடவரைக் கோயில்களுக்கு மண்டகப்பட்டு!

பழமையான கோயில்களுக்கு பனைமலை!

பாறை ஓவியங்களுக்கு கீழ்வாலை!

வரலாற்றுப் பெருமைக்கு திருவக்கரை!

இலக்கியத்திற்கு தண்டபாணி சுவாமிகள்!

நல்லாட்சியின் இலக்கணத்திற்கு ஓமந்தூரார்!

திராவிட அரசியலுக்கு ஏ.ஜி. எனப்படும் அய்யா ஏ. கோவிந்தசாமி அவர்கள்!

இப்படி இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்!

இப்படிப்பட்ட வரலாற்றுப் பெருமைமிக்க இந்த விழுப்புரம் மாவட்டத்தில் நின்று, தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் காக்க - தனித்தன்மையைப் பாதுகாக்க, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு, உங்களின் ஆதரவைக் கேட்டு - வாக்குகளைக் கேட்டு, வந்திருக்கிறேன்.

முதலில், விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் மாவட்டப் பொறுப்பாளர் டாக்டர் லட்சுமணன் அவர்கள். விழுப்புரம் தொகுதியில் ஏற்கனவே மக்கள் பணியாற்றி வரும் இவருக்கு, மீண்டும் தொகுதி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும்.

அடுத்து, திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் டாக்டர் பொன். கெளதம சிகாமணி அவர்கள். “ஆழ்கடலில் கண்டெடுத்த நன்முத்து பொன்முடி”, “அறிவுமுடிதான் பொன்முடி” – இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்ட கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் முனைவர் பொன்முடியின் அருமை மகன். விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராகவும் கழகப் பணியாற்றி வருகிறார். கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, மக்கள் பணியாற்றியவர். அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக இந்தப் பகுதி மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் கெளத சிகாமணி அவர்களுக்கு, திருக்கோயிலூர் தொகுதி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும்.

அடுத்து, செஞ்சி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் செஞ்சி மஸ்தான் அவர்கள். திராவிட மாடல் ஆட்சியில் சிறுபான்மை மற்றும் வெளிநாடுவாழ் நலத்துறை அமைச்சராக இருந்தவர். விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக சிறப்பாக கழகப் பணியாற்றி வருபவர். என்னுடைய பேரன்புக்குரிய அன்பு உடன்பிறப்பு பெயரே செஞ்சி மஸ்தான்தான். மூன்றாவது முறையாக செஞ்சி மக்கள் உங்கள் செஞ்சி மஸ்தானை, உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் எல்லாம் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.

அடுத்து, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் அன்னியூர் சிவா அவர்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, இந்த இருபது மாத காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் இந்தத் தொகுதிக்கு கொண்டு வந்து சாதித்துக் காட்டிய ஆற்றலாளர் அன்னியூர் சிவா. மாநில விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருந்து, அந்தப் பகுதி மக்கள் அனைவரின் செல்வாக்கையும் பெற்றிருக்கிறார். அன்னியூர் சிவா அவர்களுக்கு விக்கிரவாண்டி தொகுதி மக்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து, மயிலம் சட்டமன்றத் தொகுதி. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்த நமது வெல்லும் வேட்பாளர் எல். வெங்கடேசன் அவர்கள். எனது ஆருயிர் நண்பர் நினைவில் வாழும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழிகாட்டுதலில் வளர்ந்தவர். 2011 சட்டமன்றத் தேர்தலில் திருக்கோயிலூர் தொகுதியில் வெற்றி பெற்று மக்கள் பணி செய்தவர். அருமைச் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களால் மயிலம் தொகுதி வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் எல். வெங்கடேசன் அவர்களுக்கு, மயிலம் தொகுதி மக்கள் ‘முரசு’ சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து, வானூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் கெளதம் திராவிட மணி அவர்கள். தன்னுடைய தாத்தா சுப்பராயன், அப்பா திராவிட மணி ஆகியோரின் வழித்தடத்தில் கழகப் பணியாற்றி வருகிறார், கெளதம் திராவிட மணி அவர்கள். மூன்றாவது தலைமுறையாக கழகப் பணியாற்றும் இவர், மாவட்டக் கவுன்சிலராகவும் மக்கள் பணியாற்றி வருகிறார். இளம் வேட்பாளர் கெளதம் திராவிட மணி அவர்களுக்கு, வானூர் தொகுதி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.

நிறைவாக, திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி. நமது தோழமைக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வெல்லும் வேட்பாளர் வன்னி அரசு அவர்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் மற்றும் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அருமைச் சகோதரர் ரவிக்குமார் அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற வேட்பாளர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர். பல்வேறு மக்கள் போராட்டங்களை முன்னின்று நடத்தி சிறை சென்றவர். இன்னும் பெருமையோடு சொல்ல வேண்டும் என்றால், தொலைக்காட்சி விவாதங்களில் தீர்க்கமான விவாதங்களைச் செய்பவர். நம்மில் ஒருவராக இருக்கும் வன்னி அரசு அவர்கள் வெற்றிக்கு, கழக நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். திண்டிவனம் தொகுதி மக்கள் வன்னி அரசு அவர்களுக்கு ‘பானை’ சின்னத்தில் நீங்கள் உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும் என்று அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்போது நான் அறிமுகப்படுத்திய, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் இந்த ஏழு வேட்பாளர்களையும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். அதற்கு நீங்கள் எல்லாம் தயாரா? தயார் (மக்கள்). வெற்றி உறுதியா? உறுதி (மக்கள்). வெற்றி உறுதியாகிவிட்டது. வேட்பாளர்கள் இப்போது உட்காரலாம். சீட் கிடைத்துவிட்டது!

பல முறை நான் இந்த விழுப்புரத்திற்கு வந்திருந்தாலும், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வந்ததை என்னால் மறக்கவே முடியாது! என்னால் மட்டுமல்ல. உங்களாலும் மறக்க முடியாத அளவுக்கு, வரலாற்றில் முத்திரை பதித்த நாள், அந்த நாள்! நம்முடைய நெஞ்சங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் திராவிட இயக்கத் தீரர், ஏ.ஜி. என்று அன்போடு அழைக்கப்படும் அய்யா ஏ. கோவிந்தசாமி அவர்களின் நினைவரங்கத்தையும்; அதுமட்டுமல்ல, இடஒதுக்கீட்டிற்கான போராட்டத்தில் உயிரிழந்த 21 சமூகநீதிப் போராளிகளுக்கான மணிமண்டபத்தையும் நான் திறந்து வைத்தேன். இதை வாழ்நாளில் எனக்கு கிடைத்த பெருமையாக நான் கருதுகிறேன்.

2019-ஆம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு நான் இங்கு வந்தபோது, நம்முடைய முன்னாள் அமைச்சர் முனைவர் பொன்முடி அவர்களும் – நம்முடைய திராவிட ஆழ்வார் ஜெகத்ரட்சகன் அவர்களும், நம்முடைய சகோதரர் அன்னியூர் சிவா அவர்களும், இதை கோரிக்கையாக வைத்தார்கள். உடனே, தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அன்றைக்கு நான் உறுதியளித்தேன். இந்த ஸ்டாலின் சொன்னால்… இந்த ஸ்டாலின் சொன்னால்… சொன்னதைச் செய்வான்! 21 சமூகநீதிப் போராளிகளுக்கான மணிமண்டபத்தைக் கட்டி, திறந்து வைத்துவிட்டுதான், இன்றைக்கு உங்களிடம் உரிமையோடு வாக்கு கேட்க வந்திருக்கிறேன்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல... இந்தியா முழுவதும், சமூகநீதி என்றால், தி.மு.க.! தி.மு.க. என்றால், சமூகநீதி! சமூகநீதிக்காக இந்த மண்ணில் நடந்த மிக முக்கியமான - 1987 போராட்டம்! மறக்க முடியுமா? பெருமதிப்பிற்குரிய அய்யா ராமதாசு அவர்கள் தலைமையில் நடந்த போராட்டம். போராடிய பிற்படுத்தப்பட்ட மக்களை, அன்றைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் காக்கை, குருவிகளை போல், சுட்டுக் கொன்றார்கள். ஆனால், 1989-இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடனே, தலைவர் கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடனே, நம்முடைய ஆருயிர் அண்ணன் சேலத்துச் சிங்கம் வீரபாண்டியர் அவர்கள் மூலமாக, பெரியவர் அய்யா மருத்துவர் ராமதாசு அவர்களை, தன்னுடைய வீட்டிற்கே அழைத்து, விவாதித்து, ஆட்சிப் பொறுப்புக்கு வந்த 43-ஆவது நாளிலேயே மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான, 20 விழுக்காடு இடஒதுக்கீட்டை உருவாக்கிக் கொடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்தார்!

இன்றைக்கு கல்வியில், வேலைவாய்ப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துப் பிள்ளைகள் படித்து, வேலைக்குச் சென்று முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு, கலைஞர் கொடுத்த இடஒதுக்கீடுதான் மிகமிக முக்கியக் காரணமாக இருக்கிறது.

பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடு - மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு - ஆதி திராவிடர்களுக்கு ஏற்கனவே இருந்த 16 விழுக்காட்டை உயர்த்தி 18 விழுக்காடு - பழங்குடியினருக்கு ஒரு விழுக்காடு என்று சமூகநீதி வரலாற்றில், 69 விழுக்காடு இடஒதுக்கீடு வந்தது.

சமூகநீதியை நிலைநிறுத்திய இயக்கம் மட்டுமல்ல; சமூகநீதிப் போராளிகளைப் போற்றும் இயக்கமும் தி.மு.க.தான்! உயிர்த் தியாகம் செய்த 21 பேர் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் கருணைத் தொகையும் - மாதம்தோறும் பென்ஷனும் வழங்கியவர் முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள். இன்றைக்கும் அந்தக் குடும்பங்கள் மாதம் 3 ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு சமூகநீதிப் போராளிகள் என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

அப்போது சாலைமறியலில் கைதான 2 லட்சம் பேர் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டது. அதுமட்டுமல்ல, குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட வன்னியர் சங்க நிர்வாகிகளான பு.தா. அருள்மொழி அவர்கள், பு.தா. இளங்கோவன் அவர்கள், வாழைச் செல்வன் அவர்கள், ஆரணி ராசேந்திரன் அவர்கள், தாராசிங் அவர்கள் ஆகிய 5 பேர் மீதான வழக்கும் திரும்பப் பெறப்பட்டது.

வாழப்பாடி ராமமூர்த்தி அவர்களும், வன்னிய அடிகளார், வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சி.என். ராமமூர்த்தி ஆகியோர் முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்து, மரியாதைக்குரிய எஸ்.எஸ். ராமசாமிப் படையாச்சியார் அவர்களுக்கு சென்னையில் ஒரு மையப் பகுதியில் சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது, அன்றைக்கு நான் சென்னை மாநகரத்தின் மேயராக இருந்தேன். தலைவர் கலைஞர் அவர்கள், அவர்களையெல்லாம் என்னிடத்தில் அனுப்பி வைத்தார்கள். சென்னையில் மூன்று இடங்களைக் குறிப்பிட்டு, அவர்கள் என்னிடம் கொடுத்தார்கள். இறுதியாக, சென்னை ஹால்டா சந்திப்பில் ராமசாமி படையாச்சியாருக்கு சிலை அமைக்கப்பட்டது. முதலமைச்சர் கலைஞரும் - நானும் அந்த விழாவில் கலந்து கொண்டோம்.

வன்னியர் பொதுச்சொத்து வாரியம் அமைக்க வேண்டும் என்று வன்னியர் சமூகத்தின் தலைவர்கள், அன்றைக்கு முதலமைச்சர் கலைஞரிடம் கோரிக்கை வைத்தார்கள். 2009-ஆம் ஆண்டு அதற்கான ஆணை பிறப்பித்ததும் கழக அரசுதான்.அதன் தொடர்ச்சியாகத்தான், 21 சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம் கட்டி நான் திறந்து வைத்தேன்.

இன்றைக்கு அந்தத் தியாகத்தால் பயனடைந்த சிலர், எப்படியெல்லாம் துரோகிகளாக மாறியிருக்கிறார்கள் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும்! மருத்துவர் அய்யா ராமதாசு அவர்களுக்கு, இன்றைக்கு பலர் நம்பிக்கை துரோகம் செய்திருக்கலாம்; ஆனால், தலைவர் கலைஞரும் - நானும் - திராவிட முன்னேற்றக் கழகமும், அவரை என்றைக்கும் சமூகநீதி போராளியாகத்தான் பார்க்கிறோம்; மதிக்கிறோம்!

“தரம்கெட்டுப் பேசும் பழனிசாமிக்கு மக்களே தக்க பதிலடி கொடுப்பார்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இன்று N.D.A. என்ற பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் கூட்டணி என்பதே, துரோகிகளால் - தமிழ்நாட்டிற்கு புதிய துரோகங்கள் செய்ய அமைக்கப்பட்டிருக்கும் கூட்டணி! இவர்களின் துரோகப் பட்டியலை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் தெரியும்.

முதல் துரோகம் - தமிழ்நாட்டு மாணவர்களின் உயிர்களை பலிவாங்கியிருக்கும் நீட் தேர்வை அனுமதித்தார்கள். அடுத்து, அந்த நீட் தேர்விற்கு எதிராக சட்டம் இயற்றுவதாக நாடகமாடிவிட்டு, அந்தச் சட்டமசோதாவை ஓனராக இருக்கும் பா.ஜ.க. அரசு திருப்பி அனுப்பியதையே, சட்டமன்றத்தில் சொல்லாமல் ஓராண்டு காலம் மறைத்தார்கள். மாணவர்களுக்கு துரோகம் செய்தார்கள்.

அடுத்து, மின் கட்டண உயர்வுக்கு காரணமாக இருக்கும் உதய் மின் திட்டத்தில் கையெழுத்து போட்டும், அதேபோல், மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்தும் - போராடிய விவசாயிகளை கொச்சைப்படுத்தியும், விவசாயிகளுக்கு துரோகம் செய்தார்கள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், எப்படி உங்கள் சுருக்குப் பையில் இருக்கும் பணத்தை பறித்தார்களோ, அதேபோன்று, நூறு நாள் வேலைத்திட்டத்தை நாசப்படுத்தி, உங்களின் தினசரி வாழ்வாதாரத்திற்கு துரோகம் செய்தார்கள்.

அடுத்து, இன்றைக்கு நாமெல்லாம், “கீழடி தமிழர் தாய்மடி” என்று பெருமையாகச் சொல்கிறோம். அந்தக் கீழடி ஆய்வுகளையெல்லாம் குழி தோண்டி புதைக்கப் பார்த்து, தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தார்கள்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், வக்பு திருத்தச் சட்டம் கொண்டு வந்து, இசுலாமிய மக்களுக்கு துரோகம் செய்தார்கள்.

இப்போது, F.C.R.A. சட்டம் கொண்டுவந்து, சொத்துகளை அபகரித்து, கிறிஸ்தவச் சமுதாய மக்களுக்கு, துரோகம் செய்யத் துடிக்கிறார்கள்.

இந்திக்கும் - சமஸ்கிருதத்திற்கும் மட்டுமே அதிக நிதி ஒதுக்கி அன்னைத் தமிழுக்கு துரோகம் செய்கிறார்கள்!

மும்மொழிக் கொள்கையைத் திணித்தும் - அதை ஆதரித்தும் - ஐம்பது ஆண்டுகளாக, தமிழ்நாட்டைப் பாதுகாக்கும் இருமொழிக் கொள்கைக்கு துரோகம் செய்கிறார்கள்.

மெட்ரோ ரயில் திட்டம் - கல்வி நிதி உள்ளிட்டவற்றை தடுத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு துரோகம் செய்கிறார்கள்!

இதுதான் - N.D.A. கூட்டணி.

துரோகங்களால், தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கெடுக்க நினைக்கும் N.D.A… N.D.A. என்றால், உங்களுக்கு புரிவதுபோன்று ஈசியாக சொல்கிறேன். No Development Alliance–தான்... N – No; D–Development. A – Alliance. அதுதான் தற்போது N.D.A.

இவ்வளவு துரோகங்களையும் செய்துவிட்டு, கூச்சமே இல்லாமல், மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள்.

இவர்களின் சதித் திட்டத்தை முறியடித்து, தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்றுதான், நாம் சூப்பர்ஸ்டாரை களத்தில் இறக்கியிருக்கிறோம்! 2026 தேர்தலின் சூப்பர்ஸ்டார் யார்? தேர்தல் அறிக்கை… சூப்பர்ஸ்டார் யார்? “சூப்பர்ஸ்டார் யாருனு கேட்டா… சின்னக் குழந்தையும் சொல்லும்” தேர்தல் அறிக்கை என்று சொல்லும், அதுதான்..! நான் பிரசாரத்திற்குக் கிளம்புவதற்கு முன்பே, நம்முடைய சூப்பர்ஸ்டார் நமக்காகப் பிரசாரத்தை தொடங்கிவிட்டார்.

நன்றாக கவனியுங்கள்… வாக்கு எண்ணப்படும் மே 4 – அந்த நாளை கல்யாண நாள் என்று சொல்கிறார்கள். நான் தேர்தல் அறிக்கை வெளியிட்ட நாள்தான், நம் வெற்றிக்கு நிச்சயதார்த்த நாள்! அப்படிப்பட்ட அறிவிப்புகள் இந்தத் தேர்தல் அறிக்கையில் நிறைய இருக்கிறது. அதில் இருக்கும் டாப் அறிவிப்புகளை மட்டும் இப்போது சொல்கிறேன்.

அது என்ன? இல்லத்தரசி திட்டம்! ஃபர்ஸ்ட் பாலே சிக்சர்தான்! இல்லத்தரசி திட்டத்தில் எவ்வளவு ரூபாய்க்கு கூப்பன் தரப் போகிறோம்? எட்டாயிரம் ரூபாய்… இந்தக் கூப்பனை வைத்து, உங்களுக்குத் தேவைப்படும் வீட்டு உபயோகப் பொருளை, புதிதாகவும் வாங்கிக் கொள்ளலாம், இல்லையென்றால், பழைய பொருளை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய பொருளையும் வாங்கிக் கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்த கடையில், உங்களுக்குப் பிடித்த பிராண்ட்-ஐ வாங்கிக் கொள்ளலாம். என்னென்ன? வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோ-வேவ் அவன், மின் அடுப்பு இதையெல்லாம் வாங்குவதற்கு இப்போதே பெண்கள் எல்லாம் திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்ன வாங்கலாம் என்று இப்போதே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் உங்களின் கணவர் உள்ளிட்ட யாரையும் குறுக்கிட விட்டுவிடாதீர்கள்… நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு வாங்குங்கள். உங்கள் சாய்ஸ் அது… அவர்கள் எடுக்கட்டும் என்று விட்டுவிடாதீர்கள்.

நீங்கள் புடவை வாங்குவதற்கு கடைக்குச் செல்கிறீர்கள் அல்லவா… ஒரு புடவைதானே வாங்கப் போகிறீர்கள். ஆனால், அந்தக் கடைகளில் உள்ள எல்லாப் புடவைகளையும் ஷோகேஸ்–இல் இருந்து எடுத்து கீழே போட சொல்லி, ஒவ்வொன்றாக பிரித்துப் பார்த்து, தொட்டுப் பார்த்து, தடவிப் பார்த்து, ஒரு புடவையை வாங்க 250 புடவையை கீழே போடுவார்கள் அவர்கள். ஒவ்வொன்றாக கேள்விகளைக் கேட்பீர்கள். சில்க்கா? நைலக்சா? காட்டனா? தண்ணீரில் போட்டால் சுருங்குமா? சாயம் போகுமா? இவ்வளவு கேள்வி… ஒரு புடவை வாங்க… அவர்கள் கடையில் இருக்கும் லைட்டை எல்லாம் நம்பமாட்டீர்கள் நீங்கள். என்ன செய்வீர்கள்? அந்தப் புடவையை எடுத்துக் கொண்டு வெளியே சென்று வெயிலில் சூரிய வெளிச்சத்தில் பார்ப்பீர்கள். இதெல்லாம் உனக்கு எப்படி அனுபவம் என்று என்னை கேட்டுவிடாதீர்கள். எதார்த்த நிலையைச் சொல்கிறேன்.

என்னைப் பொருத்தவரை, நம்முடைய குடும்ப தலைவிகளின் வீட்டு வேலை சுமை குறைய வேண்டும். அதற்காகதான் இந்தத் திட்டமே…

எப்படி தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னபடியே கலர் டிவியும், கேஸ் அடுப்பும் கொடுத்தாரே! அவருடைய மகனான நானும், சொன்னபடியே இல்லத்தரசி திட்டத்தை நிறைவேற்றுவேன்.

இதுமட்டுமல்ல, தேர்தல் அறிக்கையில் மற்ற வாக்குறுதிகளையும் இன்னும் விரிவாக சொல்லியிருக்கிறோம். இது அனைத்தையும் செய்வோம் என்ற நம்பிக்கை, எனக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் இருக்கிறது. ஏனெனில், சொன்னதைச் செய்த கலைஞரின் மகன் நான்! சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் அதிரடியாக செய்யும் ஸ்டாலின் நான்! செய்தேன் அல்லவா அதிரடியாக... இந்தியாவே திரும்பிப் பார்ப்பது மாதிரியான கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில், காலையில் 5 மணிக்கே 5 ஆயிரம் ரூபாய் போட்டுவிட்டோம். எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி…

விடியல் பயணம், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

என்னைப் பொறுத்தவரையில், கோட்டையில் இருந்து மட்டும்தான், வேலை செய்ய வேண்டும்; ஆட்சி செய்ய வேண்டும் என்று இல்லை. மக்களுடன் மக்களாக – உங்களில் ஒருவனாக ஆட்சி செய்பவன். மாவட்ட அளவில் அரசு நிகழ்ச்சிகளுக்கு வந்தால்கூட, நிகழ்ச்சிக்கு வந்தோம், நலத்திட்ட உதவிகளை வழங்கினோம், கிளம்பினோம் என்று இருக்க மாட்டேன். மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் ரிவியூ மீட்டிங் போடுவேன். அந்த மாவட்டத்தில் இருக்கும் இடங்களுக்கு சர்பிரைஸாக ஆய்வுக்குச் செல்வேன். அவர்களுக்கே தெரியாது. திடீர் திடீர் என்று செல்வேன். உடன் இருக்கும் எங்கள் எம்.எல்.ஏ.க்களுக்கே தெரியாது. அமைச்சர்களுக்கே புரியாது. அங்கே ஏதாவது குறை இருந்தால் அதைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.

நம்முடைய விழுப்புரத்தில்கூட, ஒலக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டதை மறந்திருக்க மாட்டீர்கள். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்வதால்தான், அந்தந்த ஊர்களுக்கு தேவை என்ன என்பதை கவனித்து, செய்து கொடுக்க முடிந்தது.

இப்படி, நான் ஒவ்வொரு மேடையிலும் – ஒவ்வொரு ஊரிலும் நம்முடைய சாதனைத் திட்டங்களை பட்டியலிட்டுச் சொல்கிறேன் அல்லவா... இதுபோன்று, பழனிசாமியால் லிஸ்ட் போட முடியுமா? சொல்வதற்கு உண்மைகள் இல்லாத காரணத்தினால், பொய்களை வாந்தி எடுத்துக் கொண்டு இருக்கிறார்.

அம்மா பல்கலைக்கழகம் உள்ளிட்ட திட்டங்களை தடுத்துவிட்டோம் என்று பொய்களைக் கட்டவிழ்த்துவிட்டுப் போயிருக்கிறார்.

2021-ல் தேர்தல் அறிவித்த நாள் அன்றுதான், அந்தப் பல்கலைக்கழகத்தை அவசரம் அவசரமாக அறிவித்து, வெறும் பத்துக்கு நான்கு அளவில் அறிவிப்பு பலகை வைத்துவிட்டுச் சென்றார்கள். அந்தப் பல்கலைக்கழகம் உருவாக நிதி ஒதுக்கினார்களா? இல்லையே! நாங்கள்தான், மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று அந்தப் பல்கலைக்கழகத்திற்கான மாணவர்களை, புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைத்து, படிப்பைத் தொடர வைத்தோம்.

அதுமட்டுமல்ல, விழுப்புரத்தை அடுத்த கா.குப்பம் மற்றும் திண்டிவனத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் அண்ணா அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டு, மாணவர்கள் இன்றைக்கு படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அதேபோன்று, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு கலைக் கல்லூரி என, திருவெண்ணெய்நல்லூர், திருக்கோவிலூர், செஞ்சி, விக்கிரவாண்டி தொகுதி அன்னியூரில் புதிதாகக் கலைக் கல்லூரி தொடங்கப்பட்டு, ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பழனிசாமி அவர்களே... சாதனைக்கு மட்டுமல்ல; உங்களுடைய ஒவ்வொரு பொய்க்கும் என்னால் புள்ளிவிவரங்களோடு பதிலடி தர முடியும்.

தோல்வி பயத்தில் பழனிசாமி தினம் தராதரம் இல்லாமல் தரங்கெட்டு பேசுகிறார். இன்றைக்கு மாலை சென்னையில் என்னைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? தி.மு.க. ஆட்சியில் கொரோனா வந்திருந்தால், இவரே போயிருப்பார் என்று என்னை பேசியிருக்கிறார். பழனிசாமி அவர்களே... என் மரணத்தை பற்றி பேசுகிறீர்களே... மரணத்தைப் பார்த்து கலங்கக் கூடியவனோ, பயப்படுகிறவனோ நான் அல்ல. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், 1976-இல் நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, 23 வயதில் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமைக்கு ஆளானவன் நான். ஓராண்டு காலம் நெஞ்சுரத்தோடு சிறையில் இருந்தவன் நான். பொதுவாழ்க்கையில் எல்லாவற்றையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்று என்னை சிறைக்கு அனுப்பி வைத்தவர் என்னுடைய ஆருயிர் தலைவர் என்னுடைய தந்தை கலைஞர் அவர்கள். கொடுஞ்சிறையின் கொடுமைக்கே பயப்படாதவன் நான், இந்தக் கொரோனாவுக்கா பயப்படப் போகிறேன்.

கொரோனா மேல் அனைவரும் பெரும் அச்சத்தில் இருந்தபோதே, அதற்கான PPE உடை அணிந்து கொண்டு கொரோனா வார்டுக்குள் சென்றவன்தான் இந்த ஸ்டாலின். இதுவரை யாருக்கும் சொல்லாததை இப்போது சொல்கிறேன்… இவ்வாறு நான் கொரோனா வார்டுக்குள் செல்லப் போகிறேன் என்று யாரிடமும் நான் சொல்லவில்லை. கலெக்டர், அமைச்சர்கள், எல்.எல்.ஏ.க்கள், என் உதவியாளர்கள் என்று அனைவரும் இருந்தார்கள். ஆனால் யாரிடமும் நான் சொல்லவில்லை. இப்படி நான் சொல்லாமல் சென்ற காரணத்தினால், என் மனைவி துர்காவதி என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசாமல் இருந்தார். இது சத்தியம்... மக்களைக் காக்க எந்தளவுக்கும் துணிச்சலாக செல்லக்கூடியவன். அதற்கெல்லாம் பயந்து அரசியல் தலைவராக நான் இல்லை.

பழனிசாமியின் கீழ்த்தரமான பேச்சைக் கேட்ட பிறகு, என்னுடைய வருத்தம் எல்லாம் என்ன தெரியுமா? தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., இனமானப் பேராசிரியர் என்று எத்தனையோ பண்பாடுமிக்க பெருந்தலைவர்களிடம் நேரில் பழகக்கூடிய நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட நான், இன்று இவருக்கெல்லாம் பதில் சொல்லும் நிலை இருக்கிறதே என்று உண்மையிலேயே வருத்தப்படுகிறேன்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரான பின்பு பழனிசாமி வென்றதே இல்லை. தி.மு.க. தலைவரான பின் உங்கள் ஆதரவால் நான் தோற்றதே இல்லை.

பா.ஜ.க. எனும் பேரழிவை தமிழ்நாட்டிற்குள் கொண்டுவர நினைக்கும் அடிமை பழனிசாமிக்கு, தமிழ்நாட்டு மக்கள் கடுமையான தண்டனையை இந்தத் தேர்தலில் கொடுக்க வேண்டும்.

உண்மையில், நடக்கும் தேர்தல் என்பது, டெல்லிக்கும் - தமிழ்நாட்டுக்கும் நடக்கும் தேர்தல். தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பத்து தோல்வி பழனிசாமிக்கு, பதினோராவது தோல்வியை கொடுத்து விரட்ட வேண்டும். டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என்று சொல்லிக் கொண்டு, டெல்லியின் ரிமோட் கண்ட்ரோலுக்கு ஆடும் அடிமைகள் தமிழ்நாட்டை ஆளக் கூடாது! தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் ஆணவ பா.ஜ.க.வும், அடிமை அ.தி.மு.க.வும் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும். அதற்கு, திராவிட முன்னேற்றக் கழகம்தான் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும்.

கலைஞரின் மகனாக கேட்கிறேன்.

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய, விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் டாக்டர் லட்சுமணன் அவர்களுக்கும், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் டாக்டர் பொன். கெளதம சிகாமணி அவர்களுக்கும், செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் செஞ்சி மஸ்தான் அவர்களுக்கும், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் அன்னியூர் சிவா அவர்களுக்கும், வானூர் சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் கெளதம் திராவிட மணி அவர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும்.

அதே போன்று, மயிலம் சட்டமன்றத் தொகுதியில் நமது தோழமைக் கட்சியான தே.மு.தி.க.-வின் வெல்லும் வேட்பாளர், நினைவில் வாழும் அருமை நண்பர் கேப்டன் அவர்களின் அன்பைப் பெற்ற எல். வெங்கடேசன் அவர்களுக்கு ‘முரசு’ சின்னத்தில் நீங்கள் ஆதரித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியில் நமது தோழமை இயக்கமாம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த, எழுச்சித் தமிழர், கலைஞரால் மேஜர் ஜெனரல் என்று அழைக்கப்பட்ட திருமாவளவன் அவர்களின் அன்பைப் பெற்ற வெல்லும் வேட்பாளர் வன்னி அரசு அவர்களுக்கு, ‘பானை’ சின்னத்தில் நீங்கள் உங்களுடைய பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த விருப்பமாக அமையவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில் சாதனைகளால் சிறக்கும் தமிழ்நாடு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு உருவாகும்! அதற்கு உங்களுடைய இந்த ஸ்டாலின் கேரண்டி!

தமிழ்நாடு மென்மேலும் வளர்ந்திட, திராவிட மாடல் நல்லாட்சி தொடர்ந்திட, ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை!

வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

banner

Related Stories

Related Stories