அரசியல்

“கல்லினும் கொடிய மனம் கொண்ட எடப்பாடி பழனிசாமி!” : ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்!

“இமை கண்ணைக் காப்பதைப் போல கலைஞரை பாதுகாத்த தி.மு.கழகத் தலைவர் ஸ்டாலின் மீது அக்கிரமமான அயோக்கியத்தனமான அபாண்டப் பழியைச் சுமத்தி உள்ளார்.”

“கல்லினும் கொடிய மனம் கொண்ட எடப்பாடி பழனிசாமி!” : ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

“கண் இமைபோல் கலைஞரை காத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி அபாண்டமாக பழி சுமத்துவதா?” என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

எடப்பாடி பழனிசாமி ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார். இமை கண்ணைக் காப்பதைப் போல கலைஞரை பாதுகாத்த தி.மு.கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது அக்கிரமமான அயோக்கியத்தனமான அபாண்டப் பழியைச் சுமத்தி உள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடித்தளத்தில் வட்டச் செயலாளர் முதல் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி, திருமணமான ஐந்தாவது மாதத்திலேயே மிசா கைதியாக காவல் துறை கொடுஞ் சிறையில் அடைத்தபோது, சகோதரர் ஸ்டாலின் கடும் சித்ர வதைக்கு ஆளானார்.

தியாக பிம்பமாகவே அவர் பொதுவாழ்வில் இளைஞர் அணியில் பங்கேற்று தன் சீரிய உழைப்பால் அதன் தலைவராகி, அல்லும் பகலும் அயராது பாடுபட்டு உழைப்பின் சிகரமாக உயர்ந்து சென்னை மாநகராட்சியின் மேயராகவும், அமைச்சராகவும், துணை முதல்வராகவும், கழகத்தின் கோடானு கோடி தோழர்களின் விருப்பத் திற்கு ஏற்ப முதல் அமைச்சர் பொறுப்பினையும் ஏற்று அந்தப் பதவிக்கு புகழ் மகுடம் சூட்டினார்.

தன்னை ஆளாக்கிவளர்த்து வார்ப்பித்த தன் தந்தையும், கழகத்தின் தலைவருமான கலைஞர் பிணிவயப்பட்ட காலத்தில் கண்ணை இமை காப்பது போல் காத்து வந்தார். தமிழகத்தின் காவல் தெய்வமாகத் திகழ்ந்த கலைஞர் மறைந்தபோது, அவர் அறிஞர் அண்ணா மறைந்த வேளையில் எழுதிய நெஞ்சு உருக்கும் இரங்கல் பாவில் வேண்டிக் கொண்டபடி அறிஞர் அண்ணாவின் நினைவிடத்திற்கு அருகிலேயே தி.மு.கழகத் தலைவரை நல்லடக்கம் செய்ய துடியாய் துடித்தார் ஸ்டாலின்.

“கல்லினும் கொடிய மனம் கொண்ட எடப்பாடி பழனிசாமி!” : ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்!

அதற்காக தன் சுயமரியாதையையும் பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கே சென்று உள்ளம் உருகும் விதத்தில் வேண்டுகோள் விடுத்தும் எடப்பாடி பழனிசாமி ஈவு இரக்கம், தயவு தாட்சண்யம், மனிதாபிமானம் சற்றும் இன்றி தளபதி ஸ்டாலின் வேண்டுகோளை நிராகரித்து உதாசினப்படுத்தினார்.

எந்த நிலையிலும் விடா முயற்சியைக் கைவிடாத தளபதி ஸ்டாலின், வழக்கறிஞர்கள் மூலம் உயர்நீதிமன்றத்தை நாடி தமிழினத் தலைவர் கலைஞரை அண்ணா கண் உறங்கும் இடத்திற்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யும் தீர்ப்பை நீதியரசர்கள் வழங்கிய செய்தியை செவியுற்ற மாத்திரத்தில் கண்களில் கண்ணீர் மல்க நெஞ்சுருகி கதறினார். உலகெங்கும் உள்ள கோடானு கோடி தமிழர்கள் இதைக் கண்ணுற்று மனம் கலங்கினர்.

எச்சரிக்கை செய்கிறேன்!

கல்லினும் கொடிய மனம் கொண்ட எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாதபடிகளுக்கு சேவகம் செய்த தன்மானமற்ற ஒரு நபராவார். இனிமேல் இதுபோன்ற அவதூறு கருத்துகளை அவர் கூறுவாரானால் என் தாக்குதல்களுக்கு அவர் பதைபதைத்து பின்னங்கால் பிடரியில் அடிபட அரசியல் களத்தில் ஓட நேரிடும் என எச்சரிக்கை செய்கிறேன்.

இவ்வாறு வைகோ அவர்கள் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories