
தேர்தல் தோல்வி பயத்தில் இருக்கும் பழனிசாமி, நாவடக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என தி இந்து நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி இந்து நாளிதழ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள சிறப்பு நேர்காணலில், ”மாநில நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டுவரும் அதிமுக-பாஜக கூட்டணியுடன், திமுக அரசின் நலத்திட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் தங்கள் தீர்ப்பை திமுகவுக்கு சாதகமாக வழங்குவார்கள் என்றும், தமிழ்நாடு வெளியில் இருந்து இயக்கப்படுவதை திமுக ஒருபோதும் அனுமதிக்காது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய கட்சிகளின் வரவு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள முதலமைச்சர், ஒவ்வொரு தேர்தலின் போதும், புதிய கட்சிகள் வந்து செல்வது வழக்கம் எனக் கூறினார். முத்தமிழறிஞர் கலைஞரின் மறைவைத் தொடர்ந்து தலைமைப் பொறுப்பை தான் ஏற்றதாகவும், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தலைப் போல், வரும் தேர்தலிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார். திராவிட மாடல் அரசு, சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்குமான திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளதாகவும், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் இத்திட்டங்கள் மூலம் நேரடிப் பயன்களை பெற்றுள்ளதாகவும் கூறிய முதலமைச்சர், தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்புடன் திகழும் ஒரு அரசியல் இயக்கமாகத் திமுக தொடர்ந்து இயங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
ஒன்றிய பாஜக அரசுடன் சமரசம் செய்து கொண்டால், மாநிலத்திற்கு கூடுதல் பயன்கள் கிடைத்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள முதலமைச்சர், இந்த கேள்வி தனக்கு வியப்பளிப்பதாகவும், மாநிலத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்து, ஒன்றிய அரசுடன் சமரசம் செய்து கொள்வது ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும், அவ்வாறு செய்வது மாநில நலன்களுக்கு தீங்கையே விளைவிக்கும் என்றும் கூறினார். ஒன்றிய அரசுடன் சமரசம் செய்து கொண்ட அதிமுக ஆட்சியின் போது தமிழ்நாட்டின் வளர்ச்சி தடைப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அனைத்து மாநிலங்களுக்குமான பிரதமராக மோடி செயல்படவில்லை என்றும், பாஜக ஆளும் மாநிலங்களுக்கான பிரதமராக அவர் தன்னை சுருக்கிக்கொண்டுவிட்டார் என்றும் முதலமைச்சர் விமர்சித்தார். பாஜக ஆளும் மாநிலங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி எதையும் அடையாததால், அதன் இரட்டை என்ஜின் அரசு என்ற முழக்கம் பொய்யானது என்றும் அவர் கூறினார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் சிறுபான்மையினருக்கு எதிரானது எனத் தெரிவித்துள்ள முதலமைச்சர், மாநில மொழிகளைப் புறக்கணித்து இந்தியைத் திணிப்பது, பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதியை மறுப்பது, ஆளுநர்கள் மூலம் மாநில அரசு நிர்வாகத்தை முடக்குவது போன்ற ஒன்றிய அரசின் செயல்கள், அரசியலமைப்பின் அடிப்படைப் கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும், ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான திமுகவின் போராட்டம் ஒட்டுமொத்த தேசத்திற்குமானது என்றும் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளை எதிர்த்து வரும் நிலையிலும், அண்டை நாடுகளிடமிருந்து எப்போதெல்லாம் அச்சுறுத்தலோ அல்லது ஆக்கிரமிப்போ ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் — தேசத்தின் ஒரு அங்கமாக — தி.மு.க. ஒன்றிய அரசுடன் முழுமையாக ஒத்துழைத்துள்ளதாகவும் இதனை கடமையாகக் கருதுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தனது எதிரான எடப்பாடி பழனிசாமியின் பேச்சுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தோல்வி பயம் காரணமாகவே பழனிசாமி பொறுப்பற்ற முறையில் பேசி வருவதாக கூறினார்.
தனது வாழ்நாளில் 81 ஆண்டுகளைப் பொதுவாழ்வில் கழித்த முத்தமிழறிஞர் கலைஞர், தமிழ் மொழி, சமூக நீதி மற்றும் மாநில உரிமைகளுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர் என்றும் நினைவுகூர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் இறுதி நாட்களும், அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகளும் மருத்துவ அறிக்கைகள் வாயிலாகப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பழனிசாமி கலைஞரைப் பற்றி எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி விமர்சித்தபோது, அவருடைய மகனாக மட்டுமல்லாமல் — திமுக தொண்டர்களில் ஒருவராக அதைச் சகித்துக்கொண்டு அமைதியாக தன்னால் இருக்க முடியவில்லை என்றும் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் தோல்வி பயத்தில் இருக்கும் பழனிசாமி, நாவடக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.






