தமிழ்நாடு

மாவட்டம்தோறும் ‘செஸ் பயிற்சி மையங்கள்' : விளையாட்டு துறைக்கு 19 தேர்தல் வாக்குறுதி கொடுத்த தி.மு.க!

மாவட்டம்தோறும் ‘செஸ் பயிற்சி மையங்கள்' அமைக்கப்படும் என தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியாக அளிவித்துள்ளது.

மாவட்டம்தோறும் ‘செஸ் பயிற்சி மையங்கள்' : விளையாட்டு துறைக்கு 19 தேர்தல் வாக்குறுதி கொடுத்த தி.மு.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2026 சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. எல்லோரும் எதிர்பார்த்தபடி தி.மு.க தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது.

அதில் விளையாட்டு துறைக்கு மட்டும் 19 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

1. திராவிட மாடல் 1.0 அரசு 19 உலகளாவிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, தமிழ்நாட்டை உலக விளையாட்டு வரைபடத்தில் இடம்பிடிக்கச் செய்தது. இதனைத் தொடர்ந்து தொய்வில்லாது நடத்தி, தமிழ்நாட்டில் அனைத்து விளையாட்டுகளும் தழைத்தோங்குவது உறுதிசெய்யப்படும்.

2. விளையாட்டுத்துறையில் ஆர்வமும் திறமையும் உள்ள இளைஞர்களுக்காக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் உண்டு உறைவிட விடுதிகளில் (Sports Hostels) உள்ள விளையாட்டு வீரர்களின் அறைகள் குளிரூட்டப்பட்ட அறைகளாக மேம்படுத்தப்படும்.

இந்தக் கூடுதல் வசதி செய்து தருவதன் மூலம் அவர்கள் பயிற்சிகளில் சிறப்பாக ஈடுபட்டு திறமைகளை மேலும் வளர்ப்பதற்கும், விளையாட்டுப் போட்டிகளில் சாதிப்பதற்கும் உதவும்.

3. வளர்ந்து வரும் இளம் விளையாட்டு வீரர்களின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவித்திடும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் கூடிய தரம் வாய்ந்த விளையாட்டு விடுதிகள் அமைக்கப்படும்.

4. செஸ் விளையாட்டில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டில், மேலும் நூற்றுக்கணக்கான செஸ் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கும் வகையில் மாவட்டம்தோறும் ‘செஸ் பயிற்சி மையங்கள்' அமைக்கப்படும்

5. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு 5 கோடி ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 3 கோடி ரூபாயும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 2 கோடி ரூபாயும் வழங்கப்படும்.

6. ஒலிம்பிக் தனிநபர் போட்டிகளில் பங்குபெறத் தகுதிபெறும் வீரர்களுக்கு 20 லட்சம் ரூபாயும், குழுப் போட்டிகளில் பங்குபெறத் தகுதி பெறுவர்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

7. ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்கப்படும்.

8. அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களிலும் உலகத் தரத்திலான 400 மீட்டர் Synthetic தடகள ஓடுதளங்கள் அமைக்கப்படும்.

9. கூடைப்பந்து, கைப்பந்து, பேட்மிண்டன், தற்காப்புக் கலை, வாள்வீச்சு விளையாட்டுகளுக்கான பல்நோக்கு வசதிகொண்ட உள்விளையாட்டு அரங்குகள் அனைத்து மாவட்டங்களிலும் இருப்பதை உறுதி செய்யப்படும்.

10. இளைஞர்களின் விளையாட்டுப் பங்களிப்பினை ஊக்கப்படுத்திடும் வகையில் ஒலிம்பிக் தரத்திலான ஸ்கேட்டிங் பூங்காக்கள் நிறுவப்படும்.

11. நீச்சல் விளையாட்டுகளில் விளையாட்டு வீரர்கள் உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகளைப் பெற்றிடும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய நீச்சல் குளங்கள் அமைக்கப்படும்.

12. சிலம்பம், களரிப்பயற்று, மல்லர்கம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள், குத்துச்சண்டை, கராத்தே, டேக்வாண்டோ, ஜூடோ உள்ளிட்ட தற்காப்புக் கலைகளுக்கான பயிற்சிக் கூடங்கள் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவப்படும்.

13. இளம் குழந்தைகளின் விளையாட்டுத் திறமைகளை இளம் வயதிலேயே கண்டறிந்து அவர்களின் திறமைகளை மேம்படுத்தவும் மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு ஆயத்தப்படுத்திடவும் 8 வயதுக்குட்பட்டவர்கள், 10 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்டவர்கள் என வயது வாரியாக சிறுவர்களுக்கான போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுவதுடன் நீண்ட கால செயல்திட்டங்களும் உருவாக்கப்படும்.

14. தற்போது நடத்தப்படும் “இது நம்ம ஆட்டம்” திட்டம் மாநிலம் முழுவதும் மேலும் விரிவாக்கப்படும்.

15. கிராமப்புற மக்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்திட அனைத்து ஊராட்சிகளிலும் கட்டமைப்புடன் கூடிய விளையாட்டுக் குழுக்கள் நிறுவப்படும்.

16. SDAT விளையாட்டு விடுதிகளில் தங்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ரூ.500 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

17. பொருளாதாரத்தில் நலிவடைந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ரூ.6,000-லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்படும்.

18. தமிழ்நாட்டில் பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகள் நடத்துவதன் மூலமாகவும், உலகத் தரத்திலான உட்கட்டமைப்பை உருவாக்குதல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகள் மூலமாகவும் தமிழ்நாட்டை முதன்மை விளையாட்டு சுற்றுலா மையமாக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

19.அரசு கூர்நோக்கு இல்லங்களில் உள்ளவர்களை விளையாட்டின் மூலம் நெறிப்படுத்தும் வகையில் அனைத்து கூர்நோக்கு இல்லங்களிலும் விளையாட்டுக் கட்டமைப்பினை ஏற்படுத்தி அவர்களுக்கென சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.

banner

Related Stories

Related Stories