
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
கடந்த 5 ஆண்டுகளில் MRB மூலம் 13,093 பேருக்கும், TNPSC மற்றும் தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கும் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்கள் 17,708.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் 1,071 உதவி மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி தெரிவித்த தகவல்.
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (13.03.2026) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்ககத்தில், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,071 உதவி மருத்துவர்களுக்கு பணி ஆணைகளை வழங்குவதற்கான கலந்தாய்வு தொடங்கப்பட்டு, பணிநியமன ஆணைகளை வழங்கினார். பிறகு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களுக்கு பணிநியமன ஆணைகள் படிப்படியாக வழங்கப்பட்டு பணியிடங்கள் அதிக அளவில் நிரப்பப்பட்டு தற்போது காலிப்பணியிடங்கள் இல்லாத துறை என்கின்ற வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பெற்று இருக்கிறது. கடந்த நவம்பர் திங்கள் 21 ஆம் தேதி 1,100 உதவி மருத்துவர்களுக்கு பணியிடங்கள் நிரப்புவதற்குரிய அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அதற்கான தேர்வு கடந்த ஜனவரி திங்கள் 25ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 25,172 பேர். தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 20,867 பேர். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 16,968 பேர்.
தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, இனசுழற்சி முறை என்று தேர்வு செய்யப்பட்டு இறுதியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் 1,071 பேர். 1,071 பேருக்கான இறுதிப் பட்டியல் நேற்று இணையதளம் வாயிலாக வெளியிடப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இன்று கலந்தாய்வு நடத்தி அவரவர் விரும்பும் இடங்களுக்கே சென்று பணி ஆணைகள் தரும் பணி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 பேர் ஆகும். கலந்தாய்வு நடத்தப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் இன்று வழங்கப்பட்டது. இவர்களுக்கான கலந்தாய்வு தொடர்ந்து நடத்தப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட உள்ளது.

இத்துறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 13,093 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தேசிய நலவாழ்வு குழுமம் போன்ற பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஒட்டுமொத்தமாக இந்த 5 ஆண்டுகளில் பணியில் நியமிக்கப்பட்ட புதிய பணியாளர்களின் எண்ணிக்கை 48,418 பேர் ஆகும். புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்கள் என்கின்ற வகையில் 17,780 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையுடன் கலந்தாய்வு என்கின்ற வகையில் பதவி உயர்வு மற்றும் பணியிடமாறுதல் மூலம் ஆணை வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,985 ஆகும்.
இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் – 100 எலும்பு மஜ்சை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து சாதனை
இன்னொரு மகிழ்ச்சியான செய்தி, சற்றுமுன்பு சென்னை இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், மருத்துவ பயனாளி ஒருவரை சந்திக்க சென்றிருந்தேன், அங்கு காஞ்சிபுரம் பகுதியைச் சார்ந்த 5 வயதுடைய சிறுவன் முகிலன் என்பவருக்கு Bone Marrow Transplation செய்யப்பட்டு 100வது குழந்தையாக கண்டறியப்பட்டுள்ளார். தென்னிந்தியாவில் இருக்கின்ற அரசு மருத்துவமனைகளில் Bone Marrow Transplation என்பது தமிழ்நாட்டில் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை 100வது குழந்தைக்கு Bone Marrow Transplation செய்து மகத்தான சாதனை செய்து இருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வேலூரில் இருக்கின்ற CMC மருத்துவமனை நிர்வாகம் மட்டுமே Bone Narrow Transplation அதிகமாக செய்து வருகிறது. அந்தவகையில் இன்று சென்னை இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் 100 குழந்தைகளுக்கு வாழ்வளித்துள்ளனர். இந்த சிகிச்சைக்கு ஆகும் செலவு என்பது ரூ.20 இலட்சம் முதல் ரூ.50 இலட்சம் வரை ஆகும். இந்த முழு தொகையும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. அரசு மருத்துவத்துறை வரலாற்றில் இது மகத்தான சாதனை ஆகும்.

மேலும் இன்று உதவி மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியதன் மூலம் மருத்துவத்துறையில் மருத்துவர்கள் காலிப்பணியிடம் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பாக முதுநிலை மருத்துவர்கள் என்கின்ற வகையில் 250 பேர் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
எனவே, சிறப்பு மருத்துவர்கள் பணியிடமும் காலி இல்லை என்கின்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து மருத்துவம் சார்ந்த பணியிடங்களும் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் 1,466 பேருக்கு பணிநியமனம் ஆணைகள் வழங்கப்பட இருக்கிறது. இதுதொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து அந்த வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்த வழக்குகள் முடிவுற்றபிறகு அவர்களுக்கும் பணி ஆணைகள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே புதிய பணிநியமனங்கள் என்பது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் நிறைவுற்று இருக்கிறது. எனவே புதிய பணி ஆணைகள் பெறும் உதவி மருத்துவர்களுக்கு இத்துறையின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.






