
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 13.03.2026 அன்று தலைமைச் செயலகத்தில், 2025-26 ஆம் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் முதற்கட்டமாக வரலாறு கல்வியியல், மனித உரிமைகள், கடல் உயிரியியல் மற்றும் வனவிலங்கு உயிரியியல் ஆகிய 4 பாடப் பிரிவுகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில “புதுமைப் பெண்” திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயில “தமிழ்ப்புதல்வன்” ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்குதல்;
அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கையில் 7.5 விழுக்காடு முன்னுரிமையின் அடிப்படையில் இடஒதுக்கீடு, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் தமிழ்நாடு உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கையில் 47 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 2708 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நியமனம் செய்வதற்கு அரசால் அனுமதித்து ஆணை வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 16.10.2025 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையின்படி, பணிநாடுநர்களால் இணையவழி வாயிலாக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 61 பாடப் பிரிவுகளுக்கான 2708 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எழுத்துத் தேர்வு 27.12.2025 அன்று நடத்தப்பட்டு, முதற்கட்டமாக 4 பாடப் பிரிவுகளுக்கு மட்டும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் பணிகள் நிறைவு பெற்று, பணிநாடுநர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நான்கு பாடப்பிரிவுகளில் 5 நபர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
மீதமுள்ள பணியிடங்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நடத்தி, தெரிவு செய்யப்படும் நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் விரைவில் வழங்கப்படும்.






