
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.03.2026) தலைமைச் செயலகத்தில், பதிவுத்துறை சார்பில் 14 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் புதியதாக கட்டப்பட்டுள்ள 7 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் புதியதாக உருவாக்கப்பட்ட கோயம்புத்தூர் (வடக்கு) பதிவு மாவட்டத்தில் சர்க்கார்சாமக்குளம் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் தருமபுரி பதிவு மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
பதிவுத்துறை வாயிலாக மக்கள் தங்கள் சொத்துக்களின் மீதான உரிமையை தமது பெயரில் பதிவு செய்தல், திருமணத்தைப் பதிவு செய்தல், சங்கங்கள், சீட்டுகள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களை பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பதிவுத்துறை செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
=> 7 புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தல் :
வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கையில் புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, கோயம்புத்தூர் மாவட்டம் – கிணத்துக்கடவு மற்றும் சூலூர், தூத்துக்குடி மாவட்டம் – ஏரல், விழுப்புரம் மாவட்டம் -திருவெண்ணைநல்லூர், திருவள்ளூர் மாவட்டம் – பொன்னேரி, திருப்பத்தூர் மாவட்டம் - 2 எண் இணை சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் சிவகங்கை மாவட்டம் – திருப்புவனம் என மொத்தம் 14 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் பதிவுத்துறைக்கு கட்டப்பட்டுள்ள 7 புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

=> சர்க்கார்சாமக்குளம் மற்றும் பாப்பாரப்பட்டி ஆகிய இடங்களில் புதியதாக உருவாக்கப்பட்ட 2 சார்பதிவாளர் அலுவலகங்களை திறந்து வைத்தல் :
2025-2026 ஆம் ஆண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கையின் அறிவிப்பை தொடர்ந்து கோயம்புத்தூர் (வடக்கு) பதிவு மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 14 கிராமங்களில் 6 கிராமங்களை பிரித்து அந்த 6 கிராமங்களை உள்ளடக்கி கோயம்புத்தூர் (வடக்கு) பதிவு மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட சர்க்கார்சாமக்குளம் சார்பதிவாளர் அலுவலகம்;
தருமபுரி பதிவு மாவட்டம், பாலக்கோடு சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து 12 கிராமங்கள், பென்னாகரம் சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து 2 கிராமங்கள், தருமபுரி (மேற்கு) சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து 5 கிராமங்கள் மற்றும் தருமபுரி 2 எண் இணை சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து 3 கிராமங்கள் பிரித்து மொத்தம் 22 கிராமங்களை உள்ளடக்கி தருமபுரி பதிவு மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட பாப்பாரப்பட்டி சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றினை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்படுவதன் மூலம் பொதுமக்களுக்கு விரைவான மற்றும் சிறப்பான சேவைகளை அளிக்க இயலும்.








