தமிழ்நாடு

தமிழ்நாட்டின் வரலாற்றில் மருத்துவத்துறையில் காலிப் பணியிடங்கள் இல்லாத சூழல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழ்நாட்டில் மருத்துவத்துறை வரலாற்றில் காலிப் பணியிடங்கள் இல்லாத சூழல் நிலவுவதாக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பணிநியமன ஆணைகள் வழங்கிய விழாவில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பெருமிதம்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் மருத்துவத்துறையில் காலிப் பணியிடங்கள் இல்லாத சூழல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (07.03.2026) சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், 115 மருத்துவ அலுவலர்கள், 83 கண் மருத்துவ உதவியாளர்கள், 75 ஆய்வக நுட்புநர்கள் ஆகியோருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி, 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான சிறந்த குடும்ப நல செயல்பாடுகளுக்கு சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கி விழா பேரூரையாற்றினார்கள்.

விழாவில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு தொடர்ச்சியாக புதிய பணிநியமன ஆணைகள் வழங்குவதாக இருந்தாலும், புதிய பதவி உயர்வுகள் அளிக்கும் நிகழ்வுகளாக இருந்தாலும், புதிய பணியிடங்களை தோற்றுவிக்கும் நிகழ்வுகளாக இருந்தாலும், கலந்தாய்வு மூலம் பணியிடமாறுதல்கள் என்றாலும் மிகுந்த வெளிப்படை தன்மையோடு தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) சார்பில் தொடர்ச்சியாக இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு இத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை எல்லாம் ஒவ்வொன்றாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு இடையில் பல்வேறு வகையிலான வழக்கு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள போதும் அனைத்து வழக்குகளையும் சட்ட ரீதியாக எதிர்கொண்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் மருத்துவத்துறை வரலாற்றில் மருத்துவப் பணியிடங்கள் காலியாக இல்லாத சூழல் என்பது இந்த காலக்கட்டத்தில் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த துறைக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னாள் இந்த நிர்வாகம் பொறுப்பேற்ற போது உண்மையில் மிக பெரிய அலவிளான அதிர்ச்சி பெரும் பகுதிகளான இடங்களில் மருத்துவப்பணியிடங்கள் காலி என்ற விவரம் ஏறத்தாழ 30, 40 சதவீதம் காலிப்பணியிடங்கள் மாவட்ட வாரியாக, தொகுதி வாரியாக அல்லது ஒட்டுமொத்த மருத்துவமனைகளிலும் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு வந்த நிலையில் அறிந்தோம்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் மருத்துவத்துறையில் காலிப் பணியிடங்கள் இல்லாத சூழல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

குறிப்பாக 400க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் ஆய்வு செய்தபோதும் ஆங்காங்கே இருந்த மருத்துவக் கட்டமைப்புகளில் காலிப்பணியிடங்கள் என்பது மிகப் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது. தற்போது அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட்டு உள்ளது.

பணிநியமன ஆணைகள் அந்தவகையில் இன்று வரை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) சார்பில் 10,625 பேரும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக 2,429 பேரும், தேசிய நலவாழ்வு குழுமம் (NHM) சார்பில் 14,272 பேரும், புதிதாக உருவாக்கப்பட்ட 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்களுக்காக மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் மூலம் 2,832 பேரும், 50 புதிய நகர்ப்புற, ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 506 பேரும், பணிநிரந்தரம் செய்யப்பட்ட செவிலியர்கள் 8,834 பேருக்கும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கருணை அடிப்படையிலான பணிநியமனங்கள் என்கின்ற வகையில் 281 பேருக்கும், மருத்துவத்துறை வரலாற்றில் கடந்த 5 ஆண்டுகளில் புதிய பணிநியமனங்கள் என்கின்ற வகையில் பணிநிரந்தரம் செய்யப்பட்டவர்கள் என்கின்ற வகையில் 39,779 பேருக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 17,780 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மேலும் பதவி உயர்வு மற்றும் பணியிடமாறுதல் கலந்தாய்வு மூலம் 59,985 பேர் பயன் பெற்றிருக்கிறார்கள்.

அந்தவகையில் இன்று 115 பேருக்கு பணி சாரா பட்டதாரிகள் என 127 மருத்துவர்கள் பணிக்காலக்கெடு முடிந்த நிலையில் பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு நிரந்தர பணி வழங்குவதற்கு ஏதுவாக மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு 115 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

தேர்ச்சி பெற்ற 115 பேருக்கு இன்று பணி ஆணைகள் வழங்கப்பட்டது. மேலும் கண் மருத்துவ உதவியாளர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்ற 83 பேருக்கு இன்று பணி ஆணைகள் வழங்கப்பட்டது. இவர்களில் 75 பேர் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறைக்கும், 6 நபர்கள் மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநரகத்திற்கும், 2 பேர் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அண்மையில் கூட 1100 உதவி மருத்துவர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 25,000த்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தற்போது உதவி மருத்துவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படுவது என்பது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

அதேபோல் முதுநிலை மருத்துவர்கள் பணியிடங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலைப்பெற்று, இன்றைக்கு முதுநிலை மருத்துவர்களுக்கும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு அவர்களையும் இந்த துறையில் இணைப்பது என்கின்ற வகையில் 299 முதுநிலை மருத்துவர்கள் MRB மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு 250 பேர் தேர்வாகியிருக்கிறார்கள். இவர்களுக்கு வருகின்ற 11.03.2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்கள்.

ஊதிய உயர்வு அறிவிப்பு

இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு தற்காலிமாக அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வந்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்தவகையில் இன்று ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிடுவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

2026-27 ஆம் ஆண்டிற்கான ஊதிய உயர்வு என்பது ஏற்கெனவே அவர்கள் பெற்று வருகின்ற ஊதியங்களின் அடிப்படையில் ரூ.169 கோடி கூடுதல் செலவினம் என்கின்ற வகையில் 41,000 ஒப்பந்த பணியாளர்கள் பயன்பெறுகின்ற வகையிலான அறிவிப்பை நாங்கள் வெளியிடுவதில் பெருமைக் கொள்கிறோம்.

இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு சித்தா மற்றும் ஆயுஷ் மருத்துவர்கள் பெற்று வந்த சம்பளம் ரூ.26,000/- ஆக இருந்தது. அவர்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்கள் பெற்று வந்த சம்பளம் ரூ.26,000/- என்பதனை ரூ.34,000/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. வரும் மே மாதம் முதல் இந்த சம்பளம் ரூ.40,000/- ஆக உயர்த்தப்படவிருக்கிறது. பல் மருத்துவர்கள் இந்த அரசு பொறுப்பேற்கும்போது ரூ.26,000/- சம்பளம் பெற்று வந்தார்கள்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் மருத்துவத்துறையில் காலிப் பணியிடங்கள் இல்லாத சூழல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

பிறகு ரூ.34,000/- ஆக உயர்த்தப்பட்டது. இவர்களுக்கும் வரும் மே மாதம் முதல் மாதச் சம்பளம் ரூ.40,000/- ஆக உயர்த்தி வழங்கப்படவிருக்கிறது. அதேபோல் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்கள் (IT coordinators) சம்பளம் இந்த அரசு பொறுப்பேற்பதற்கு முன் ரூ.16,500/- பெற்று வந்தார்கள். பிறகு ரூ.21,000/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. தற்போது அவர்களுக்கும் வரும் மே மாதம் முதல் ரூ. 27,500/- ஆக சம்பளம் உயர்த்தி வழங்கப்பட உள்ளது. அதேபோல் தாய்சேய் நல அலுவலர் (Maternal Child Health Officers) ஏற்கெனவே அவர்கள் பெற்று வந்த சம்பளம் ரூ.15,000/- இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு ரூ.19,000/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டது.

தற்போது அவர்களுக்கு ரூ.22,000/- ஆக வழங்கப்பட உள்ளது. அதேபோல் செவிலியர்களைப் பொறுத்தவரை அவர்கள் மாதச் சம்பளம் ரூ.14,000/- பெற்று வந்தார்கள். பிறகு அவர்களுக்கு ரூ.18,000/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. தற்போது அவர்களுக்கும் ரூ.21,000/- ஆக சம்பளம் உயர்த்தி வழங்கப்பட உள்ளது. மருந்தாளுநர்கள் ஏற்கெனவே ரூ.12,000/- சம்பளம் பெற்று வந்தார்கள். இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு அவர்களுக்கு ரூ.15,000/- என்கின்ற வகையில் சம்பளம் வழங்கப்பட்டது.

தற்போது அவர்களுக்கு ரூ.18,000/-ஆக சம்பளம் உயர்த்தி வழங்கப்பட்டது. பெண் துணை செவிலியர்கள் ஏற்கெனவே மாதச் சம்பளம் ரூ.11,000/- வழங்கப்பட்டு வந்தது. இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு அவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.14,000/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. தற்போது அவர்களுக்கு ரூ.17,500/- ஆக சம்பளம் உயர்த்தி வழங்கப்படவிருக்கிறது.

இயன்முறை சிகிச்சையாளர்கள் ஏற்கெனவே ரூ.10,000/- மாதச் சம்பளமாக பெற்று வந்தார்கள். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ரூ.13,000/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. தற்போது ரூ.23,000/- ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

அதேபோல் ஆய்வக நுட்புநர்கள் அவர்கள் முதலில் பெற்று வந்த சம்பளம் ரூ.10,000/- இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு ரூ.13,000/- தற்போது ரூ.17,000/- ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. அதேபோல் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் ஏற்கெனவே ரூ.6,500/- ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு ரூ.8,500/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டது.

தற்போது ரூ.11,000/- ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இத்தகைய சம்பள உயர்வின் மூலம் அரசிற்கு ரூ.169 கோடி கூடுதல் செலவினம் ஏற்பட உள்ளது. 2023-24 நிதியாண்டிலிருந்து 2,650 ஆஷா பணியாளர்கள் ஊக்கத்தொகை என்கின்ற வகையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு ரூ.1,500/- ரூ.2,000/- என்று இருந்த ஊக்கத்தொகை அவர்களுக்கு ரூ.5,950/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டது.

பெருமதிப்பிற்குரிய சுப்பராயன் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தொடர்ச்சியாக அவர்களுக்கு வைத்த கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்கள் கனிவுடன் பரிசீலினை செய்து அவர்களுக்கு தற்போது ரூ.7,000/- வரை கூடுதலாக வழங்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதன் மூலம் அரசிற்கு ரூ.3.21 கோடி நிதி கூடுதல் செலவினம் ஏற்பட இருக்கிறது. இந்த பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் இத்தகைய ஊதிய உயர்வு குறித்து சொல்வதில் மிக்க பெருமகிழ்ச்சி அடைகிறோம். அதேபோல் இந்நிகழ்வில் மற்றொரு சிறப்பாக குடும்ப நல திட்டத்தை மாநில அளவில் திறம்பட செயல்படுத்திய மாவட்ட அளவிலான மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக்கல்லூரி முதல்வர்கள், மாவட்ட இணை இயக்குநர்கள், மாவட்ட குடும்ப நல துணை இயக்குநர்கள், மாவட்ட சுகாதார அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிலையங்களை பாராட்டி 45 பேருக்கு சான்றிதழ்களும், கேடயங்களும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் விழா பேரூரையாற்றினார்கள்.

banner

Related Stories

Related Stories