தமிழ்நாடு

விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த அபராதம் செல்லும் : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

வருமானத்தை மறைத்தததாக வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த அபராதம் செல்லும் : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2015-16 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.

அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்பதை கண்டறிந்தது.

வருமானத்தை மறைத்ததற்கான ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2022 ம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. தனக்கு அபராதம் விதித்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், விஜய் தாக்கல் செய்திருந்த வழக்கின் இறுதி விசாரணை, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நடந்தது.

அப்போது, விஜய் தரப்பில், சட்டப்படி அபராத உத்தரவை 2019 ஜூன் 30ஆம் தேதிக்கு முன்பே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் காலதாமதமாக 2022ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.

வருமான வரித்துறை தரப்பில், வருமான வரி மதிப்பீட்டை எதிர்த்த அப்பீல் முடிந்த பின், ஆறு மாத கால அவகாசத்துக்குள்ளேயே அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டப்படி நடிகர் விஜய்-க்கு அபராதம் விதித்து சரிதான். விஜய் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்து, உரிய கால அவகாசத்துக்குள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை. நீதிமன்றம் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி, விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

அப்போது, வருமான வரித்துறையில் மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு, அபராத உத்தரவை எதிர்த்து, வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்ய அனுமதியளித்த நீதிபதி, உத்தரவிட்டார்.

banner

Related Stories

Related Stories