
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் சானுரப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து ஆற்றிய உரை,
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கலந்து கொண்டு முத்தமிழிறஞர் கலைஞரின் சிலையைத் திறந்து வைத்திருக்கிறேன். இருந்தாலும் இந்த நிகழ்ச்சி என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக அமைந்திருக்கிறது.
ஏனென்றால், கலைஞர் பிறந்த இந்தத் தஞ்சை மாவட்டத்தில் கலைஞரின் சிலையைத் திறக்கின்ற வாய்ப்பை இன்றைக்கு பெற்றிருக்கிறேன். வாய்ப்பளித்த மாவட்டக் கழகச் செயலாளருக்கும், மாவட்ட அமைச்சர் அவர்களுக்கும், ஒன்றியச் செயலாளருக்கும் முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று முத்தமிழிறஞர் கலைஞரின் சிலையைத் தமிழ்நாடு முழுதும் நாம் திறக்கிறோம் என்றால், கலைஞரின் கொள்கையை, கலைஞரின் சாதனையைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்கிறோம் என்று அர்த்தம். கலைஞர் அவர்கள் ஒரு வரலாற்றுப் பதிவு. அவர் யாராலும் முறியடிக்க முடியாத சாதனைகளைச் செய்தவர்.
இன்று நீங்கள் தாய்மார்கள் இந்த நிகழ்ச்சிக்கு இவ்வளவு பேர் கூடி எழுச்சியுடன், மகிழ்ச்சியான முகத்துடன் வந்திருக்கிறீர்கள். பெண்களுக்குத் தன்னுடைய ஆட்சி நடக்கும் போதெல்லாம் தாய்மார்களுக்கு, மகளிருக்குப் பார்த்துப் பார்த்துத் திட்டங்களைச் செய்தவர்தான் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை கொடுத்த முதல் முதலமைச்சர் நம்முடைய தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.
பெண்களுக்குக் காவல்துறையில் பணியிடம் வாய்ப்பைக் கொடுத்த இந்தியாவிலேயே முதல் முதலமைச்சர், முதல் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள். அவர் வழியில் இன்று நம்முடைய தலைவர் அவர்கள் பெண்களுக்கு ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்துகொண்டு வருகிறார்.

அதனால்தான் இன்று பல்வேறு மாநிலங்கள் நம்முடைய அரசை திராவிட மாடல் அரசு என்று நாம் பெருமையாகச் சொன்னாலும், மகளிருக்கான அரசு என்று மற்ற மாநிலங்கள் எல்லாம் நம்முடைய அரசைப் பாராட்டிக் கொண்டிருக்கின்றன.
ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அதே நாள் நம்முடைய கழகத் தலைவர் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான விடியல் பயணத் திட்டம், மகளிருக்கான கையெழுத்துதான். அதுமட்டுமல்லாது பல்வேறு திட்டங்கள்.
பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை முடித்துவிட்டுத் தொடர்ந்து கல்லூரி படிக்க வேண்டும் என்று, அரசுப் பள்ளியில் படித்து எந்தக் கல்லூரியில் சேர்ந்தாலும் அவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை ‘புதுமைப்பெண் திட்டம்’ மூலம் மாதம் 1000 ரூபாய் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொடுக்கிறார். மாதந்தோறும் ஒவ்வொரு நாளும் 22 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்ற வகையில் முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்.
இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போன்ற நம்முடைய தேர்தல் அறிக்கையில் நாம் சொன்ன வாக்குறுதி ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’. இன்று ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 30 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகையாக, மகளிர் உரிமைத் தொகையாக நம்முடைய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. இப்படி ஒவ்வொரு திட்டத்தையும் மகளிருக்குப் பயனுள்ள வகையில் நம் முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்.
இங்கே வந்திருக்கக்கூடிய மகளிர் உங்களிடத்திலே நான் கேட்டுக்கொள்வது, நம்முடைய ஆட்சி தொடர வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன. நிச்சயம் 10 நாட்களுக்கு முன்பு இதே தஞ்சை மாவட்டத்தில் ஒரு மகளிர் மாநாட்டை ஒட்டுமொத்த இந்தியாவே வியந்து பார்க்கும் அளவுக்கு ஒரு எழுச்சியான மாநாட்டை நீங்கள் நடத்திக் காட்டினீர்கள்.
அப்பொழுதே இந்தத் தஞ்சை மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்துத் தொகுதிகளிலும் நம் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெறப்போவது உறுதி. மீண்டும் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம்தான், நம்முடைய தலைவர்தான் முதலமைச்சராக அமரப்போகிறார்.
அதற்கான பிரச்சாரப் பணிகளை இங்கே வந்திருக்கக்கூடிய தாய்மார்கள் அடுத்த இரண்டு மாதம் நீங்கள் களத்தில் இறங்கி, நம் அரசின் திட்டங்களை மக்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து நீங்கள் எடுத்துக்கூற வேண்டும்.
ஒவ்வொரு வாக்கும் உதயசூரியன் சின்னத்திற்கு வர வேண்டும் என்று இங்கே வந்திருக்கக்கூடிய மகளிர் உங்களுடைய தேர்தல் பணிகளை நீங்கள் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, நாம் அனைவரும் இன்று கலைஞர் சிலைக்கு முன்பு அந்த உறுதிமொழியை ஏற்று தேர்தல் பணியாற்றிட வேண்டும் என்று கூறி, இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.






