தமிழ்நாடு

6 புதிய சமத்துவபுரங்கள்: சாலை, பாலங்கள்- புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ரூ.289.38 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கட்டடங்கள், சாலை மற்றும் பாலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

6 புதிய சமத்துவபுரங்கள்:  சாலை, பாலங்கள்- புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றையதினம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் சார்பில் மொத்தம் ரூ.1,876.16 கோடி செலவிலான கட்டடங்களை திறந்து வைத்து, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் ரூ.14.50 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

6 சமத்துவபுரங்கள் திறந்து வைத்தல்

சமூக நீதியை மேம்படுத்தவும், தந்தை பெரியாரின் சமுதாய சமத்துவ கொள்கையினை பரப்புவதும் சமத்துவபுரம் அமைப்பதன் முக்கியமான நோக்கமாகும். இங்கு 100 வீடுகள் கட்டப்பட்டு 40:25:25:10 என்ற விகிதாச்சார அடிப்படையில் முறையே ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர வகுப்பின மக்கள் குடியமர்த்தப்படுகிறார்கள்.

ஒரு சமத்துவபுரத்தில் 100 வீடுகள் அமைப்பதோடு, சாலைகள், குடிநீர் விநியோகப் பணிகள் மற்றும் தெருவிளக்கு போன்ற பொது உட்கட்டமைப்பு வசதிகளுடன், தேவையின் அடிப்படையில் பொது விநியோகக் கடை, சமுதாயக்கூடம், நூலகக் கட்டடம், பள்ளிக் கட்டடம் மற்றும் பள்ளி கழிவறை, அங்கன்வாடி, விளையாட்டு மைதானம், பூங்கா போன்ற பிற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

அதன்படி, கடலூர் மாவட்டம் – குறிஞ்சிப்பாடி ஒன்றியம், பூவாணிக்குப்பம் ஊராட்சியில் 6 கோடியே 58 இலட்சம் ரூபாய் செலவிலும், புதுக்கோட்டை மாவட்டம் – அரிமளம் ஒன்றியம், கடையக்குடி ஊராட்சியில் 6 கோடியே 71 இலட்சம் ரூபாய் செலவிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – உப்பிலியாபுரம் ஒன்றியம், தளுகை ஊராட்சியில் 6 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவிலும், தென்காசி மாவட்டம் – மேலநீலிதநல்லூர் ஒன்றியம், குருக்கள்பட்டி ஊராட்சியில் 6 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவிலும், திருவண்ணாமலை மாவட்டம் – செங்கம் ஒன்றியம், பெரியகோளாப்பாடி ஊராட்சியில் 8 கோடியே 49 இலட்சத்து 58 ஆயிரம் ரூபாய் செலவிலும் மற்றும் விருதுநகர் மாவட்டம் – திருச்சுழி ஒன்றியம், சென்னிலைக்குடி ஊராட்சியில் 7 கோடியே 91 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள 6 சமத்துவபுரங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்.

இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை, 9 சமத்துவபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி கொத்தக்கோட்டை/வள்ளிமாடன்வலசையில் ஒரு சமத்துவபுரம் கட்டப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம், புதுப்பட்டி முதல் கெடமலை வரை அமைக்கப்பட்டுள்ள சாலையை திறந்து வைத்தல்

நாமக்கல் மாவட்டம் – வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான போதமலையில் கீழூர், மேலூர் மற்றும் கெடமலை ஆகிய மூன்று குக்கிராமங்களை கொண்டு கீழூர் ஊராட்சி அமைந்துள்ளது. இவ்வூராட்சியில், சாலை வசதியின்றி 1,727 பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு வாழ்ந்து வரும் மக்கள், தங்களின் அவசர மருத்துவ உதவிக்கு எவ்வித போக்குவரத்து வசதியுமின்றி தூளி கட்டி தூக்கியபடியே, சுமார்

11 கிலோ மீட்டர் நடை பயணமாக மலைப்பகுதியில் கீழிறங்கி, அடிவாரத்தில் உள்ள இராசிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இதனால் அங்கு வாழும் மக்கள் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறமுடியாமல், உயிரிழக்கும் ஆபத்து அதிகமாக இருந்தது. மேலும், இங்கு வாழும் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு கரடு முரடான பாறைகளுடன் கூடிய, ஆபத்தான மலைப்பாதையில் கீழே இறங்கி, பொருட்களை பெற்று சுமையுடன் மீண்டும் மேலே ஏறி வருகின்றனர்.

இதனை கவனத்தில் கொண்ட இவ்வரசு, இம்மக்களின் துயர்துடைக்க, நபார்டு திட்டத்தின் கீழ் கீழூர், மேலூர், கெடமலையை இணைக்கும் வகையில், 139 கோடியே 65 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்,

31 கிலோ மீட்டர் நீளத்திற்கு போதமலையில் இரண்டு சாலைகள் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து, மேற்படி சாலை அமைக்கும் பணிக்கு 17.02.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி, பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் தற்போது புதுப்பட்டி முதல் கெடமலை வரை 34 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் முடியப்பெற்றுள்ள 9.90 கிலோமீட்டர் நீள சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தல்

ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை சந்திக்க வரும் பொதுமக்கள் ஆகியோரின் வசதிக்காக, பழைய பழுதடைந்த கட்டடங்களுக்குப் பதிலாக, புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்டும் திட்டம் 2008-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையிலான அரசால் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, தற்போது வரை 338 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, அதில் 286 கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, இராணிப்பேட்டை மாவட்டம் - சோளிங்கர் ஒன்றியத்தில் 5 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் – மத்தூர் ஒன்றியத்தில் 5 கோடியே 88 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - முசிறி ஒன்றியத்தில்

5 கோடியே 36 இலட்சம் ரூபாய் செலவிலும், தென்காசி மாவட்டம் – கீழபாவூர் ஒன்றியத்தில் 5 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவிலும், தூத்துக்குடி மாவட்டம் – புதூர் ஒன்றியத்தில் 5 கோடியே 36 இலட்சம் ரூபாய் செலவிலும் மற்றும் விருதுநகர் மாவட்டம் – திருவில்லிப்புத்தூர் ஒன்றியத்தில் 5 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடமானது 17,324 சதுர அடி பரப்பளவில், இரண்டு தளங்களுடன், ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கு, பயிற்சி அரங்கு, ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான அறைகள், பொறியியல் பிரிவிற்கென தனி அலுவலகம், கணினி அறை, எழுதுபொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டம் - அணைக்கட்டு ஒன்றியம், பள்ளிகொண்டா பேரூராட்சியில் சுயஉதவி குழுக்கள், கைவினைஞர்கள் மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், தங்கள் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யவும், மகளிர் வாழ்வாதாரத்தினை மேம்படுதிடவும், 3 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மகாகவி பாரதியார் வாழ்வாதாரப் பூங்கா;

செங்கல்பட்டு மாவட்டம் - காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், செங்கல்பட்டில் இணை இயக்குநர் / திட்ட அலுவலருக்கான அரசுப் பணிகளை 24/7 மணி நேரமும் ஒருங்கிணைத்து, கண்காணித்திட 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புடன் கூடிய முகாம் அலுவலகம்;

புதுக்கோட்டை மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட அளவிலான அலுவலகங்களை ஒருங்கிணைக்கும் வகையில், பல்வேறு அலுவலர்களுக்கு தனித்தனி அறைகளுடன் புதுக்கோட்டையில் 10 கோடி ரூபாய் செலவில், 28,716 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகக் கட்டடம்;

ஊரகப் பகுதிகளில் தரை மட்ட பாலங்களை மேல்மட்ட பாலங்களாக உயர்த்தி மழைக் காலங்களில் தொடர் போக்குவரத்தினை உறுதி செய்திடும் விதமாக, கன்னியாகுமரி மாவட்டம் – திருவட்டார் ஒன்றியம், அருவிக்கரை ஊராட்சியில் 5 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவிலும், சேலம் மாவட்டம் – அயோத்தியாபட்டினம் ஒன்றியம், குப்பனூர் ஊராட்சியில்

1 கோடியே 99 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவிலும், கெங்கவல்லி ஒன்றியம், பச்சமலை ஊராட்சியில் 1 கோடியே 74 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவிலும், தூத்துக்குடி மாவட்டம் – திருவைகுண்டம் ஒன்றியம், ஆறுமுகமங்கலம் ஊராட்சியில் 3 கோடியே 36 இலட்சம் ரூபாய் செலவிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – மருங்காபுரி ஒன்றியம், அ.புதுப்பட்டி ஊராட்சியில் 3 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவிலும், வேலூர் மாவட்டம் – அணைக்கட்டு ஒன்றியம், ஒங்கப்பாடி ஊராட்சியில்

2 கோடியே 28 இலட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவிலும், ஒதியத்தூர் ஊராட்சியில் 2 கோடியே 36 இலட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலவிலும் மற்றும் பொய்கை ஊராட்சியில் 1 கோடியே 65 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள 8 பாலங்கள்;

மாநிலத்தின் 30 மாவட்டங்களில், 51 கோடியே 22 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 145 பள்ளிக் கட்டடங்கள், 18 கோடியே 49 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 111 அங்கன்வாடி மையக் கட்டடங்கள், 23 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 76 ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடங்கள், 29 கோடியே 28 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 53 பொது சுகாதார கட்டடங்கள்,

2 கோடியே 62 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 20 உணவு தானிய சேமிப்பு கிடங்குகள், 5 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 42 பொது விநியோகக் கடை கட்டடங்கள், 1 கோடியே 77 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 9 சமுதாயக்கூடங்கள்,

33 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒரு நேரடி கொள்முதல் நிலையக் கட்டடம், 1 கோடியே 68 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 மாவட்ட வள மையக் கட்டடம், 3 கோடியே 44 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 8 கிராம ஊராட்சி செயலக கட்டடங்கள், 1 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 நூலகக் கட்டடங்கள், 1 கோடியே 68 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 சுயஉதவிக் குழு கட்டடங்கள், 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒரு பால் கொள்முதல் நிலையக் கட்டடம்;

என மொத்தம் 289 கோடியே 38 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்.

banner

Related Stories

Related Stories