
கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (14-04-2026) திருப்பத்தூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய உரையின் விவரம்:
இரண்டு மாதங்களுக்கு முன்புதான், வடக்கு மண்டலப் பாக முகவர்கள் மாநாட்டிற்காக இதே மண்டலவாடிக்கு வந்தேன். மலைகள் சூழ்ந்த இந்த அழகிய இடத்தில் தி.மு.க. மாஸ் காட்டி, எதிரிகளுக்கு மலைப்பை ஏற்படுத்தினோம். இப்போது மீண்டும், ஜவ்வாது மலையும், ஏலகிரியும், இயற்கை எழில் கொஞ்சும் அருவிகளும் நிறைந்த திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நான் வந்திருக்கிறேன்.
அதிலும், ஏலகிரியை, “ஏழைகளின் ஊட்டி” என்று செல்லமாகச் சொல்வார்கள். ஊட்டியில் இப்போது போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிட்டது, அதனால் ஏழைகள் மட்டுமல்லாமல், அனைவரும் நம்முடைய ஏலகிரியை நோக்கித்தான் இப்போது வந்து கொண்டிருக்கிறார்கள். ஏழாவது முறை தி.மு.க. ஆட்சி அமைய ஆதரவு கேட்டு நானும் வந்துவிட்டேன்.
வட தமிழ்நாட்டின் முக்கிய இரயில் சந்திப்பு இருக்கும், சோலைகள் ஆர்ந்த பேட்டையான ஜோலார்பேட்டை இருக்கும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். செய்யாறு, ஆரணியாறு ஆகிய ஆறுகளும், சந்தனம் மணக்கும் காடுகளும் கொண்ட திருப்பத்தூருக்கு வந்திருக்கிறேன். தமிழ்நாட்டின் ‘Sandal City’ நீங்கள்தான்! சந்தனம் மட்டுமா இங்கே மணக்கும்? ‘உலகப் புகழ்’ ஆம்பூர் பிரியாணியும் மணமணக்கும் மாவட்டம்தான், திருப்பத்தூர்!
நேற்று இராணிப்பேட்டைப் பரப்புரையை முடித்துவிட்டு, அப்படியே ஆற்காடு சென்று மக்கன் பேடா சாப்பிட்டேன். நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள். தேர்தல் வெற்றிக்குப் பிறகு, ஆற்காடு பிரியாணியையும் சுவைக்க வருவேன் என்று சொன்னேன். அடுத்தநாளே ஆம்பூர் இருக்கும் உங்கள் மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். ஆற்காடு, ஆம்பூர் எப்படி இரண்டு பிரியாணியும் சிறப்பு வாய்ந்ததோ, அதேபோன்று இரண்டு மாவட்டங்களிலும் நமது வெற்றியும் சிறப்பாக இருக்க வேண்டும்!
திராவிட மாடல் 2.0 அமைய, இங்குள்ள தொகுதிகளில் திருப்பத்தூர் முழு வெற்றியைத் தர வேண்டும். தமிழ்நாடே தயாராகிவிட்டது! திருப்பத்தூரும் தயாரா? நன்றி! ஏலகிரி பின்னணியிலிருந்து கேட்கிறேன்... ஏழாவது முறையாகத் தி.மு.க. ஆட்சிக்குத் திருப்பத்தூர் தயாரா? நன்றி!
அதற்காக, இப்போது உங்கள் அனுமதியோடு வேட்பாளர்களை அறிமுகப்படுத்துகிறேன். உங்களுக்கு நன்றாகத் தெரிந்தவர்கள்தான். இருந்தாலும், அறிமுகப்படுத்துவது என் கடமையல்லவா...
முதலில், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் அ. நல்லதம்பி அவர்கள். நல்லதம்பியின் தந்தை ஒன்றியச் செயலாளராக இருந்தவர். அவருக்குப் பிறகு, 2011 முதல் 15 ஆண்டு காலமாகத் திருப்பத்தூர் ஒன்றியச் செயலாளராக இவர் இருக்கிறார். 2016, 2021 இரண்டு முறையும் வென்ற நல்லதம்பிக்கு இந்த முறையும் உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
அடுத்து, ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் அ.செ. வில்வநாதன் அவர்கள். பத்தாண்டு காலம் ஊராட்சி மன்றத் தலைவராகவும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து மக்கள் பணியாற்றிய வில்வநாதன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் மீண்டும் வாக்களிக்க வேண்டும்.
அடுத்து, ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் கவிதா தண்டபாணி அவர்கள். இந்தத் தொகுதியில் கடந்த முறை அ.தி.மு.க.-வின் சிட்டிங் அமைச்சரைத் தோற்கடித்து, நமக்கு வெற்றியைத் தந்தீர்கள். இந்த முறையும் தி.மு.க.-தான் இங்கு வெற்றி பெற வேண்டும்! வேட்பாளர் கவிதா தண்டபாணி அவர்கள், ஒன்றிய அமைப்பாளர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றியக் கழகச் செயலாளர் எனத் தொடர்ச்சியாகக் கழகப் பணி ஆற்றியவர். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக மக்கள் பணியாற்றியவர். அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்தாக வேண்டும்.
அடுத்து, வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த சையத் பாரூக் அவர்கள். தகைசால் தமிழர் பேராசிரியர் ஐயா காதர் மொகிதீன் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ள வேட்பாளர். இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இளைஞரணி அமைப்பாளராக இருந்தவர். வாணியம்பாடி நகர்மன்ற உறுப்பினராக, நகர்மன்றத் துணைத் தலைவராக இருந்த சையத் பாரூக் அவர்களுக்கு ஏணி சின்னத்தில் நீங்கள் எல்லாம் ஆதரவு தந்திட வேண்டும்.
இவர்கள் நான்கு பேரின் வெற்றியும் உறுதியா? நன்றி! வேட்பாளர்கள் இப்போது உட்காரலாம். சீட் கன்ஃபார்ம் ஆகிவிட்டது.
திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, திருப்பத்தூரில் ஏராளமான வளர்ச்சிப் பணிகளைச் செய்து வருகிறோம்! நானே, அரசு நலத்திட்ட விழாக்களுக்காக மட்டுமே இரண்டு முறை வந்து பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கியிருக்கிறேன்.
திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு கூடுதல் கட்டடம்;
வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளி அரசு மருத்துவமனைகள் மேம்பாடு;

ஜோலார்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்பாடு;
மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம் திறப்பு;
வாணியம்பாடி - நிம்மியம்பட்டில் மினி ஸ்டேடியம்;
பள்ளிகளில் 114 அறிவியல் ஆய்வகங்கள்;
ஏலகிரி மலையில் சுற்றுச் சாலை;
ஏலகிரி சுற்றுலா வசதிக்காக ஒன்றிய சாலைகள் மாவட்டச் சாலைகளாகத் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
ஜவ்வாது மலை அடிவாரம் முதல் புதூர் நாடு வரை தார்ச் சாலை.
425 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடந்திருக்கிறது.
14 பாலங்கள் கட்டப்பட்டிருக்கிறது.
211 திருக்கோயில்களுக்குக் குடமுழுக்குச் செய்திருக்கிறோம்.
திருப்பத்தூருக்கு 182 கோடி ரூபாயில் குடிநீர்த் திட்டம்.
மேம்படுத்தப்பட்ட ஏலகிரி - ஜலகம்பாறை சூழல் சுற்றுலாத் தடம் தொடக்கம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, அ.தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டிருந்த ஆம்பூர் ரெட்டிதோப்பு இரயில்வே மேம்பாலப் பணிகளுக்கு 66 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பணிகளைத் தொடங்கிவிட்டோம். இந்தப் பகுதி மக்களின் 50 ஆண்டு காலக் கனவு நிறைவேறப் போகிறது!
திருப்பத்தூரில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாபெரும் விளையாட்டு வளாகம் கட்டப்பட்டு வருகிறது. நான்கூட இரண்டு மாதங்களுக்கு முன்னால் வந்தபோது, நேரில் சென்று ஆய்வு செய்தேன்.
நல்லகுண்டா பகுதியில் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், இன்னொரு சிப்காட் அமைய இருக்கிறது.
பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய இடங்களில் அமைய இருக்கிறது.
திருப்பத்தூர் நகராட்சி பழைய பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் அடுக்குமாடி வணிக வளாகம் வர இருக்கிறது.
ஆம்பூர் புதிய நூலகம் வர இருக்கிறது.
ஆலங்காயம் - நெக்னாமலை பகுதியில் 30 கோடியில் சாலைப் பணிகளும் நடக்கிறது. இந்த அளவிற்கும், இதற்கும் மேலும் திருப்பத்தூருக்காகச் செய்கிறோம்!
ஆனால், ஒன்றிய அரசு என்ன செய்கிறது? நான் மற்ற ஊர்களுக்கு எல்லாம் காரில் சென்று கொண்டிருக்கிறேன். ஆனால், நம்முடைய திருப்பத்தூர், இராணிப்பேட்டை, வேலூர் செல்ல வேண்டுமென்றால், இரயிலில்தான் வருகிறேன். அந்த அளவிற்குச் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மோசமாக இருக்கிறது. இதைச் சுட்டிக்காட்டி ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்குக் கடிதம்கூட எழுதியிருந்தேன்.
பலமுறை நம்முடைய அமைச்சர் வேலு அவர்கள் நேராகச் சென்று பார்த்து சொல்லிவிட்டு வந்திருக்கிறார். ஆனால், தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் என்றால், அதில் அலட்சியம்; அவர்கள் சீக்கிரம் முடிக்க மாட்டார்கள்! மதுரையில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையையே 10 வருடங்களாகக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்! நான்கூட கேட்டேன்... அது என்ன தாஜ்மஹாலா? இல்லை, தஞ்சை பெரிய கோயிலா? ஏன் இவ்வளவு தாமதம் என்று கேட்டேன். இந்த அளவில்தான் தமிழ்நாடு மீதும், திருப்பத்தூர் மீதும், அவர்கள் அக்கறை இருக்கிறது.
இப்படி தமிழ்நாட்டிற்கு வஞ்சனை செய்யும் பிரதமர் அவர்கள், “தி.மு.க. மிக மோசமான நிர்வாகம் செய்கிறது” என்று, நேற்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இவர்களுக்கு இதே வேலையாகிப் போய்விட்டது. தமிழ்நாட்டிற்கு வரும் ஒன்றிய அமைச்சர்கள் அனைவரும் இப்படித்தான் எதையாவது பேசி, சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்புதான், ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் இதே போன்று பேசியதற்கு, ஒன்றிய அரசின் தரவுகள், ஆய்வறிக்கைகள், தரவரிசைப் பட்டியல்களை வைத்தே நான் பதிலடி கொடுத்தேன். தமிழ்நாடு எத்தனை துறைகளில் முதலிடத்தில் இருக்கிறது, எத்தனை பிரிவுகளில் எந்த மாநிலமும் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது எனப் பேசியிருந்தேன். பிரதமர் மோடி அவர்கள், அதையெல்லாம் பார்த்துவிட்டு அதன் பிறகு பேசட்டும்!
குறைந்தபட்சம் பட்ஜெட்டிற்கு முன்னால் ஒன்றிய அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையையாவது எடுத்துப் புரட்டிப் பாருங்கள் பிரதமர் அவர்களே!
உங்கள் அறிக்கையையும் பார்க்காமல், ஐ.நா. போன்ற உலக அமைப்புகள் தமிழ்நாட்டிற்குத் தரும் விருதுகளையும் பார்க்காமல், சும்மா தேர்தலுக்காக ஒரு மாநிலத்திற்கு எதிராக எதையாவது பேசிக் கொண்டிருக்கக் கூடாது! பா.ஜ.க.-வைச் சேர்ந்த மோடி அப்படிப் பேசினால் நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம்! ஆனால், நாட்டின் உயர் பொறுப்பில் இருக்கும், அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டிய பிரதமர் இப்படிப் பேசக்கூடாது. அது நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகல்ல!
இந்தியாவிலேயே அதிக அளவிலான மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி, இது மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கும் திராவிட மாடல் தமிழ்நாடு! அதற்கு எடுத்துக்காட்டிற்காக வேறு எங்கும் நான் அலைய வேண்டியதில்லை. இந்தத் திருப்பத்தூர் மாவட்டத்திலேயே நான் கண்கூடாகப் பார்த்தேன்.
பிப்ரவரி மாதம் 5 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை முன்பணமாக வழங்கினோம் அல்லவா... அடுத்த நாள் ஜோலார்பேட்டையிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், தாமலேரிமுத்தூர் என்ற ஊரில் மேகலா என்ற சகோதரியின் வீட்டிற்குத் திடீர் சந்திப்பாக நான் சென்றேன். “என்னம்மா, அரசின் திட்டங்கள் எல்லாம் கிடைக்கிறதா? நேற்று 5 ஆயிரம் வந்ததா?” என்று கேட்டேன். அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?

“மாதம் ஆயிரம் வருகிறது. நேற்று 5 ஆயிரமும் வந்தது. எங்கள் பிள்ளைகளின் படிப்புச் செலவிற்கு இது உதவியாக இருக்கிறது. என் மகன் கல்லூரியில் படிக்கிறான். தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் அவனும் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுகிறான். இப்போது மடிக்கணினியும் கொடுத்துவிட்டார்கள். ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சியும் கிடைக்கிறது. நானும் மகளும் விடியல் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணம் செய்கிறோம்” என்று, இந்த வடார்க்காடு மண்ணிற்கே உரிய வட்டார வழக்கில் மிக அழகாக, இயல்பாகச் சொன்னார்கள். அதன் வீடியோகூட இருக்கிறது.
அப்போது நான் யோசித்துப் பார்த்தேன். அந்த ஒரு குடும்பத்திற்கு மட்டுமே நமது திராவிட மாடல் ஆட்சியில், உரிமைத்தொகை, மடிக்கணினி, நான் முதல்வனில் கட்டணமில்லாத் திறன் பயிற்சி, கட்டணமில்லாப் பேருந்து பயணம் என்று ஏறத்தாழ ஒரு இலட்சம் ரூபாய் அளவிற்கு நலத்திட்ட உதவிகள் நேரடியாகச் சென்று சேர்ந்திருக்கிறது. இடையில் எந்த இடைத்தரகரும் இல்லை. ஊழல், முறைகேடு என்றுகூட எதிர்க்கட்சிகள் யாரும் பேச முடியாது! பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்து மாதிரி, அனைத்தும் கிளீனா, நீட்–ஆக அரசின் கணக்கிலிருந்து மக்களின் கணக்கிற்குச் சென்று சேருகிறது!
நான் எப்போதும் காலையில் வாக்கிங் செல்வது உண்டு. தேர்தலுக்காக செல்வதில்லை. சென்னையில் இருந்தால், வெளியூர் நிகழ்ச்சிக்கு சென்றால் ஒரு மணி நேரமாவது வாக்கிங் சென்றுவிட்டுதான் வருவேன். அதனால்தான் இப்படி இருக்கிறேன்…
அந்த நிலையில், நான் இன்று காலையில், கே.வி. குப்பத்தில் வாக்கிங் சென்றேன். அந்த கே.வி. குப்பத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு பெற்ற ஒரு சகோதரியின் வீட்டிற்குச் சென்றேன். என்னைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு அழ ஆரம்பித்துவிட்டார். இன்றைக்கு தொலைக்காட்சியில் வந்தது அது. நெகிழ்ச்சியில் அதைப்பார்த்ததும் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்படி, களத்தில் நின்று தினமும் மக்களைச் சந்திக்கும் அனுபவத்தில் ஒன்று சொல்கிறேன்.
இந்தத் தேர்தலையே மக்கள் எப்படி அணுகுகிறார்கள் தெரியுமா? திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்கான நன்றி அறிவிப்பு விழாவாகத்தான் 2026 தேர்தலை மக்கள் பார்க்கிறார்கள். அதுதான் உண்மை. அவர்களுடைய மகிழ்ச்சியை, நன்றியை வெளிப்படுத்தும் நாளாகத்தான் ஏப்ரல் 23-ஐப் பார்க்கிறார்கள். அந்த அளவிற்கு ஆட்சிக்கு ஆதரவான அலையோடு இந்தத் தேர்தலை நாம் எதிர்கொள்கிறோம்! அதற்கு முழுமையான காரணம் நமது அரசின் சாதனைத் திட்டங்கள்!
இந்த ஆட்சியில் எல்லாமே மக்களைத் தேடிச் செல்கிறது. கிராமத்தில் இருக்கும் ஒருவருக்கு ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் மருந்துகள், இரத்த அழுத்தம் - சர்க்கரைப் பரிசோதனை, பிசியோதெரபி சிகிச்சை எல்லாம் வீடு தேடி கிடைக்கிறது. இல்லம் தேடி கல்வி வந்துவிட்டது. உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள், உங்களைத் தேடி – உங்கள் ஊரில், மக்களுடன் முதல்வர் – இதிலெல்லாம் பல ஆண்டுகளாகத் தீர்வு கிடைக்காத பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திருக்கிறது.
அரசின் அடிப்படை சேவைகளைப் பெற அரசு அதிகாரிகளை மக்கள் தேடி அலையாமல், எல்லாத் துறை அதிகாரிகளையும் ஒரே இடத்தில் வரவழைக்கிறோம். நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் மக்கள் வசிக்கும் பகுதிக்கே மருத்துவர்களை அனுப்பி முழு உடல் பரிசோதனைகள் செய்கிறோம்.
‘தாயுமானவர்’ திட்டத்தில் வயதானவர்களைத் தேடிச் சென்று அவர்கள் வீட்டிலேயே ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யப்படுகிறது.
‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தில் மக்களின் வீட்டிற்கே சென்று, அவர்களுக்கு இன்னும் என்ன தேவை என்று கேட்டிருக்கிறோம்.

பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடத்திலேயே காய்கறிகளுடன் சுவையான காலை உணவு கிடைக்கிறது!
இப்போது சொல்லுங்கள்... இந்த ஆட்சிதானே எந்நாளும் தொடர வேண்டும்! இதற்கு முன்னால் எந்தக் காலத்திலாவது இவ்வளவு திட்டங்கள் மக்களைத் தேடிச் செல்வதைப் பார்த்திருக்கிறீர்களா!
எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வே அவர்களுடைய தேர்தல் அறிக்கையில், முழுக்க முழுக்க நாம் இப்போது செயல்படுத்தி வரும் திட்டங்களைத்தான் பெயர் மட்டும் மாற்றி வைத்து அறிவித்திருக்கிறார்கள். இந்த டூப்ளிகேட் பொருட்கள் எல்லாம் பார்த்திருக்கிறீர்களா? ‘பாட்டா’ ஷூ என்று இருந்தால், அதில் ஒரு எழுத்தை மாற்றி ‘டாட்டா’ ஷூ என்று போட்டு விற்றுவிடுவார்கள்.
அப்படித்தான் திராவிட மாடலின் மகளிர் உரிமைத்தொகையைக் ‘குலவிளக்குத் திட்டம்’ என்று வேறொரு ஸ்டிக்கர் ஒட்டி அ.தி.மு.க. அறிவித்திருக்கிறார்கள். இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மட்டுமல்லாமல், நமது எதிரிகளே நம்மைத்தான் இன்றைக்கு பின்பற்ற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
நான் அதனால்தான், முழு நம்பிக்கையோடு சொல்கிறேன். 200 வெல்வோம். அதையும் தாண்டுவோம்!
ஒரு முக்கியமான ஆபத்தை பற்றி உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பலரும் ஏற்கனவே படித்திருப்பீர்கள். தொகுதி மறுவரையறை செய்வதற்கான நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை மறுநாள் கூட்டப்பட இருக்கிறது. நம்முடைய எம்.பி.க்கள்கூட தேர்தல் வேலை இருக்கிறதே!
போக வேண்டுமா? போக வேண்டுமா? என்று கதிர் ஆனந்த் அவர்களும் கேட்டார். திருவண்ணாமலை எம்.பி., அண்ணாதுரையும் கேட்டார். எல்லா எம்.பி.யும் கேட்டார்கள். அதெல்லாம் முடியாது. போய்தான் ஆக வேண்டும். நமக்கு அதுதான் முக்கியம். போய்விட்டு வாருங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறேன். நாளை காலை செல்ல இருக்கிறார்கள்.
நேற்று இராணிப்பேட்டை கூட்டத்திலும் இதுபற்றி விளக்கமாக பேசியிருந்தேன். இன்றைக்கு மதியம் பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழ்நாடு விடுக்கும் எச்சரிக்கை என்று இன்னொரு வீடியோவை பதிவு செய்து போட்டிருக்கிறேன். அதையும் பார்த்திருப்பீர்கள். நான் அந்த வீடியோவை வெளியிட்ட அடுத்த சில மணி நேரத்தில், அவர்கள் நிறைவேற்றப்போகும் சட்ட மசோதாவை வெளியிட்டிருக்கிறார்கள்.
நான் சொன்னது மாதிரியே, தமிழ்நாட்டுக்கும் – வட மாநிலங்களுக்குமான இடைவெளியை அதிகரிக்கும் சதித் திட்டமாக இது இருக்கிறது. இந்தியாவின் அரசியலையே அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக புரட்டிப் போடும் ஒரு சட்டத் திருத்தத்தை, இப்படி அவசரகதியில் கொண்டு வருகிறார்கள் என்றால், அதுவும் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் கொண்டு வருகிறார்கள் என்றால், இதைவிட ஜனநாயக விரோதம், இதைவிட பாசிசம் வேறு இருக்க முடியுமா?
நீங்கள் கொண்டு வாருங்கள்! தமிழ்நாட்டு எம்.பி.க்கள் அனைவரும் கடுமையாக இதை எதிர்ப்போம். எங்கள் எதிர்ப்பை மீறி பார்லிமென்ட்டில் நீங்கள் இதை நிறைவேற்றினாலும், உறுதியாக சொல்கிறேன்… மக்கள் மன்றத்தில் நாங்கள் சும்மா விடமாட்டோம். நான் உறுதியாக சொல்கிறேன்! பேரறிஞர் அண்ணா மேல் ஆணையாக சொல்கிறேன். தலைவர் கலைஞர் மேல் ஆணையாக சொல்கிறேன். விடமாட்டோம். தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்.

பதவி, ஆட்சி, அதிகாரம், தேர்தல் இது அனைத்துமே எங்களுக்கு தோளில் போடும் துண்டு மாதிரிதான். ஆனால், மாநில உரிமை கொள்கை என்பது நாங்கள் இடுப்பில் கட்டும் வேட்டி போன்று. அது எங்களின் உயிர்க்கொள்கை!
டீ-லிமிட்டேஷனை பொறுத்தவரை, ஓராண்டுக்கு முன்பே நாங்கள் தயாராகிவிட்டோம். தமிழ்நாடு மொத்தத்தையும் ஓரணியில் நான் திரட்டிக் காட்டுகிறேன்.
இப்படி ஒரு பேராபத்து தமிழ்நாட்டை சூழ்ந்திருக்கிறது. இதை எதிர்க்க வக்கில்லாத பழனிசாமி, என்ன சொல்கிறார்? "பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவது தி.மு.க.வுக்கு பிடிக்கவில்லை, அவர்களுக்கு தோல்வி பயம்” என்று நூதன முறையில் ஓனர்களுக்காக முட்டு கொடுத்திருக்கிறார்.
நான் கேட்கிறேன்… உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், நகர்மன்றத் தலைவர், கவுன்சிலர் என்று அனைத்து நிலையிலும் 1996-ஆம் ஆண்டே பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியவர் நம்முடைய தலைவர் கலைஞர்.
இப்போது, நகர்ப்புற உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி, தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் மேயர்களே அதிகம் என்ற நிலையை உருவாக்கியதும், முத்துவேல் கருணாநிதி தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் அரசுதான்.
பா.ஜ.க.வின் பாதம் தாங்கியான பழனிசாமி, பீகார் முதலமைச்சர் போன்று தமிழ்நாட்டை பா.ஜ.க.-விடம் ஒப்படைக்க, படாத பாடு படுகிறார்.
பழனிசாமி அவர்களே... இது தமிழ்நாடு! தி.மு.க. ஆளும் தமிழ்நாடு! நாங்கள் தொடர்ந்து ஆளப் போகும் தமிழ்நாடு! மக்களின் நம்பிக்கையை பெற்ற இந்த ஸ்டாலின் ஆட்சி செய்யும் தமிழ்நாடு! நீங்கள் என்னதான் அடிமை சேவகம் செய்தாலும், தமிழ்நாட்டை மீண்டும் டெல்லியிடம் அடகு வைக்க, நாங்கள் விடமாட்டோம். நாங்கள் சாதனைக்கு மேல் சாதனைகள் செய்திருக்கிறோம். திட்டங்களுக்கு மேல் திட்டங்களை வாரி வழங்கி இருக்கிறோம்.
இதனுடைய அடுத்த கட்டமாகத்தான் 2026 தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறேன். அது சாதாரண அறிக்கை இல்லை, சூப்பர்ஸ்டார் அறிக்கை! இப்போது நமது சூப்பர்ஸ்டாரின் சூப்பர் ஹிட் அறிவிப்புகளைச் சொல்லவா...
2006-இல் கேஸ் அடுப்புடன் சேர்த்து கலைஞர் வண்ணத் தொலைக்காட்சி கொடுத்தார். 2021-இல் மகளிர் உரிமைத்தொகை மாதிரி, 2026-இல் இல்லத்தரசி திட்டம்! இந்த ஒரு அறிவிப்பிலேயே நமது எதிரிகள் எல்லாம் ’close’ ஆகிவிட்டார்கள்.
இல்லத்தரசி திட்டத்தில் எவ்வளவு ரூபாய்க்கு கூப்பன் தரப்போகிறோம்? எட்டாயிரம் ரூபாய்க்கு கூப்பன்! இந்தக் கூப்பனை வைத்து உங்களுக்குத் தேவைப்படும் வீட்டு உபயோகப் பொருளைப் புதிதாகவும் வாங்கிக் கொள்ளலாம்; இல்லையென்றால், பழைய பொருளை எக்ஸ்சேஞ்ச் செய்தும் வாங்கிக் கொள்ளலாம்! உங்களுக்குப் பிடித்த கடையில் – உங்களுக்குப் பிடித்த பிராண்டில் வாங்கிக் கொள்ளலாம்! வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோ-வேவ் அவன், இண்டக்ஷன் ஸ்டவ் என இவற்றில் எதை வாங்கலாம் என்று இப்போதே பெண்கள் எல்லாம் டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். உங்கள் வீட்டுக்காரரிடம் எல்லாம் கேட்காதீர்கள். இது முழுக்க முழுக்க உங்களுக்காக நான் கொண்டு வரும் திட்டம்! பெண்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!
அடுத்த வாக்குறுதி, உரிமைத்தொகை. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை – திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இனி மாதம் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்!
இப்போதே பெண்கள் எல்லோரும் கணக்குப் போட ஆரம்பித்துவிட்டார்கள். என்ன கணக்கு? பொங்கலுக்கு முன்பு, சொல்லிவிட்டு 3 ஆயிரம்! பிப்ரவரியில், சொல்லாமலேயே 5 ஆயிரம்! ஆக மொத்தம் 8 ஆயிரம்!
அடுத்து, இல்லத்தரசி கூப்பனிலும் ஸ்டாலின் அண்ணன் 8 ஆயிரம் கொடுக்கிறார். எம்.ஜி.ஆரின் படகோட்டி படத்தில், ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தார்’ என்று ஒரு பாட்டு இருக்கிறது. அதுபோன்று, “கொடுத்ததெல்லாம் கொடுத்தார், ஸ்டாலின் அண்ணா யாருக்காகக் கொடுத்தார்? ஒருத்தருக்கா கொடுத்தார்? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுப் பெண்களுக்கும் கொடுத்தார்!” என என் சகோதரிகள் அனைவருமே இப்போது மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இதுமட்டுமல்ல, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உதவித்தொகையும் இனி ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
மேலும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற பெண்கள் என எல்லா உதவித்தொகைகளும் இனி இரண்டு மடங்காக வழங்கப் போகிறோம்.
நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் புதிய பேருந்துகள் தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும்.
காலை உணவுத் திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கப்படும்.
அனைத்து வகுப்பறைகளும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக ஆக்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கப் போகிறோம்.
கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாக 10 இலட்சம் ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் தரப் போகிறோம்.
தொழிற்சாலைகள் அதிகமுள்ள நகரங்களில், பெண்கள் வேலைக்குச் செல்வதை எளிதாக்க, ஆயிரம் குழந்தைகள் காப்பகங்களை உருவாக்கப் போகிறோம்.
மகளிர் சுய உதவிக் குழுப் பெண்கள் ஷேர் ஆட்டோ வாங்க மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற்றுத் தரப்படும்.
பிசினஸ்-மேன் மாதிரி, ‘பிசினஸ்-வுமன்’-களை உருவாக்குவதற்காக, சுய உதவிக்குழு பெண்கள் தொழில் தொடங்க, எந்த சூரிட்டியும் இல்லாமல் 5 லட்சம் ரூபாய் வரை மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும்.
BC, MBC, சீர்மரபினர், சிறுபான்மையினர், ஆகியோருக்கும், தொழில் தொடங்க கடன் பெறும் உச்சவரம்பு, 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த வடக்கு மண்டலத்தில் தொழில் வாய்ப்புகளைக் கண்டறிந்து, பொது சேவை மையங்கள் அமைக்கப்படும்.
இது தவிர, வட மாவட்டங்களுக்காகவே ஒரு சிறப்பு வளர்ச்சித் திட்டம் இருக்கிறது. அதில் மின்னணு மற்றும் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு, தோல் அல்லாத காலணி உற்பத்தி, காய்கறி, கனிவகைகள் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கான உட்கட்டமைப்பு, இளைஞர்களுக்கான திறன் பயிற்சி, I.T. பூங்காக்கள் மற்றும் முழுமையான குடிநீர்த் திட்டங்கள் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்டவை செயல்படுத்தப்படும்.
இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறி, வட மாவட்டங்கள் வளம் பெற, திருப்பத்தூர் மக்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்!
மே 4 தேர்தல் முடிவுகளில் திருப்பத்தூரின் நான்கு தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி என எனக்குச் செய்தி எனக்கு வர வேண்டும்!
சொன்னதைச் செய்யும் தலைவர் கலைஞரின் மகனாகக் கேட்கிறேன். தமிழ்நாடா? டெல்லியா? என்ற இந்த ஜனநாயகப் போரில், நம்முடைய தமிழ்நாடு அணிதான் வெல்லும்.
ஏதோ நான் முதலமைச்சர் ஆகவோ, 30 பேர் அமைச்சராகவோ, நமது கூட்டணியில் 200 பேர் சட்டமன்ற உறுப்பினராகவோ மட்டுமல்ல; அழுத்தம் திருத்தமாக – உறுதியோடு சொல்கிறேன்... நம்முடைய தமிழ்நாட்டைக் காக்க கழகம்தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். ஏழாவது முறையும் நாம்தான்! இனி எப்போதும் நாம்தான் என்ற நிலையை உருவாக்க வேண்டும்!
அதற்கு, திருப்பத்தூர் தொகுதியில் நல்லதம்பி அவர்களுக்கும், ஆம்பூர் தொகுதியில் வில்வநாதன் அவர்களுக்கும், ஜோலார்பேட்டை தொகுதியில் கவிதா தண்டபாணி அவர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
வாணியம்பாடி தொகுதியில் தோழமை நம்முடைய இயக்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் சையத் பாரூக் அவர்களுக்கு ஏணி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில், எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை நாங்கள் வழங்குவோம். நாடு வளம் பெற - நல்லாட்சி தொடர்ந்திட, ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை!
வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக!






