
நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வரும் வண்ணமாக இருந்து வரும் நிலையில், ஒன்றிய பாஜக அரசு அதனை கண்டும் காணாததுமாய் இருந்து வருகிறது. இதனால் பல லட்சம் மாணவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படும் சூழலில், தற்போது மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தற்போது அந்த போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது. நீட் முறைகேடுகளுக்கு காரணமாக விளங்கும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டிலும் இது தொடர்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் முற்போக்கு கருத்தியல் கொண்ட மாணவர்கள் தன்னெழுச்சியாக கலந்துகொண்டு, நீட் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஒரு சில இளைஞர்கள் நீட் தேர்வு போராட்டத்தில் பங்கேற்றாலும், மற்றொரு தரப்பினர் 'ஜனநாயகன்' திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். மாணவர்கள் போராட்டத்துக்கு அனுமதி அளிக்காத தவெக அரசு, திரைப்பட கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கி வருகிறது.

ஒரு பக்கம் போராடும் மாணவர்கள் மீது தாக்குதல், மறுபுறம் தவெக அமைச்சர்கள் திரைப்படத்தை பார்த்து கண்ணீர் வடித்து ரீல்ஸ் வீடியோ என்று தமிழ்நாட்டில் நிகழ்ந்து வருகிறது.
எனினும் மாணவர்கள் தங்கள் போராட்டத்தை பின்வாங்காமல், தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், திரை கலைஞர்கள் பலரும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், ராஜு முருகன், நடிகைகள் ரேவதி, ஆண்ட்ரியா, பசுபதி என பலரும் கலந்துகொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று (ஜூலை 24) சென்னை, CPI கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகை சனம் செட்டி கலந்துகொண்டார். அப்போது அவர் நீட் தேர்வு குறித்து பேசாமல், தான் ஒரு விஜய் Fan என்றும், நேற்று தான் FDFS பார்த்துவிட்டு வந்ததாகவும் தெரிவித்தார். சனம் செட்டி பேசிக்கொண்டிருக்கும்போதே அங்கிருந்த மாணவர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கோபமடைந்த சனம் செட்டி, இது ஜனநாயகமே இல்லை என்று விமர்சிக்க தொடங்கி விட்டார். மேலும் ஆத்திரத்தில் பேசிய அவரிடம் இருந்து, போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மைக்கை வாங்கியுள்ளனர். இதனால் அவமானப்பட்ட சனம், அங்கிருந்து ஆத்திர முகத்தோடே வெளியேறினார். அதே வேளையில், போராட்டத்தை குறித்தும் வெளியே வந்து அவதூறு பரப்பும் நோக்கில் பேசினார்.

மாணவர்களின் போரட்டத்தை திசைத்திருப்பும் நோக்கிலும், கொச்சைப்படுத்தும் நோக்கிலும் வீண் பழியை சுமத்தினார். ஏற்கனவே தமிழ்நாட்டில் இளைஞர்கள், மாணவர்கள் நடத்தும் அறவழி போராட்டத்துக்கு ஆளும் தவெக, அனுமதி கொடுக்காமல் அராஜக போக்கில் ஈடுபட்டு வருகிறது. அதோடு போராடும் மாணவர்கள் மீது தாக்குதலும் நடத்தி வருகிறது.
இவை எதையும் கண்டும் காணாததுமாய் விஜய் இருந்து வருகிறார். அதே வேளையில் தனது திரைப்படத்தை காண நேரம் ஒதுக்கும் விஜய், மக்கள் போராட்டத்தை வேடிக்கை பார்த்து வரும் அவல நிலையை மக்களும், இளைஞர்களும் வன்மையாக கண்டித்து வரும் சூழலில், சனம் செட்டி பேசியது பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்களை எழுப்பி வருகிறது.






