
முரசொலி தலையங்கம் (25-07-2026)
கேவலம்! மகா கேவலம்!
ஓடாத படத்தை உட்கார வைத்து பார்க்கச் சொல்வதால் வேதனை தாங்காமல் அழுகிறார்கள் அமைச்சர்கள்.
டெல்லி முதல் சென்னை வரை நீட் தேர்வுக்கு எதிராக மகத்தான போராட்டங்கள் நடந்து வரும் போது, தனது படம் வெளியாவது மட்டும்தான் தனக்கு முக்கியம் என்று முதலமைச்சர் விஜய் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்.
தினமும் பாலியல் வன்கொடுமைகள் – போதைப் பொருட்கள் நடமாட்டம் – கொலைகள் – கொள்ளைகள் – கனிம வளங்கள் திருட்டு – ஊழல்கள் – லஞ்சம் வாங்கி த.வெ.க. நிர்வாகிகள் மாட்டிக் கொள்வது – கோவில் சொத்தை ஆட்டையைப் போடுவது – அரசு வழக்கறிஞர் நியமனத்தில் லஞ்சம் – டாஸ்மாக் கடைகளை மூடுவதைப் போல மூடி ‘எலைட் பார்’களாகத் திறந்தது – காவல் நிலைய மரணங்கள் – ஆணவக் கொலைகள் – தினமும் தலைமைச் செயலகம் வந்து தூங்கிவிட்டுச் செல்வது – எந்த அரசாணைகளையும் போடாமல் பழைய திட்டங்களின் பெயரை மட்டும் நீக்குவது என, மக்களுக்குச் சம்பந்தமில்லாத ஒரு அரசாங்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் விஜய், இதனை மறைக்கவே தனது படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்.
ஆறு சிலிண்டர் இலவசம் என்று சொன்னதை மறக்க வேண்டாமா? மகளிருக்கு மாதம் 2500 ரூபாய் என்பதை மறக்க வேண்டாமா? திருமணத்தின்போது 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை என மாமன் சீரை மறக்க வைக்க வேண்டாமா? மூத்த குடிமக்களுக்கு மாதம் 3000 என்பது நினைவுக்கு வரக்கூடாது. வேலை இல்லாப் பட்டதாரிகளுக்கு மாதம் 4000 ரூபாய் என்று சொன்னது நினைவுக்கு வரக்கூடாது. அதற்காக மீண்டும் சினிமா போதையை ஊட்டித் தூங்க வைக்கப் பார்க்கிறார்.
‘ஜனநாயகன்’ என்ற சொல்லைச் சொல்வதற்கு அவருக்கு யோக்கியதை இருக்கிறதா? ஜனநாயகப் பூர்வமாகப் போராடும் இளைஞர்கள், மாணவர்கள், மாணவியரை லத்தியாலும் குண்டாந்தடியாலும் தாக்கித் தரதரவென இழுத்து போலீஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருக்கிறது விஜய் போலீஸ். சாலையில் திரண்டால் கைது என்பதைத் தாண்டி, கல்லூரிகளுக்குள் – கல்லூரி விடுதிக்குள் சென்று மாணவர்களைக் கைது செய்கிறது விஜய் போலீஸ். டெல்லியைப் போலவே ‘நேம் போர்டு’களை எடுத்து விட்டு வந்து போலீஸார் அராஜகம் செய்கிறார்கள். போராடும் உரிமையைக்கூட பறித்துவிட்ட விஜய்க்கு ‘ஜனநாயகன்’ என்ற பெயர் ஒரு கேடா?
அரசாங்கத்தைப் பற்றி, முதலமைச்சரைப் பற்றி, அமைச்சர்கள் பற்றி சிறு விமர்சனம் செய்தாலே உடனே கைது. ‘’அரசை, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றம் ஆகாது. சமூகத்துக்கு இடையிலான பகை, வெறுப்பை விதைப்பதாகக் கூற முடியாது’’ என்று விஜய் தலையில் கொட்டி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

100 கோடி ரூபாய் மதிப்பிலான பழனி கோவில் சொத்தை 2 கோடி ரூபாய்க்கு தனியாருக்குத் தாரை வார்த்த அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷை விமர்சித்துப் பதிவு போட்ட வினோத் சூர்யா என்பவரைக் கைது செய்தார்கள். அவரைப் பிணையில் விடுதலை செய்யச் சொன்ன உயர்நீதிமன்றம்தான் இத்தகைய அறிவுரையைக் கூறியுள்ளது. யார் பதிவு போட்டாலும் கைது செய்யும் விஜய், ‘ஜனநாயகன்’ என்ற சொல்லை உச்சரிக்கலாமா?
தேர்தலுக்கு முன்னதாக இணையத்தில் அவர்களாகவே படத்தை வெளியில் விடுகிறார்கள். வெளியில் யாரோ விட்டு சதி செய்ததாக ஒப்பாரி வைக்கிறார்கள். இதற்குக் காரணம் என்று ஒருவர் கைது செய்யப்படுகிறார். விஜய் கையில் ஆட்சி வந்ததும் அந்த நபர் விடுதலை செய்யப்படுகிறார். படத்தின் தயாரிப்பாளருக்கு தமிழ்நாட்டின் பிரதிநிதியாக டெல்லியில் பதவி தரப்படுகிறது. படம் மீண்டும் வெளியாகிறது.
வாக்களித்த ரசிகனுக்கு தனது கடைசிப் படத்தில் கூட நன்மை செய்தாரா என்றால் இல்லை. 200 ரூபாய் டிக்கெட் 2000 ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் முதலமைச்சர் பெயரைச் சொல்லி ‘கொள்ளையோ கொள்ளை’ நடந்துள்ளது. சில இடங்களில் திரையரங்குகளிலேயே 500க்கும் 600க்கும் விற்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக விற்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தைக் கையில் வைத்துள்ள விஜய் தனது ரசிகர்களின் பாக்கெட்டுகளையே சூறையாடி இருக்கிறார். ‘ஆன்லைனில் டிக்கெட்டுகள் இருப்பதுபோலக் காண்பித்தாலும் டிக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை’ என்றும் சில ஊர்களில் புகார்கள் வந்துள்ளன.
“டிக்கெட்டுக்கு அதிக விலை கேட்டால் உங்க அண்ணனிடம் சொல்லுங்கள் என்னும் குரல் ஏன் இன்னும் வரவில்லை?’’ என்று எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா கேட்டுள்ளார். தனது தொழிலில், தனது படத்தில், தனது ரசிகர்களுக்குத் துரோகம் இழைத்திருக்கிறார் விஜய். தனது கடைசிப் படத்தில்கூட துளி நன்மையும் செய்யவில்லை விஜய்.
ஓடாத படத்தைப் பார்க்க ஒட்டுமொத்த தமிழ்நாடு அமைச்சரவையும் தியேட்டருக்கு ஓடி இருக்கிறது. தலைமைச் செயலகமே வெறிச்சோடியது. தாங்கள் படம் பார்க்கும் காட்சியை தாங்களே எடுத்துப் போட்டு சல்லித்தனங்கள் நடக்கிறது. ஒரு அமைச்சர் அழுகிறார். அதை வீடியோவாக்கிப் போடுகிறார். அதைப் பார்த்து அனைத்து அமைச்சர்களும் அழுது ‘மீம்ஸ்’ போடுகிறார்கள். முக்கியச் சாலைகளில் ஆட்கள் நடமாட முடியவில்லை. வாகனங்கள் செல்ல முடியவில்லை.
விஜய் என்ற தனிமனிதனின் விளம்பர வெறிக்காக ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் தியேட்டராக மாற்றப்படுவது கேவலம்! மகா கேவலம்!
‘வடக்கு வடக்கு என்று கிண்டலடித்தீர்களே! இப்போது வடக்கு கல்விக்காகப் போராடுகிறது. தெற்கு சினிமா தியேட்டரில் சீரழிகிறது’ என்று சமூக வலைதளங்களில் வரும் விமர்சனத்தைப் படிக்கும் போது அவமானத்தால் துடிக்கிறோம்.






