மு.க.ஸ்டாலின்

“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!

“கடைசி மூச்சு இருக்கும்வரைக்கும், தமிழ்நாட்டினது, தமிழினத்தின் உரிமைகளுக்காக இந்த ஸ்டாலின் களத்தில் நிற்பான்! சண்டை செய்துகொண்டே இருப்பான்!”

“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (14-04-2026) வேலூரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

இந்திய விடுதலைக்கான புரட்சி துவங்கிய வேலூருக்கு நான் வந்திருக்கிறேன். நாம் யாருக்கும் அடிமை இல்லை என்று முழங்கிய இந்த மண்ணில் இருந்து, டெல்லியின் ஆதிக்கத்திற்கு எதிராகத் தீர்ப்பெழுத உங்கள் ஆதரவைக் கேட்டு வந்திருக்கிறேன். “வீழ்ந்து கிடந்தால் விடியல் இல்லை” என்று உணர்த்திய வேலூர் மண்ணில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு கேட்டு வந்திருக்கிறேன்!

இடைவிடாத இந்தப் பிரச்சாரப் பயணத்தில், தமிழ்நாட்டின் பாதிப் பகுதிகளைச் சுற்றி வந்துவிட்டேன். ஒவ்வொரு நாளும் இரண்டு மாவட்டங்களுக்குப் பயணிக்கிறேன். இலட்சக்கணக்கான மக்களை நேரில் சந்திக்கிறேன். நான் சந்திக்கும் ஒவ்வொருவரும் சொல்வது என்னவென்றால், “தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சிப் பயணம் தொடர வேண்டும்; அதற்கு உங்களது திராவிட மாடல் ஆட்சிதான் மீண்டும் அமைய வேண்டும்” என்று சொல்கிறார்கள்.

கிராமங்களில் இருந்து கோட்டை வரைக்கும் உதயசூரியனுக்குத்தான் ஆதரவு இருக்கிறது! “இது நம்ம காலம், இறங்கி ஆடுங்கள் தலைவரே” என்று சொல்கிறார்கள்! இறங்கி ஆட நான் ரெடி... திராவிட மாடல் 2.0 ஆட்சிக்கு நீங்கள் ரெடியா? நன்றி! இப்போது, உங்கள் அனுமதியுடன் நமது வெல்லும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தலாமா?

முதலில், காட்பாடி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் அமைச்சர் என்னுடைய ஆருயிர் அண்ணன் துரைமுருகன் அவர்கள். அரசியல் வரலாற்றில் 13-வது முறையாகச் சட்டமன்றத் தேர்தலில் களம் காணும் பெருமைக்கு உரியவர்.

தலைவர் கலைஞர் அவர்களுக்கும், அதன்பிறகு எனக்கும் உறுதுணையாக இருந்து இயக்கப் பணி ஆற்றி வருபவர். மாணவப் பருவம் தொட்டு, இன்று 87 வயதிலும் கழகப் பணியையும், மக்கள் பணியையும் இளமைத் துடிப்புடன் செய்பவர். அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

அடுத்து, அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் ஏ.பி. நந்தகுமார் அவர்கள். இரண்டு முறை வெற்றி பெற்று இந்தத் தொகுதி மக்களுக்குத் தேவையான பல திட்டங்களை நிறைவேற்றியவர். கே.வி. குப்பம் ஒன்றிய மாணவரணித் தலைவராக வாழ்க்கையைத் தொடங்கி, இன்று வேலூர் தெற்கு மாவட்டச் செயலாளராக உயர்ந்திருக்கிறார். அவருக்கு 2016, 2021 தேர்தல்களில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் கொடுத்ததுபோன்று, மூன்றாவது முறையும் உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் அத்தனை பெரும் ஆதரவு தந்திட வேண்டும்.

அடுத்து, வேலூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் கார்த்திகேயன் அவர்கள். வேலூர் மாநகரக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். 2016, 2021 இரண்டு தேர்தல்களிலும் வென்று உங்கள் குரலாகச் சட்டமன்றத்தில் ஒலித்தவர். அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் அனைவரும் ஆதரவு தந்திட வேண்டும்.

அடுத்து கே.வி. குப்பம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் எம். ராஜேஸ்வரி அவர்கள். மருத்துவரான இவர், தி.மு.க. மருத்துவர் அணியின் மாநிலத் துணை அமைப்பாளராகச் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். மருத்துவப் பணியில் இருந்து அரசியல் பணிக்கு வந்திருக்கிறார். முதன்முறையாகத் தேர்தல் களம் காணும் மருத்துவரான அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் அனைவரும் ஆதரவளித்திட வேண்டும்.

“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!

அடுத்து, குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் தே.மு.தி.க.வைச் சேர்ந்த கே.பி. பிரதாப் அவர்கள். நினைவில் வாழும் என்னுடைய அருமைச் சகோதரர் நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களது அன்பைப் பெற்றவர். கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க.வின் பொதுச்செயலாளர் அருமைச் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளவர். அவருக்கு முரசு சின்னத்தில் நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

இந்த வேட்பாளர்களது வெற்றி உறுதிதானே? வேட்பாளர்கள் அமரலாம்!

எப்படிப்பட்ட நிலையில் நாம் இந்தத் தேர்தலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்று தமிழ்நாட்டு மக்கள் உணர வேண்டும்! இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, பசியும் வறுமையும்தான் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை நிலையாக இருந்தது. அந்த அவலநிலையை மாற்ற வேண்டும் என்று இந்திய அரசு கொண்டு வந்ததுதான் குடும்பக் கட்டுப்பாடு திட்டம்! “அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள்” என்று சொன்னார்கள். சொன்ன மாதிரியே, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களும், இன்னும் சில மாநிலங்களும் அளவோடு பெற்று, வளமான எதிர்காலத்தை நோக்கி நடைபோட ஆரம்பித்திருக்கிறோம்.

ஆனால், இப்போது ஒன்றிய அரசு என்ன பண்ணப் போகிறது என்றால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, வளர்ச்சியை நோக்கி நடைபோட்டதற்காகவே நம்மைத் தண்டிக்கப் பார்க்கிறார்கள். நடக்கப் போகும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இதற்கான சதித் திட்டத்தைச் சட்டமாக நிறைவேற்றலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்... இன்றைக்கு மதியம் கூட இதுசம்பந்தமாக, மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு நான் எச்சரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டிருக்கிறேன்.

தமிழ்நாடு என்பதை வெறும் மாநிலமாகவோ, நிலப்பரப்பாகவோ மட்டும் பார்க்கக் கூடாது! எட்டுக் கோடி தமிழ்மக்களின் உணர்வும், உரிமைக்குரலும்தான் தமிழ்நாடு! தமிழ்நாட்டின் குரல்வளையை நெரிக்க நினைத்தால் நாம் சும்மா இருக்கக் கூடாது!

நாம் எதிர்கொண்டிருக்கும் ஆபத்து குறித்து, ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்து கொண்டிருக்கின்ற பாசிச, நாசகார வேலைகள் குறித்துப் பேசினால், “படிப்பறிவற்றவர்கள்” என்று சொல்லியிருக்கிறார் பியூஷ் கோயல் அவர்கள். மிகவும் திமிர்த் தனமாக நாவடக்கமின்றி பேசுகிறார்.

பியூஷ் கோயல் அவர்களே… நாவை அடக்கிப் பேசுங்கள்! நீங்கள் தமிழ்நாட்டு பா.ஜ.க.வுக்கு மட்டும்தான் இன்-சார்ஜ். அதை மறந்துவிட்டு, அத்துமீறி வாய்க்கொழுப்புடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்... இங்கு மரியாதை கொடுத்தால்தான், திரும்ப மரியாதை கிடைக்கும்! பா.ஜ.க. தமிழ்நாட்டை பற்றித் தவறாக எடைபோட்டுக் கொண்டிருக்கிறது!

மாண்புமிகு பிரதமர் அவர்களே... உங்கள் முன்னால் கைகட்டிக்கொண்டு அடிமையாக இருக்கிறார்களே சிலர்... அவர்களை வைத்துத் தமிழ்நாட்டைக் குறைத்து எடைபோடாதீர்கள்... தமிழர்கள் அறிவானவர்கள் - சுயமரியாதைமிக்கவர்கள்! எங்கள் தன்மானத்தின் மீது கை வைத்தால், டெல்லியில் இருக்கும் உங்களது ஆணவத்துக்கு நாங்கள் கொடுக்கும் பதிலடி கடுமையானதாக இருக்கும்!

தமிழ்நாட்டுக்காக, தமிழினத்துக்காகப் போராட இப்போது யார் இருக்கிறார்கள்? தந்தை பெரியார் இல்லை; பெருந்தலைவர் காமராசர் இல்லை; பேரறிஞர் அண்ணா இல்லை; தலைவர் கலைஞர் இல்லை என்று நினைத்தீர்கள் என்றால், அது பெரிய தவறு! அவர்களது முழு உருவமாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்!

“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!

அவர்களது ஆற்றல் எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் ரூபத்தில் என்கூட இருக்கிறது! கடைசி மூச்சு இருக்கும்வரைக்கும், தமிழ்நாட்டினது, தமிழினத்தின் உரிமைகளுக்காக இந்த ஸ்டாலின் களத்தில் நிற்பான்! சண்டை செய்துகொண்டே இருப்பான்!

பிரதமர் அவர்களே... தமிழ்நாடு தனது இறுதி எச்சரிக்கையைக் கொடுத்தாச்சு! நெருப்புடன் விளையாட வேண்டாம்!

நமது திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரைக்கும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும், ஒவ்வொரு வட்டத்துக்கும், ஒவ்வொரு ஊராட்சிக்கும் என்ன தேவை என்று பார்த்துப் பார்த்துச் செய்து கொடுத்திருக்கிறோம். இப்படி, இந்த வேலூர் மாவட்ட வளர்ச்சிக்காகச் செய்யப்பட்டிருக்கும் திட்டங்களில் சிலவற்றை மட்டும் ஹைலைட்ஸாகச் சொல்ல விரும்புகிறேன்.

வேலூர் மாவட்டம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிய காலத்தில், தண்ணீர் பஞ்சத்தைப் போக்கும் வகையில் ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்தோம். அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த நான்தான், அதைத் தொடங்கி வைத்தேன்.

வேலூர் மையப்பகுதியில் 198 கோடி ரூபாய் மதிப்பில் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை,

சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் கல்விசார் கட்டடங்கள்,

காட்பாடி அருகே சட்டக் கல்லூரி,

அப்துல்லாபுரம் அருகே டைடல் பார்க்,

10 மேம்பாலங்கள், 7 தடுப்பணைகள்,

பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள்,

அணைக்கட்டு அரசு மருத்துவமனை,

குடியாத்தத்தில் வட்டத் தலைமை மருத்துவமனை,

குடியாத்தம் சேர்த்துவண்டை முதல் நெல்லூர் பேட்டை ஏரிக்கரை வரை குடியாத்தம் சுற்றுச்சாலை,

அப்துல்லாபுரம் விமான நிலையம் முதல் டி.சி. குப்பம் ஒடுகத்தூர் வரை ரூபாய் 50 கோடி மதிப்பிலான நான்கு வழிச் சாலை,

பொன்னை அருகே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 35 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்மட்ட மேம்பாலம்,

தொழிலாளர்களுக்காக 45 கோடி ரூபாய் மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி,

45 கோடி ரூபாய் மதிப்பில் காட்பாடி இரண்டாவது ரயில்வே மேம்பாலம் பணிகள் துவங்கப்பட இருக்கிறது.

176 கோடி ரூபாய் மதிப்பில் அணைக்கட்டுப் பகுதியில், மேல் அரசம்பட்டு கிராமத்தில் தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது.

100 கோடி ரூபாய் மதிப்பில் காங்கேயநல்லூரில் இருந்து, சத்துவாச்சாரி வரையிலான மேம்பாலப் பணிகள் நிறைவு பெறும் நிலையில் இருக்கிறது. இப்படி எண்ணற்ற சாதனைகளைச் செய்திருக்கிறோம்.

ஒவ்வொரு திட்டத்தை செயல்படுத்தும்போதும் என் மனதில் என்ன ஓடும் தெரியுமா? மாவட்டங்கள் உட்கட்டமைப்பில் வளர்ச்சி அடைய வேண்டும்! மக்கள் பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும்! இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும்! மகளிர் வாழ்வு செழிக்க வேண்டும்!

மொத்தத்தில் திராவிட மாடலால் தமிழ்ச் சமூகமே உயர வேண்டும்! இதுதான், முதலமைச்சர் பொறுப்பில் உட்கார்ந்ததில் இருந்து எனது எண்ணமாக இருக்கிறது! இப்படி நினைத்துதான் ஒவ்வொரு திட்டத்தையும் உருவாக்குகிறேன். ஒவ்வொரு கையெழுத்தையும் போடுகிறேன். ஒவ்வொரு ஃபைலிலும் கையெழுத்துப் போடும்போது, அதனால் பயன்பெறும் இலட்சக்கணக்கான மக்களின் மகிழ்ச்சிதான் என் கண் முன்னால் நிற்கும்!

“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!

இங்கு சிறுபான்மை மக்கள் அதிகமாக வாழ்கிறீர்கள். நாட்டின் பிற பகுதிகளில் சிறுபான்மை மக்கள் எத்தகைய அச்சுறுத்தல்களை, ஆபத்துகளை எதிர்கொண்டிருக்கிறார்கள் என்று உங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்!

ஆனால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சிறுபான்மையினரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றால், திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் வலிமையாக இருப்பதால்தான்! தலைவர் கலைஞர் வழியில், இந்த ஸ்டாலின் அதை உறுதி செய்திருக்கிறேன். தி.மு.க.வும், தோழமை இயக்கங்களும்தான் சிறுபான்மையின மக்களின் உண்மையான காவல் அரணாக இருக்கிறோம்.

நமது திராவிட மாடல் அரசில், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்குச் செய்யப்பட்டிருக்கும் திட்டங்களைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்,

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக, சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில், தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியிருக்கிறது.

2024 முதல், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு ஆண்டு நிர்வாக மானியம் 80 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து, 11 ஆயிரத்து 364 ஹஜ் பயனாளிகள் புனிதப் பயணம் மேற்கொண்டு இருக்கிறார்கள். இதற்காக அரசு சார்பில் 24 கோடியே 56 இலட்சம் ரூபாய் மானியமாக வழங்கியிருக்கிறோம்.

ஒன்றிய அரசு, சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு வழங்கி வந்த கல்வி உதவித்தொகையை நிறுத்திவிட்டது. எனவே, நமது அரசு சார்பில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் மாணவிகளுக்கு 1000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கியிருக்கிறோம்.

2022-ஆம் ஆண்டில் இருந்து, 159 கல்வி நிறுவனங்களுக்குச் சிறுபான்மையினர் தகுதிச் சான்றிதழ் வழங்கியிருக்கிறோம். இதில் 103 சிறுபான்மை நிறுவனங்களுக்கு நிரந்தரச் சிறுபான்மையினர் தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

தொன்மையான பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களைப் புனரமைக்க இதுவரை 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 10 தர்காக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

பள்ளி வாசல்கள், தர்காக்கள், வக்பு நிறுவனங்களைப் புனரமைக்க இதுவரைக்கும் 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 308 வக்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

கிறித்தவர்களுக்கான கல்லறைத் தோட்டங்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான்கள் இல்லாத மாவட்டத் தலைநகரங்களில் தேவைப்படும் நிலத்தை, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கையகப்படுத்தி, மாநகராட்சி, நகராட்சி சார்பில் கல்லறைத் தோட்டங்கள் மற்றும் கபர்ஸ்தான்கள் அமைக்க ஆணைகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

இப்படி, சிறுபான்மை மக்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுப்பது மட்டுமல்ல. உங்களுக்கு ஒரு அநீதி இழைக்கப்பட்டால் அங்கே பாதுகாப்பு அறனாக நிற்பது யார்? நாங்கள்தான்! தி.மு.க.தான்! இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான்!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தார்கள்... வீதி வீதியாக சென்று, நம்மோடு வாழும் இஸ்லாமிய சொந்தங்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது; நாம்தான் துணை நிற்க வேண்டும் என்று, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களிடமும் கையெழுத்துக் கேட்டு, கையெழுத்து இயக்கம் நடத்தி, பாதுகாப்பு தந்தது யார்? தி.மு.க.!

இதைக் கண்டித்து இந்த ஸ்டாலின் தலைமையில் மாபெரும் ஊர்வலம் சென்றோம். அதற்காக, என் மீதும், என்னுடன் வந்த எட்டாயிரம் பேர் மீதும் F.I.R. போட்டார்கள். போட்டது யார்? பச்சோந்திக்கே டஃப் கொடுத்துக் கலர் மாறுகிறாரே அந்த பழனிசாமிதான்!

அதுமட்டுமா, பழனிசாமி அ.தி.மு.க. என்னவெல்லாம் செய்தது? C.A.A. சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது. மாநிலங்களவையில் அ.தி.மு.க. எதிர்த்து வாக்களித்திருந்தால், இந்தச் சட்டமே வந்திருக்காது. ஆதரித்து வாக்களித்தது மட்டுமல்ல, இந்தச் சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டார்கள் என்று கொச்சைத்தனமாக கேள்வி கேட்டார் பழனிசாமி!

இவரது துரோகத்திற்குச் சிறுபான்மையின மக்கள் பதிலடி கொடுக்கத் தொடங்கியதும்தான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வைப் பிரிந்த மாதிரி ஒரு கபட நாடகம் போட்டார்... அதோடு, கூட்டணித் தர்மத்துக்காகத்தான் இந்தச் சட்டங்களை ஆதரித்தோம் என்று கதை சொன்னார்.

ஓநாய் எதற்கு அழும் என்று எல்லோருக்கும் தெரியும்தானே? அதனால் மக்கள் என்ன செய்தார்கள். பழனிசாமியின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்க முடியாது என்றுதான், பத்து தோல்வி பழனிசாமி என்று ஒரு பட்டத்தைக் கொடுத்தார்கள்! இதிலிருந்தாவது பழனிசாமி பாடம் கற்றுக்கொண்டாரா? மறுபடியும் பா.ஜ.க.வைத் தோளில் சுமந்துகொண்டு வருகிறார்.

“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!

அண்மையில் நாகப்பட்டினத்தில் பேசிய பழனிசாமி, இன்னொரு அரிய முத்தை உதிர்த்திருக்கிறார். என்ன தெரியுமா? “எங்களுக்குக் கூட்டணி வேறு... கொள்கை வேறு” என்று பேசியிருக்கிறார்.

பழனிசாமி அவர்களே... அப்படி என்னதான் உங்களிடம் கொள்கை இருக்கிறது? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் கேட்போம்...

“காலைப் பிடி, காலை வாரு, முதுகில் சவாரி செய்து முதுகைக் குத்து!” இதுதானே உங்கள் கொள்கை! கட்சியின் பெயரில் இருக்கும் திராவிடம் என்றால் என்ன என்று கூடத் தெரியாது என்று சொன்னவர்தானே நீங்கள்! உங்களுக்குத் திராவிடமும் தெரியாது. அண்ணாவும் தெரியாது! அதனால்தான் ஒட்டுமொத்த தமிழ்நாடும் பழனிசாமியை அரசியல் அவமானமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது!

அப்படிப்பட்ட பழனிசாமியை முகமூடியாகப் பயன்படுத்திக்கொண்டு ‘டபுள் எஞ்சின்’ என்ற பெயரில், N.D.A. ஆட்சி என்ற பெயரில் தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிடலாம் என்று பா.ஜ.க. திட்டம் போடுகிறது. அ.தி.மு.க. வெற்றி பெற்றால், அது N.D.A. ஆட்சியாகத்தான் இருக்கும் என்று வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்... ஆனால், தமிழ்நாட்டு மக்களிடம் மோடி மஸ்தான் வேலையும் எடுபடாது; அடிமைசாமியின் அடகு வைக்கும் வேலையும் நடக்காது!

ஏனென்றால், தமிழ் மக்களுக்குள் இருப்பது, அகர முதல தொட்டுத் தாடிக் கிழவன் பிளட்டு! அறிஞர் அண்ணா பிளட்டு! தலைவர் கலைஞர் பிளடு!

நமது திராவிட மாடல் ஆட்சியில் சதிகளை முறியடித்துச் சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறோம்! அடிமைத்தனத்தை ஒழித்து, அதிகார மிரட்டல்களைத் தவிடுபொடியாக்கி, அன்பால் மக்களை ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம்! வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல; கோடிக்கணக்கான தமிழ் மக்களின் புன்னகையால் எழுதப்பட்டிருக்கும் சாதனைச் சரித்திரம்தான் திராவிட மாடல்!

முதலமைச்சரான முதல் நாள், நான் போட்ட முதல் கையெழுத்தே, மகளிர் முன்னேற்றத்துக்கான மாபெரும் படிக்கட்டாக அமைந்த விடியல் பயணத் திட்டம்! நம்முடைய அரசு பொறுப்பேற்ற 1,800 நாட்களில், 935 கோடிக்கும் அதிகமான பயணங்களை மகளிர் மேற்கொண்டிருக்கிறார்கள்...

ஊரெல்லாம் சுற்றி, பூ, காய்கறி விற்று 5 ஆயிரம் சம்பாதித்தால், அதில் ஆயிரம் ரூபாய் பஸ்ஸுக்கே போய்விடுகிறதே என்று கவலைப்பட்டிருந்த பல சகோதரிகள், விடியல் பயணத்தால் பயணிக்கும் ஒவ்வொரு நாளும் இந்த ஸ்டாலினை நினைப்பார்கள்... பக்கத்து டவுனுக்கு வேலைக்குச் செல்லும் சகோதரிகள், இந்த ஸ்டாலினுக்குத் தேங்க்ஸ் சொல்வார்கள்... இரண்டு மூன்று ஊர் தள்ளி இருக்கும் அப்பா, அம்மாவையும், உறவினர்களையும் அடிக்கடி பார்க்க முடியாமல் தவித்த பெண்கள், நினைத்த உடனே பஸ் ஏறிச் சென்று அவர்கள் அப்பா, அம்மாவைப் பார்க்கும்போது, இந்த அண்ணனை நினைத்துக் கொள்வார்கள். இப்படி மகளிர் வாழ்வோடு அங்கமாகியிருக்கும் விடியல் பயணத்துக்கான பேருந்துகளை, விரைவில் அமையப் போகும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் அதிகரிக்கப் போகிறோம்!

இதுமட்டுமா, ஒரு கோடியே 31 இலட்சம் மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாயை வழங்கிக் கொண்டிருக்கும், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” இனி உங்களின் உரிமைத்தொகை எவ்வளவு? இரண்டாயிரம் ரூபாயாக உயரப் போகிறது!

அடுத்து, அரசுப் பள்ளியில் படித்துக் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம்! இனி அந்தக் தொகை ஆயிரத்து 500 ரூபாயாக உயரப் போகிறது!

19 இலட்சம் பள்ளி மாணவர்களுக்குச் சூடாக, சுவையாக, சத்தான உணவை வழங்கும் “காலை உணவுத் திட்டத்தை” இனி எட்டாம் வகுப்பு வரைக்கும் விரிவாக்கம் செய்யப் போகிறோம்!

அதேபோன்று, பல லட்சம் உயிர்களைக் காக்கும் “மக்களைத் தேடி மருத்துவம்!”

விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய ஆயிரக்கணக்கானவர்களின் உயிர்களையும் – குடும்பங்களையும் காப்பாற்றிய இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48.

பாதம் பாதுகாப்போம்,

இதயம் காப்போம்,

சிறுநீரகப் பாதுகாப்புத் திட்டம்,

ஒன்றிய அரசே பின்பற்றப் போவதாகச் சொல்லியிருக்கும், தோழி விடுதி,

ஸ்டார்ட்-அப் தமிழ்நாடு,

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்,

கலைஞர் கனவு இல்லம்!

இப்படி நாள் முழுவதும் என்னால் பட்டியலிட முடியும்! இத்தனை திட்டங்களை நாம் செய்கிறோம் என்றால், அது உங்கள் கையில் வந்து சேர முக்கியக் காரணமாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். அப்படிப்பட்ட அரசு ஊழியர்கள் மீது எஸ்மா, டெஸ்மா தொடங்கி, ஒரே கையெழுத்தில் ஒன்றரை லட்சம் பேர் டிஸ்மிஸ் என்று ஏகப்பட்ட கொடுமைகளை அனுபவித்த ஆட்சியாக அ.தி.மு.க. ஆட்சி இருந்தது. அதிலும் முதலமைச்சராக இருந்த பழனிசாமியே அரசு ஊழியர்களைக் கொச்சைப்படுத்தி பேசினார்.

ஆனால், தலைவர் கலைஞர் அவர்கள் வழியில் நமது திராவிட மாடல் அரசுதான், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஏராளமான சாதனைகளைச் செய்து, அவர்களது கண்ணீரைத் துடைத்து, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கிறோம்; இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குடும்பங்களில் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் உருவாக்கியிருக்கிறோம்!

2021-ல் திராவிட மாடல் ஆட்சிக்காக உங்கள் ஆதரவைக் கேட்டு வரும்போதே, அடுத்த பத்து ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையை உறுதிமொழிகளாகக் கொடுத்துவிட்டுத்தான் நான் வாக்கு கேட்டேன். அந்த அடிப்படையில், திராவிட மாடல் என்பது 2.0 ஆட்சியில் அடையவுள்ள புதிய உயரங்களுக்கான அடித்தளம். அதற்கான செயல் திட்டமாகத்தான் நமது ‘சூப்பர் ஸ்டாரை’ களமிறக்கியிருக்கிறோம்!

இந்தத் தேர்தலின் சூப்பர் ஸ்டார் யார்? நமது தேர்தல் அறிக்கை! எட்டாயிரம் ரூபாய் கூப்பன் வழங்கப் போகிறோம்! இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சிதானே? இப்போதே வீட்டுக்கு வீடு என்ன டிஸ்கஷன் தெரியுமா? இல்லத்தரசி கூப்பனை வைத்து என்ன புதிய பொருள் வாங்கலாம்? இதுதான் டிஸ்கஷன்!

“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!

இந்தக் கூப்பனை வைத்து, உங்களுக்குத் தேவைப்படும் வீட்டு உபயோகப் பொருளைப் புதிதாகவும் வாங்கிக் கொள்ளலாம்; இல்லை என்றால் பழைய பொருளை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய பொருளையும் வாங்கிக் கொள்ளலாம்! எல்லாமே உங்களுடைய சாய்ஸ்தான்! உங்களுக்குப் பிடித்த கடையில், உங்களுக்குப் பிடித்த பிராண்டை வாங்கிக் கொள்ளலாம்!

அடுத்து, 20 லட்சத்துக்கும் அதிகமான உழவர்கள் பயன்பெறும் வகையில், நவீன மின்சாரப் பம்புசெட்டுகளை வழங்கப் போகிறோம்!

உயர்கல்வி முடித்த 5 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், ‘நான் முதல்வன்’ திட்டத்தில் ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகையுடன் 6 மாதம் பயிற்சி வழங்கப் போகிறோம்.

பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.

முதியோர் உதவித்தொகை ஆயிரத்து 200 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும்.

2030-ஆம் ஆண்டுக்குள் மாவட்ட மற்றும் வட்ட அளவிலான அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான கருவிகள் இரண்டு மடங்காக்கப்படும்.

கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாக, வீடற்ற ஏழைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்டிக் தரப்படும்.

இப்படியெல்லாம் பார்த்துப் பார்த்து தமிழ்நாட்டுக்குச் செய்து தருவதால்தான், இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் குரலாக இருக்கிறது!

அதற்கு, காட்பாடி தொகுதியில் அண்ணன் துரைமுருகன் அவர்களுக்கும், அணைக்கட்டு தொகுதியில் நந்தகுமார் அவர்களுக்கும், வேலூர் தொகுதியில் கார்த்திகேயன் அவர்களுக்கும், கே.வி. குப்பம் தொகுதியில் டாக்டர் ராஜேஸ்வரி அவர்களுக்கும் வெற்றிச் சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்!

குடியாத்தம் தொகுதியில் பிரதாப் அவர்களுக்கு முரசு சின்னத்தில் நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்!

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.

நாம் போராடுவது, தனிப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல. இங்கிருக்கும் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்காக மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வெற்றிக்காக!

‘டபுள் எஞ்சின்’ ‘டப்பா எஞ்சின்’ என்று யாரும் தமிழ்நாட்டைச் சிதைக்க அனுமதிக்கக் கூடாது!

அ.தி.மு.க.வுக்குப் போடும் ஒவ்வொரு வாக்கும் பா.ஜ.க.வுக்குப் போடப்படும் வாக்கு! தமிழ்நாட்டை நூறு ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளும் வாக்கு! இது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்!

மீண்டும் சொல்கிறேன். தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்ற இந்த ஜனநாயகப் போரில், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க அனைவரும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று நம்முடைய ஒப்பற்றத் தலைவர் – தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் மகனாக கையெடுத்து கும்பிட்டுக் கேட்கிறேன்.

அடுத்து அமையவுள்ள நமது திராவிட மாடல் 2.0 ஆட்சியில், எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிப்போம்! இது உங்கள் ஸ்டாலினின் கேரண்டி! நல்லாட்சி தொடர்ந்திட ஆதரிப்பீர், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை!

வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக!

banner

Related Stories

Related Stories