
கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தருமபுரியில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் விவரம்:
வரலாற்றுச் சிறப்பும் – இயற்கை எழிலும் நிறைந்த தருமபுரிக்கு நான் வந்திருக்கிறேன்! தருமபுரி என்றாலே, வாழ்க்கையில் மறக்க முடியாத ஊர்! தமிழ்நாட்டுப் பெண்கள் என்னை அண்ணனாகப் பாசத்தோடு அழைக்கிறார்கள் என்றால், அதற்கு அடித்தளம் அமைத்த ஊர்தான், இந்த மாவட்டம்!
ஏனென்றால், நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக – துணை முதலமைச்சராக இருந்தபோது, மகளிர் சுய உதவிக்குழுவினருக்குப் பல மணிநேரம் மேடையில் நின்றபடியே சுழல்நிதி வழங்கி இருக்கிறேன். அந்த மகளிர் சுய உதவிக்குழுக்களை 1989-இல் தலைவர் கலைஞர் இந்த தருமபுரியில்தான் தொடங்கி வைத்தார்கள்!
இப்போது நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், மகளிர் மேம்பாட்டுக்கான புரட்சியாக மாறியிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விதையையும், இதே தருமபுரி மண்ணில்தான் விதைத்தோம்! மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கான முகாம்களைத் தொடங்கி வைக்க இதே தருமபுரிக்குத்தான் நான் வந்தேன்.
கோடிக்கணக்கான மக்களின் குறைகளுக்குத் தீர்வு கண்ட திட்டம்தான், "மக்களுடன் முதல்வர்" திட்டம்! அந்தத் திட்டத்தை ஊரகப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தி, நான் தொடங்கி வைத்ததும்,
இதே தருமபுரியில்தான்! கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதியமான்கோட்டைக்கு வந்தபோது, விவசாயப் பெருங்குடி மக்கள், இணையவழியில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்து, ஒரே நாளில் பயிர்க்கடன் பெறும் நடைமுறையை, முன்னோடித் திட்டமாக தொடங்கி வைத்தேன்.
இப்படி புதிய சாதனைத் திட்டங்களைத் தொடங்குவதற்கான இடமாக இருக்கும் தருமபுரிக்கு, தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்யும் கூட்டத்தை விரட்டியடியுங்கள் என்று நான் கேட்க வந்திருக்கிறேன்.
தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகத் தமிழ்நாடே ஓரணியில் அணி திரள வேண்டும் என்று கேட்க வந்திருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வலிமையை இன்னும் பல மடங்கு உயர்த்த உங்கள் ஆதரவைக் கேட்டு வந்திருக்கிறேன்!
தருமபுரி என்றாலே, அது திராவிட முன்னேற்றக் கழகம்தான்!அந்த அளவுக்கு ஏராளமான திட்டங்கள் நம்முடைய ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது! அதற்கு எடுத்துக்காட்டுதான், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்!
தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க, 2008-இல் தலைவர் கலைஞர் உருவாக்கிய அந்தத் திட்டம். அன்றைக்கு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த என்னுடைய மேற்பார்வையில்தான் நடந்தது!
மூன்று நகராட்சிகள் - 16 பேரூராட்சிகள் - 7 ஆயிரத்து 639 ஊரகக் குடியிருப்புகளில் வாழும் மக்களுக்குக் குடிநீர் வழங்கிய அந்தத் திட்டத்தை, ஆயிரத்து தொள்ளாயிரத்து 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜப்பான் நாட்டு நிதியுதவியோடு செயல்படுத்தி, பாதுகாப்பான குடிநீரை உங்களுக்கு வழங்கியவன்தான், உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கும் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!
இந்தத் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளையும் இப்போது நாம் செய்து கொண்டிருக்கிறோம்! இந்தப் பணிகள் எல்லாம் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு, தருமபுரியின் வளர்ச்சிப் பயணம் தொடர வேண்டும். அதற்காக, வேட்பாளர்களை உங்கள் அனுமதியோடு அறிமுகப்படுத்தலாமா?
முதலில், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் பழனியப்பன் அவர்கள். முன்னாள் அமைச்சர். முனைவர் பட்டம் பெற்றவர். நம்முடைய கழகத்தில் இணைந்ததிலிருந்து தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளராகச் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே, மொரப்பூர் மற்றும் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றித் தன்னுடைய தொகுதி மக்களுக்காக ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார். அவருக்கு, பாப்பிரெட்டிபட்டி தொகுதி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்கினை வழங்கிட வேண்டும்.
அடுத்து, பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் அவர்கள். மருத்துவராக இருந்து, மக்கள் பணியாற்றியவர். இந்த தருமபுரி மாவட்டம் உருவாகக் காரணமாக இருந்த முன்னாள் MLA டி.என். வடிவேலு அவர்களின் பேரன். ஏற்கனவே, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து சிறப்பாகப் பணியாற்றியவர். நம்முடைய கழகத்தின் அயலக அணி இணைச் செயலாளர். துடிப்பான இளைஞரான இவருக்கு, பாலக்கோடு தொகுதி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்கினை வழங்கி வெற்றி பெற வைக்க வேண்டும்.
அடுத்து, அரூர் சட்டமன்றத் தொகுதி நமது வெல்லும் வேட்பாளர் சண்முகம் அவர்கள். பத்தாண்டு காலம் தீர்த்தமலை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து, மிகச் சிறப்பாகப் பணியாற்றியவர். கழகத்தின் அயலக அணியின் தருமபுரி மாவட்டத் துணைத் தலைவராக இருக்கிறார். ஏற்கனவே, அரூர் பகுதி கிளைச் செயலாளராகவும் – ஒன்றிய பொருளாளராகவும் இருந்து சிறப்பாகச் செயல்பட்டவர். அவருக்கு, அரூர் தொகுதி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.
அடுத்து, தருமபுரி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் தே.மு.தி.க.வைச் சேர்ந்த டாக்டர் வி. இளங்கோவன் அவர்கள். நினைவில் வாழும் என்னுடைய ஆருயிர் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அன்பைப் பெற்றவர். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அவைத் தலைவர். மருத்துவராக இருந்து, மக்கள் பணியாற்ற வருகிறார். 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சித் தலைவராகி மக்களுக்கு பணியாற்றியவர். தே.மு.தி.க.வின் பொதுச்செயலாளர் அன்புக்குரிய சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இவருக்கு, நீங்கள் எல்லாம் ‘முரசு’ சின்னத்தில் வாக்களித்துப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
அடுத்து, பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் அவர்கள். என்னுடைய பெருமதிப்பிற்குரிய சமூக நீதிப் போராளி மருத்துவர் அய்யா ராமதாசு அவர்களின் நம்பிக்கைக்குரிய வலது கரமான அண்ணன் ஜி.கே. மணி அவர்களின் அருமை மகன்தான் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் அவர்கள். அவருக்கு, ‘கை’ சின்னத்தில் பென்னாகரம் தொகுதி மக்கள் வாக்கினை வழங்கி வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இங்கே நிற்கும் வேட்பாளர்களின் வெற்றி உறுதிதானே? நன்றி!வேட்பாளர்கள் அமரலாம்! உங்கள் வெற்றி உறுதியாகிவிட்டது!பொதுவாக என்ன சொல்வார்கள் என்றால், “கோடு போட்டால் ரோடு போடுவோம்” என்று சொல்வார்கள்… ஆனால், நம்முடைய திராவிட மாடலில், இந்தியாவுக்கே வழிகாட்டும் ரோட்டை நாம் போட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தப் பாதையில், முன்னோக்கிப் போகலாம் என்று ஒட்டுமொத்த இந்தியாவையும் அழைக்கிறோம். இது, பா.ஜ.க.வுக்குப் பிடிக்கவில்லை!
ஏனென்றால், இந்தியா வளர்ந்துவிட்டால், ஆர்.எஸ்.எஸ். உருவாக்க நினைக்கும் 200 ஆண்டுகாலப் பிற்போக்குச் சமூகத்தை உருவாக்க முடியாது! அந்தச் சமுதாயம் வந்தால்தான், மக்களை மயக்கி, உழைப்பைச் சுரண்டி ஒரு சிலர் மட்டும் வளமாக வாழலாம்.
ஆனால், நம்முடைய திராவிட மாடலில் வளர்ச்சி என்பது, எல்லோருக்குமானது! யாரோ ஒரு சிலர் மட்டும் வளர்ந்தால், அது பிசினஸ்! எல்லோரும் வளர வேண்டும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று உழைப்பதுதான், திராவிட மாடலின் சக்சஸ்! அதனால்தான், தமிழ்நாடு முழுவதும் பரவலான வளர்ச்சியைக் கொண்டு போகிறோம். எல்லா மாவட்டங்களிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறோம்! நம்முடைய தருமபுரியில்கூட சிப்காட் தொழிற்பூங்காவின் முதல் கட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது!
கடந்த ஐந்தாண்டுகளில் தருமபுரி மாவட்டத்தில் மட்டும், அதியமான் கோட்டம் புதுப்பிப்பு, ஒகேனக்கல் சுற்றுலா மேம்பாடு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையம், பேருந்து வசதியே இல்லாத 8 கிராம மக்கள் போக்குவரத்து வசதி பெற, வத்தல்மலைக்கு முதன்முதலாகப் பேருந்து வசதி செய்து தரப்பட்டிருக்கிறது, ஆயிரத்து 297 கோடியே 40 இலட்சம் ரூபாய்க்குச் சாலைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, ஆயிரத்து 714 கோடியே 4 லட்சம் ரூபாயில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, பொதுப்பணித்துறை சார்பாக 30 கோடியே 8 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகள் நடந்திருக்கிறது, சுற்றுலாத்துறை சார்பாக 19 கோடியே 81 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகள் நடந்திருக்கிறது, நார்த்தம்பட்டி ஊராட்சியில் மரகதப் பூஞ்சோலை, பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டிருக்கிறது,
இப்படி ஏராளமான திட்டங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்! இவ்வளவையும் செய்துகொடுத்திருப்பதால்தான் உங்களிடம் உரிமையோடு வாக்குக் கேட்க வந்திருக்கிறேன். 2021-இல் உங்கள் ஆதரவோடு தமிழ்நாட்டை மீட்டெடுத்து, இன்றைக்கு இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம். ஏன், இந்தியாவுக்கே வழிகாட்டும் மாடல் திராவிட மாடல்தான் என்று சொல்லும் அளவுக்கு, மாநிலத்தையே தலைநிமிர வைத்திருக்கிறோம்!
முதல் நாள் முதல் கையெழுத்திலேயே மகளிர் எல்லோரும் கட்டணமில்லாமல் விடியல் பயணம் செய்யலாம் என்று உத்தரவிட்டேன். அதைத் தொடர்ந்து, திராவிட மாடல் ஆட்சியில் செய்யப்பட்டிருக்கும் திட்டங்களைத் தலைப்புச் செய்திகளாக நான் சொல்கிறேன்…
ஒரு கோடியே 31 இலட்சம் மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாயை வழங்கிக்கொண்டிருக்கும், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்”. திராவிட மாடல் 2.0 ஆட்சி வந்ததற்குப் பிறகு, உங்களுடைய உரிமைத்தொகை, இரண்டாயிரம் ரூபாயாக உயரப் போகிறது!
அரசுப் பள்ளியில் படித்து, கல்லூரி செல்லும் மாணவ–மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம்! இனி இந்தத் தொகை, ஆயிரத்து 500 ரூபாயாக உயரப் போகிறது! 19 இலட்சம் பள்ளி மாணவர்கள் சூடாக - சுவையாகச் சத்தான உணவை வழங்கும் “காலை உணவுத் திட்டம்”! இந்தத் திட்டத்தை இப்போது ஐந்தாம் வகுப்பு வரை வழங்கிக் கொண்டிருக்கிறோம். 2.0 ஆட்சி வந்ததற்கு பிறகு எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப் போகிறோம்!
அதுமட்டுமல்ல, மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48, பாதம் பாதுகாப்போம், இதயம் காப்போம், சிறுநீரகப் பாதுகாப்புத் திட்டம், தோழி விடுதி, கலைஞர் கனவு இல்லம் என்று பெரிய பட்டியலே இருக்கிறது!
ஆனால், இப்படிச் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பழனிசாமியிடம் சாதனைகள் என்று ஏதாவது இருக்கிறதா? ஏதாவது ஒன்று சொல்ல முடியுமா? சூடு சுரணை இல்லாமல், தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்து, அடிமையாக இருப்பதுதான் தன்னுடைய வாழ்நாள் பெருமையாக அவர் நினைக்கிறார்.
இப்போது, இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு பெரிய ஆபத்து வந்திருக்கிறது என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்… தொகுதி மறுசீரமைப்பு! அதாவது, இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்த நாட்டில் பசியும் – வறுமையும் அதிகமாக இருக்கிறது. இதைச் சரி செய்ய வேண்டும் என்றால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொன்னார்கள். அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து, நம்முடைய தமிழ்நாட்டிலும் – இன்னும் பல மாநிலங்களிலும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை முறையாகச் செயல்படுத்தினோம். இப்போது என்னவென்றால், உங்கள் மாநிலத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ற மாதிரி, தொகுதி மறுசீரமைப்புச் செய்யப் போகிறோம், உங்களுக்குக் கூடுதலாக எம்.பி. சீட் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்… உண்மை என்னவென்றால், இதே காலகட்டத்தில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாமல் இருக்கும் சில மாநிலங்களுக்குத்தான், விகிதாச்சாரப்படி அதிக இடம் கிடைக்கப் போகிறது! இதனால், நாடாளுமன்றத்தில் நம்முடைய குரல் வலுவிழந்து போய்விடும்.
நம்முடைய எம்.பி.க்களுக்குப் பவர் இல்லை என்றால், டெல்லி அதிகார வர்க்கம் தமிழ்நாட்டைப் பற்றிச் சிந்திக்குமா? நமக்கு எந்தத் திட்டமாவது கிடைக்குமா? தென்னிந்தியாவிலிருந்து பிரதமர் உருவாக வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவே முடியாது. சொந்த நாட்டுக்குள்ளேயே இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றப்படும் ஒரு கொடுமையை அனுமதிக்கலாமா?
இந்த ஆபத்துதான், தொகுதி மறுசீரமைப்பு! இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றுதான் நாளைக்குத் தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றப் போகிறோம். எல்லோரும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, டெல்லியின் ஆணவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தயாராகிவிட்டீர்களா? உங்கள் வீட்டு வாசலில், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முழக்கமிடத் தயாரா? தமிழ்நாட்டில் நாம் இந்தப் போராட்டத்தை நாளை நடத்தும்போது டெல்லியில் நம்முடைய எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராடிக் கொண்டிருப்பார்கள்!
தேர்தல் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து எம்.பி.க்களும் தொகுதியில் ஆங்காங்கே இருந்தார்கள். அனைவரும் சென்றுவிட்டார்கள். மணி மட்டும்தான் இருக்கிறார். அவரும் நாளை காலை சென்றுவிடுவார். ஒருவர்கூட இருக்கக் கூடாது என்று சொல்லிவிட்டேன். தேர்தல் எல்லாம் அதற்குப்பிறகுதான், இதுதான் நமக்கு முக்கியம். இதுதான் நமக்கு சுயமரியாதை.
நாளைக்கு நாம் குரல் எழுப்பத் தவறிவிட்டால், நம்முடைய குரலுக்கு எப்பொழுதுமே மதிப்பு இருக்காது! இந்தப் போராட்டத்தில் வெல்லும் வரை நம்முடைய உரிமைக்குரல் அடங்கக் கூடாது!
டெல்லி அடங்கும்வரை நாம் அடிக்க வேண்டும்! நாம் அடிக்கும் அடியில் திமிரெடுத்த பா.ஜ.க. அடங்கியே ஆக வேண்டும்! பழனிசாமி அவர்களே… இது தமிழ்நாட்டுக்கான போர்! இதிலாவது கொஞ்சம் சுயமரியாதையோடு நடந்து கொள்ளுங்கள்!அடிமையாகவும், துரோகியாகவும் இருப்பது பழனிசாமிக்கு மட்டும் பழக்கமில்லை; அவரோடு வருகிறவர்களின் இலட்சணத்தையும் பாருங்கள்… துரோகிகளின் மொத்தக் கூடாரமாக உருவாகியிருப்பது N.D.A.
ஒவ்வொருவரின் இலட்சணத்தையும் புட்டு புட்டு வைக்கட்டுமா? ஒருவர் – ஒவ்வொரு முதுகாகக் குத்திவிட்டு, இப்போது தமிழ்நாட்டின் முதுகில் குத்த தன்னுடைய முதுகைப் பா.ஜ.க.வுக்கு வாடகைக்கு விட்டிருக்கும் பழனிசாமி. இன்னொருவர், உங்களுக்கெல்லாம் அவரை நன்றாகத் தெரியும். சமூகநீதிப் போராளி என நான் பெரிதும் மதிக்கும் மருத்துவர் அய்யா ராமதாசை வேதனையில் தவிக்கவிட்டுவிட்டு, ஊழல் வழக்குக்குப் பயந்து, கூட்டணி அமைத்துவிட்டு, உலக மகா உத்தமர் போன்று உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாரே… அவரைப் பற்றி ஒரு வார்த்தைகூட நான் பேச விரும்பவில்லை..
அவரைப் பற்றி பேசினால் என்னுடைய தகுதி குறைந்துவிடும். ஏனென்றால்… மருத்துவர் அய்யாவே இவரைப் பற்றி என்ன பேசுகிறார்? அ…சி…ங்…க…ம்… என்று சொல்லியிருக்கிறார். சமூகநீதிக்காக இந்த மண்ணில் நடந்த மிக முக்கியமான போராட்டம் 1987 போராட்டம்! அய்யா ராமதாசு அவர்கள் தலைமையில் நடந்த போராட்டம். அ.தி.மு.க. அரசின் துப்பாக்கி குண்டுகளுக்கு 21 தியாகிகள் பலியானார்கள். ஆனால், 1989-இல் நம்முடைய தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடனே, தலைவர் கலைஞர் முதலமைச்சராக ஆன உடனே, சேலத்துச் சிங்கம் வீரபாண்டியார் அவர்கள் மூலமாக, அய்யா ராமதாசு அவர்களைத் தன்னுடைய வீட்டுக்கே அழைத்து, விவாதித்து, ஆட்சிப் பொறுப்புக்கு வந்த 43- ஆவது நாளிலேயே மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான, 20 விழுக்காடு இடஒதுக்கீட்டை உருவாக்கிக் கொடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்தார் நம்முடைய கலைஞர், நம்முடைய தலைவர்!
இன்றைக்குக் கல்வி, வேலைவாய்ப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துப் பிள்ளைகள் படித்து, வேலைக்குச் சென்று முன்னேற, கலைஞர் கொடுத்த இடஒதுக்கீடுதான் மிக முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. அந்தப் போராட்டத்தில் உயிரிழந்த 21 சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம் கட்டியிருப்பது யார் தெரியுமா? இந்த ஸ்டாலின்தான்!
ஆனால், சமூகநீதிக்காகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியது அ.தி.மு.க. எந்த அ.தி.மு.க.? இதே தருமபுரியில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா என்று மூன்று அப்பாவி மாணவிகளை உயிரோடு எரித்துக் கொன்றார்களே, அந்த அ.தி.மு.க. மூன்று மாணவிகளை எரித்த அ.தி.மு.க. குற்றவாளிகளை, விடுதலை செய்த பழனிசாமியின் கையை ஒருபக்கம் பிடித்துக் கொண்டு, மறுபக்கம் நாடு முழுவதும் இடஒதுக்கீட்டுக்கு எதிராகச் செயல்படும் பா.ஜ.க. கையையும் பிடித்துக் கொண்டு வருகிறார். அ.தி.மு.க. – பா.ஜ.க.-வுக்குக் கூஜா தூக்கி, சமூகநீதிக்கே துரோகம் செய்கிறவர்தான், அய்யா ராமதாசுக்கும் இன்றைக்கு துரோகம் செய்தவர். அதனால்தான் N.D.A. கூட்டணியைத் துரோகக் கூட்டணி என்று தருமபுரியும் சொல்கிறது; ஒட்டுமொத்த தமிழ்நாடும் சொல்கிறது!
ஆனால், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, கொள்கைக் கூட்டணி! சமூகநீதியைப் பாதுகாக்கும் கூட்டணி! மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் கூட்டணி! வஞ்சனைகளை வென்று ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்கும் வளர்ச்சியைக் கொடுக்கும் கூட்டணி! அதற்காகக் களமிறங்கியிருப்பது யார்? சூப்பர்ஸ்டார்!
சூப்பர்ஸ்டார் யார்? “சூப்பர் ஸ்டாரு… யாருனு கேட்டா… சின்ன குழந்தைகள்கூடச் சொல்லும்.” நம்முடைய தேர்தல் அறிக்கை என்று சொல்லும்!
அதில் என்னென்ன ஹைலைட்? இங்கே இருக்கும் மகளிரைக் கேட்கிறேன்.. உங்கள் அண்ணன் இந்த ஸ்டாலின் கொடுக்கப் போகும் கூப்பன் எவ்வளவு? எட்டாயிரம் ரூபாய்! மகளிர் எல்லாம் இப்போதே வீட்டுக்கு என்ன புதுப் பொருள் வாங்கலாம் என்று டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்! எங்குப் பார்த்தாலும் இப்போது இதுதான். இந்தத் திட்டத்தில் எவ்வளவுக்குக் கூப்பன் தரப் போகிறோம்! எட்டாயிரம் ரூபாய்க்கு கூப்பன்! இந்தக் கூப்பனை வைத்து, உங்களுக்குத் தேவைப்படும் வீட்டு உபயோகப் பொருளை, புதியதாகவும் வாங்கிக் கொள்ளலாம்; இல்லை என்றால், பழைய பொருளை எக்ஸ்சேஞ்ச் செய்து புதுப் பொருளையும் வாங்கிக் கொள்ளலாம்! உங்களுக்குப் பிடித்த கடையில் – உங்களுக்குப் பிடித்த பிராண்ட்-ஐ இஷ்டப்படி நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்! யாரிடமும் கேட்க வேண்டாம். உங்கள் வீட்டுக்காரரிடம் எல்லாம் கேட்காதீர்கள். கேட்டால் கன்பியூஸ் பண்ணிவிடுவார்கள். ஏதாவது குழப்பம் இருந்தால் அண்ணனிடம் சொல்லிவிடுவேன் என்று சொல்லுங்கள். என்னிடம்… நான் பார்த்துக் கொள்கிறேன். அடுத்து, 20 இலட்சத்திற்கும் அதிகமான உழவர்கள் பயன்பெறும் வகையில், நவீன மின்சாரப் பம்புசெட்டுகளை வழங்கப் போகிறோம்!
உயர்கல்வி முடித்த 5 இலட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பெறும் வகையில், ”நான் முதல்வன்’ திட்டத்தில் ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகையோடு 6 மாதம் பயிற்சி வழங்கப் போகிறோம்.
பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை ஆயிரத்து 200 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். தருமபுரியில் உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும். தருமபுரி கிழக்குத் தொடர்ச்சி மலைப்பரப்பில் வரையறுக்கப்பட்ட வனவிலங்கு வழித்தடங்களில், தெர்மல் சென்சார்கள் மற்றும் கேமரா பொறிகளைக் கொண்ட ஏ.ஐ. அடிப்படையிலான முன்னெச்சரிக்கை அமைப்புகள் நிறுவப்படும்.
இப்படித் தமிழ்நாட்டைத் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்று நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒன்றிய பா.ஜ.க.வின் திட்டம் என்னவாக இருக்கிறது? தெற்கு மறுபடியும் தேய வேண்டும்! இதுதான் அவர்கள் பிளான்! தொகுதி மறுசீரமைப்பு நடத்தப் போகிறோம் என்று சொல்லி, ஒரு போரை தொடங்கி இருக்கிறார்கள்! இந்தப் போரில் நம்முடைய தமிழ்நாட்டின் குரலை நெரிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் கொட்டத்தை அடக்க வேண்டும்! ஒட்டுமொத்தத் தென்மாநிலங்களை இந்திய ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கி எறிய நினைக்கும் பா.ஜ.க.வுக்கு தமிழ்நாடு கொடுக்கப் போகும் பதிலடியை அவர்கள் வரலாற்றிலேயே மறக்கக் கூடாது!
சண்டை செய்ய நான் ரெடி? எனக்குப் பக்கபலமாக இருக்க நீங்கள் ரெடியா? அதற்கு, பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் பழனியப்பன் அவர்களுக்கும், பாலக்கோடு தொகுதியில் டாக்டர் செந்தில்குமார் அவர்களுக்கும், அரூர் தொகுதியில் சண்முகம் அவர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
அதேபோன்று, தருமபுரி தொகுதியில் டாக்டர் வி.இளங்கோவன் அவர்களுக்கு ‘முரசு’ சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். பென்னாகரம் தொகுதியில் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் அவர்களுக்கு ‘கை’ சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு நீங்கள் போடும் ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டைத் தலைநிமிர்ந்து நடைபோட வைக்கும்!
ஆனால், தமிழ்நாடு தலைநிமிர்வது, குனிந்தே பழக்கப்பட்ட பழனிசாமிக்குப் பிடிக்கவில்லை! அதனால்தான், அட்டார்னி ஜெனரல் மாதிரி, லா பாயிண்ட் பேச வந்துவிட்டார். நான் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசுகிறேன் என்று நாக்கில் நரம்பு இல்லாமல் பேசுகிறார் பழனிசாமி. எந்த ஸ்டாலினைப் பார்த்துப் பேசுகிறீர்கள்... பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்த தலைவர் கலைஞரின் மகனைப் பார்த்துப் பேசுகிறீர்களா! பெண்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று சுய உதவிக்குழுக்களை ஆரம்பித்த தலைவர் கலைஞரின் மகனைப் பார்த்துப் பேசுகிறீர்களா! மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் இந்த ஸ்டாலினைப் பார்த்துப் பேசுகிறீர்களா! விடியல் பயணம் கொடுத்த இந்த ஸ்டாலினைப்\ பார்த்துப் பேசுகிறீர்களா! புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகளைக் கல்லூரிகளுக்கு அனுப்பும் இந்த ஸ்டாலினைப் பார்த்துப் பேசுகிறீர்களா! பணிசெய்யும் பெண்களுக்காகத் தோழி விடுதிகள் உருவாக்கி அழகு பார்க்கும் இந்த ஸ்டாலினைப் பார்த்துப் பேசுகிறீர்களா! காலை உணவுத் திட்டம் கொடுத்து, பெண்களின் சுமையைக் குறைத்திருக்கும், இந்த ஸ்டாலினைப் பார்த்துப் பேசுகிறீர்களா!
பழனிசாமி அவர்களே... உங்கள் உள்நோக்கம் இந்த ஸ்டாலினை வசைபாடுவது கிடையாது; உங்கள் முதுகில் சவாரி செய்து கொண்டிருக்கும் ஓனர் பா.ஜ.க.வைக் காப்பாற்றுவது! அதனால்தான் மும்மொழிக் கொள்கையை எதிர்க்கவில்லை! F.C.R.A.-வை எதிர்க்கவில்லை! பொது சிவில் சட்டத்தை எதிர்க்கவில்லை! இப்போது தமிழ்நாடே கொந்தளிக்கும்போது, தொகுதி மறுசீரமைப்பால் ஏற்பட்டிருக்கும் பேராபத்தையும் நீங்கள் எதிர்க்கவில்லை!
இப்படி எந்தப் பிரச்சினையிலும் தமிழ்நாட்டுக்காகக் குரல் கொடுக்காத நீங்கள், எதற்காகக் கட்சி நடத்துகிறீர்கள்? எதற்காகக் கூச்சமே இல்லாமல் மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறீர்கள்? பேசாமல் பா.ஜ.க. செய்வதற்கு முன்பு, நீங்களே கட்சியைச் கலைத்துவிட்டு நேரடியாகப் பா.ஜ.க.வில் ஐக்கியமாகிவிடுங்கள்!
கூச்சப்படாதீர்கள்! பா.ஜ.க.வின் பீகார் மாடல் உங்களுக்கு யூஸ்ஃபுல்லாக இருக்கும்! வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்கள்தான் இருக்கின்றன. திராவிட மாடல் 2.0 தொடங்குவதற்கான ‘ஃபைனல் கவுண்ட் டவுன்’ ஸ்டார்ட் ஆகிவிட்டது. தேர்தல் என்று வந்துவிட்டாலே நம்முடைய தி.மு.க-காரர்களுக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜி தானாக வந்துவிடும். அது எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது என்றே தெரியாது. ஆனால், பிரசாரத்திற்காகச் சுற்றிச் சுழல்வதில் தி.மு.க-காரன் முன்னால் பம்பரமே தோற்றுவிடும். உடன்பிறப்புகள் எல்லோரும் எலக்ஷன் வந்துவிட்டால் ‘சக்திமான்’ ஆகிவிடுவார்கள்.
இந்த முறையும் அப்படித்தான் தமிழ்நாடு முழுவதும் அடிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வீடு வீடாக அலைந்து திரிந்து நம்முடைய உடன்பிறப்புகள் உழைக்கிறார்கள். அந்த ஒவ்வொரு உடன்பிறப்பும் இருக்கும் திசைநோக்கி நான் வணங்குகிறேன். தான் MLA ஆக வேண்டும், அமைச்சர் ஆக வேண்டும் என்று இவர்கள் உழைக்கவில்லை. தலைவர் அறிவித்திருக்கும் வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும், அடிமை ஆட்சி அமையாமல் தடுக்க வேண்டும், தமிழ்நாட்டைப் பா.ஜ.க. அடிமைப்படுத்தாமல் காப்பாற்ற வேண்டும், தமிழ்நாட்டுக் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்று பாடுபடுகிறார்கள். இப்படிப்பட்ட தன்னலமற்ற தொண்டர்கள் யாருக்குக் கிடைப்பார்கள்! அவர்கள் அனைவருக்குமே என்னுடைய சல்யூட்!
இனி ஒவ்வொரு நாளும் களம் பரபரப்பாக இருக்கும். டி-20 மேட்சில் முதல் 15 ஓவர் என்னதான் சிறப்பாக ஆடினாலும், கடைசி 5 ஓவர் நன்றாக அடித்து ஆடினால்தான் 200 ரன்னை கிராஸ் பண்ணமுடியும். இப்போது எல்லாம் 230 கிராஸ் பண்ணும் அளவுக்கு அதிரடியாக ஆட வேண்டும்! அதுபோல், நீங்கள் எல்லோரும் அடுத்த 7 நாளும் உழைக்கக்கூடிய உழைப்புதான், 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெற்று, ஏழாவது முறையாகக் கழக ஆட்சி அமைவதை உறுதி செய்யும்!
நம்முடைய திட்டங்களைச் சொல்லுங்கள், தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளைச் சொல்லுங்கள். பெண்களிடம் இருக்கும் பேராதரவை இன்னும் பெருகச் செய்யுங்கள்! மக்கள் நம் பக்கம்! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம்