
மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு ஒரு கடிதம் அனுப்பி இருப்பதாகவும், நெல்லுக்கு நீங்கள் ஊக்கத்தொகை தருவதால்தான் நெல் விளைச்சல் அதிகமாவதாகவும், எனவே ஊக்கத்தொகையை நிறுத்துங்கள் என்று சொன்னதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பரப்புரையில் குறிப்பிட்டார்கள்.
அப்படிச் சொல்லவில்லை, அது மாநில அரசின் விருப்பம் என்றுதான் சொன்னோம் என்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ‘அப்படியானால் அந்த கடிதத்தைக் காட்டுங்கள்’ என்று முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். கடிதத்தைக் காட்ட மறுக்கிறார் நிதி அமைச்சர்.
வேளாண்மையில் தாக்குதல் நடத்துவது பா.ஜ.க.வுக்கு புதிதல்ல. மூன்று வேளாண் சட்டங்களே வேளாண்மையைச் சிதைப்பதற்கும், உழவர்கள் வாழ்க்கையைக் குலைப்பதற்கும்தான் கொண்டு வரப்பட்டது. இரண்டு ஆண்டு காலம் தலைநகர் டெல்லியில் உழவர்கள் நடத்திய தொய்வில்லாத போராட்டத்தின் காரணமாகத்தான் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றார்கள்.
இதோ இப்போது அதே போன்ற சட்டத்தை அரசின் உத்தரவாக மாநிலங்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
“நெல் உற்பத்தி அதிகரித்திருப்பது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துவதாக அந்தக் கடிதம் கூறுகிறது. எனவே நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதை மாநில அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது," என்று முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள்.
“அப்படிச் சொல்லவில்லை, ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு என்றுதான் சொன்னோம்” என்கிறார் நிர்மலா சீதாராமன்.
ஒன்றிய நிதி அமைச்சகம் தமிழ்நாடு, கேரளா உள்படப் பல்வேறு மாநிலங்களின்தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், “சமீபத்திய ஆண்டுகளில் கோதுமை, நெல்லின் அபரிமிதமான உற்பத்தி தேவைகளைவிட மிக அதிகமாக உள்ளது. இது ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.
இது தானியக் கிடங்குக்குத் தொடர்ச்சியான சுமையை உருவாக்குகிறது. சில மாநில அரசுகளால், கோதுமைக்கு (குறைந்தபட்ச ஆதார விலைக்கு மேற்பட்டு) கூடுதல் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது, இந்த உணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தான் முதலமைச்சர் அவர்கள் குற்றச்சாட்டாகச் சொன்னார்கள்.

நெல், கோதுமையை அதிகளவில் உற்பத்தி செய்வதால் ஏற்படும் பாதிப்புகளை அந்தக் கடிதம் பட்டியலிடுகிறது. ''நெல், கோதுமை போன்றவைக்கு அதிகளவில்நீர் தேவை. அதிக உரம் தேவை. எனவே நெல், கோதுமை சாகுபடியானது நிலத்தடிநீரைக் குறைக்கிறது" என்று அந்தக் கடிதத்தில் உள்ளது. இல்லை என்று சொல்கிறாரா நிர்மலா சீத்தாராமன்?
“நெல், கோதுமை உற்பத்தியை அதிகளவில் உற்பத்தி செய்கிறார்கள். ஆனால் எண்ணெய் விதைகள் (நிலக்கடலை, எள், சூரியகாந்தி விதை போன்றவை) மற்றும் பருப்பு வகைகளின் உள்நாட்டு உற்பத்தி போதுமானதாக இல்லாதது, அதிக இறக்குமதிக்கு வித்திடுகிறது," என்று அந்தக் கடிதம் கவலைப்படுகிறது.
இந்தக் கவலையை எல்லாம் சொல்லி விட்டுச் சொல்கிறார்கள், “எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு, மாநில அரசுகள் தற்போதைய ஊக்கத்தொகை கொள்கையை மறுபரிசீலனை செய்து, கோதுமை மற்றும் நெல் மீதான ஊக்கத்தொகையை நிறுத்துவதைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது. அதோடு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு மற்றும் நிலையான வேளாண்மைக்கான தேசிய முன்னுரிமைகளுக்கு இணங்க, பயறு வகைகள், சிறுதானியங்களை ஊக்குவிப்பதற்கான சலுகைகள் மீது கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது," என்று மத்திய நிதி அமைச்சகம் தனது கடிதத்தில் கூறியுள்ளது.
இப்படி தெளிவாகச் சொல்லப்பட்டதைத் தான் இல்லை என்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இப்படி ஒரு கடிதம் அனுப்பியதை எதிர்த்து மாநிலங்களவையில் கேரள மாநில உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் பகிரங்கமாக கேள்வி எழுப்பியதை இல்லை என்று மறுக்கிறாரா நிதி அமைச்சர்?
“குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் ஊக்கத்தொகை அல்லது போனஸ் அறிவிப்பது என்பது எப்போதும் மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது" என்று மழுப்பி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
“மாநில அரசுகள் வழங்கும் ஊக்கத்தொகை கொள்கைகளை தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ஒரு ஆலோசனையே தமிழகத்திற்கு மட்டுமல்லாது, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டது” என்று நிர்மலா சீதாராமன் சொல்வதற்கு என்ன பொருள்? ஒன்றிய அரசு தருவதற்கு மேல் தரக்கூடாது என்பது தானே பொருள்?' நாங்கள் தருவதற்கும், நீங்கள் தருவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்றல்லவா சொல்ல வேண்டும்?
மாநில அரசுகள் ஊக்கத்தொகை தருவதால் தான் உற்பத்தி அதிகரிக்கிறது என்றும், உற்பத்தி அதிகரிப்பதால் நிலத்தின் தன்மை பாதிக்கப்படுகிறது என்றும் சொன்னது உண்மையா இல்லையா?
*விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக மேம்பாடு எளிமைப்படுத்துதல் சட்டம்
* விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் சேவைகள் சட்டம்
*அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. அதற்கு என்ன காரணம் சொன்னார்கள்? உற்பத்தியை அதிகரிக்க என்றுதான் சொன்னார்கள்.
விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகள் ஆகியோரின் கடுமையான எதிர்ப்பின் காரணமாகத் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் அறிவித்தார்கள்.
“புதிய வேளாண் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் விவசாயத்தின் மீது தனியார் முதலீடுகள் செய்வதை அதிகரித்து கிராமப் புறங்களில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். தனியார் முதலீடுகள் அதிகரிக்கும் போது, விவசாயம் தொடர்ந்து இலாபகரமான துறையாக உருவெடுக்கும். தனியார் முதலீடுகள் இல்லாததால்தான் விவசாயத்தின் வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஆனால், தனியார் முதலீடுகளை ஈர்த்த பிற துறைகள் வளர்ச்சி அடைந்துள்ளன. புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் பல்வேறு திட்டங்கள் மூலமாக விவசாயத்தில் தனியார் முதலீடுகளை ஈர்க்க பிரதமர் மோடி முயற்சி மேற்கொண்டுள்ளார்” என்று ஒன்றிய வேளாண் அமைச்சர் தோமர் சொன்னார்.
மூன்று வேளாண் சட்டங்களைச் செயல்படுத்தாத சூழலிலும் உற்பத்திஅதிகம் ஆகி இருக்கிறது. இப்போது உற்பத்தியைக் குறைக்கச் சொல்கிறார்கள்.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் சட்ட திட்டங்கள் அனைத்தும் முன்னுக்குப் பின் முரணாகவே இருக்கிறதே!






