
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதற்குத் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. மேலும், கடந்த தி.மு.க. ஆட்சியிலும் நீதிமன்றம் சென்று நமக்கான உரிமைகளைப் பெறப் போராடி வந்தது.
ஆனால், தற்போது த.வெ.க. அரசு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற புதிய வழியைத் தேடியுள்ளது. இதற்குத் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன. பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்தப் பயனும் கிடைக்காது, நீதிமன்றம் மூலமே நமது உரிமைகளை நிலைநாட்ட முடியும் என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
மேலும், அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர். ஆனால், முதலமைச்சர் விஜய், அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அவர்களின் நிலைப்பாடுகளைக் கேட்காமல், நேரடியாகக் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுத்து அங்கு செல்லத் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர முடியாது என்பதுடன், தற்போது பதற்றமான சூழல் நிலவுவதால் முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் எனக் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.
இது குறித்து நீர்வலத்துறை அமைச்சர் ஆனந்திடம் செய்தியார்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், இதற்கு உரிய பதில் எதுவும் சொல்லாமல் சிரித்தபடியே காரில் ஏறி அவர் சென்றது விவசாயிகள் உள்ளிட்ட அனைவரையும் கோவம் அடைய செய்துள்ளது.
இந்நிலையில், சினிமா டம்மிகளால், நிஜமான கேள்விகளைக் கண்டால் இப்படிப் பயந்து ஓடத்தான் முடியும் என தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கண்டித்துள்ளது.
தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் சமூகவலைதள பதிவில், ”காவிரி மேகதாது விவகாரத்தில் எப்போதும் நெஞ்சுரத்தோடு பத்திரிகையாளர்களைச் சந்தித்து முழங்கினார் முன்னாள் திமுக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள்.
ஆனால், இந்த தவெக அமைச்சர் .ஆனந்த் அவர்கள், கேள்விகளுக்குப் பதில் சொல்ல வக்கில்லாமல், சற்றும் வெட்கமில்லாமல் சிரித்துக்கொண்டே காரில் ஏறி ஓடுகிறார்!
மாநில உரிமைகளும், டெல்டா விவசாயிகளின் வலியும், நீர்வளப் புரிதலும் உள்ளவர்களால் மட்டுமே மக்களுக்காகக் குரல் கொடுக்க முடியும். இதுகுறித்து எந்த அடிப்படை அறிவும் இல்லாத சினிமா டம்மிகளால், நிஜமான கேள்விகளைக் கண்டால் இப்படிப் பயந்து ஓடத்தான் முடியும்" என தெரிவித்துள்ளார்.






