
முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில் அனைத்து துறைகளின் சார்பாக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார். போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதோடு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய பேருந்து முனையங்கள் அமைத்தல், பேருந்து நிலையங்களை பயணிகள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளோடு மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்.
அதனடிப்படையில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கு அதி நவீன சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் பொதுமக்களுக்கும், பணிகளுக்காக பல்வேறு நகரங்களுக்கு செல்லும் இளைஞர்களுக்கும் பாதுகாப்பான பயணத்திற்கான முதன்மைத் தேர்வாக விளங்கி வருகின்றன.

முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 110 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 61 புதிய பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது.
புதிய பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பயணிக்கும் வகையில் கீழ்கண்ட சிறப்பு அம்சங்கள் உள்ளது.
* இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில், பயணிகளின் சொகுசு பயணத்திற்காக முன்புற Air Suspension வசதி செய்யப்பட்டுள்ளது.
* படுக்கை வசதி அதிகரித்த இடம் மற்றும் இரண்டு படுக்கைகளுக்கு இடையே தடுப்பு வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
* ஒவ்வொரு இருக்கை மற்றும் படுக்கைக்கும் தனித்தனியாக தனிப்பட்ட சார்ஜிங் போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.
* ஒவ்வொரு படுக்கைக்கும் தனித்தனியாக பயணிகள் வசதிக்காக தனித்தனி மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது.

* பயணிகளின் பாதுகாப்பிற்காக ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அபாய ஒலி எழுப்பி (SOS) அமைக்கப்பட்டுள்ளது.
* நடத்துனர் பயணிகளுக்கு தகவல்களை அறிவிப்பதற்காக ஒலி பெருக்கி (Micro Phone) அமைக்கப்பட்டுள்ளது.
* பயணிகளின் வசதிக்காக டிஜிட்டல் கடிகராம் அமைக்கப்பட்டுள்ளது.
* பயணிகளின் சுமை பெட்டி மற்றும் சரக்கு பார்சலுக்காகவும் போதிய இட வசதியுடன் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
* அரசு நிர்ணயம் செய்த அளவுகளின் அடிப்படையில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் புதிய பேருந்துகளின் Engine என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் செயல் திறனுக்காக நவீன எலக்ட்ரானிக் மேக்னடிக் ரிடார்டர் (EMR) நிறுவப்பட்டுள்ளது.
* இன்ஜின் தீயை முன் கூட்டியே திறம்பட அனுமானித்து, தீ கட்டுபாட்டு அமைப்பு (FDSS) கருவி பொருத்தப்பட்டுள்ளது.








