தமிழ்நாடு

ஒன்றிய பாஜகவின் கொடுங்கோல் ஆட்சிக்கு ஆதரவாக கூஜா தூக்கும் அதிமுக : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

100 நாள் வேலை திட்டத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு இப்போது மூடுவிழா நடத்தியிருக்கிறார்கள்.

ஒன்றிய பாஜகவின் கொடுங்கோல் ஆட்சிக்கு ஆதரவாக கூஜா தூக்கும் அதிமுக : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (27.12.2025) திருவண்ணாமலை மாவட்டம், மலப்பாம்பாடி, கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆற்றிய உரை:-

ஆர்வத்துடன் திரண்டிருக்கின்ற உங்களையெல்லாம் பார்க்கும்போது, எனக்குள்ளே ஒரு புது எனர்ஜி பிறக்கின்றது. திருவண்ணாமலை என்று சொன்னதும், ஜவ்வாதுமலை போன்ற எழில் கொஞ்சும் மலைகளின் அழகை ரசிக்கிறதா! இல்லை, உங்கள் முகத்தில் தெரிகின்ற மகிழ்ச்சியை ரசிக்கிறதா! என்று தெரியாமல் உங்கள் முன்பு நின்று கொண்டிருக்கிறேன்.

ஆன்மீகத்தில் ஒளி வீசி, தமிழ்நாட்டிலேயே மிக உயர்ந்த 217 அடி ராய கோபுரம் கொண்டு, ஆன்மீக அன்பர்களையும் ஈர்க்கின்ற இடம், இந்த திருவண்ணாமலை! கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் - பாறை ஓவியங்கள் - கருவிகள், தொல்லியல் அகழாய்வில் முத்திரை பதிக்கும் கீழ் நமண்டி என்று நம்முடைய வரலாற்றுச் சுவடும் நிறைந்து இருக்கின்ற இந்த மாவட்டத்திற்கு ஆரணி அரிசி, ஆரணி பட்டு, படவேடு வாழை, மொடையூர் சிற்பங்கள் என்று ஏராளமான பெருமைகள் இருக்கின்றது!

அதுமட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, முதல் நாடாளுமன்ற உறுப்பினரை அளித்த வரலாற்றுப் பெருமையும் இந்த மண்ணிற்கு உண்டு! இந்தப் பெருமைகளுக்கு புகழ் சேர்த்து, புது வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு தான், நம்முடைய திராவிட மாடல் அரசு பணியாற்றிக் கொண்டிருக்கிறது!

கடந்த 14-ஆம் தேதி தான், இதே திருவண்ணாமலக்கு வந்து, இதே இடத்தில், எழுச்சிமிகு தி.மு.க. இளைஞரணியின் மாநாட்டில் பங்கேற்றேன். இரண்டு வாரத்திற்குள், மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்து, உங்கள் எல்லோருடன் பேசுகின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது! இந்த வாய்ப்பின் மூலமாக, 631 கோடியே 48 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவிலான, 314 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 63 கோடியே 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 46 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2 இலட்சத்து 66 ஆயிரத்து 194 பேருக்கு ஆயிரத்து 400 கோடியே 57 இலட்சம் ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை வழங்குகின்ற விழாவாக ஏற்பாடு செய்திருக்கிறார், எதிலும் வல்லவரான - நம்முடைய அமைச்சர் எ.வ.வேலு அவர்கள்!

புதுமையும் – கலைநயமும் – பிரமாண்டமும் நிறைந்த கட்டடங்களை உருவாக்கி, காலத்தால் அழியாத புகழை நம்முடைய அரசுக்கு சேர்த்துக் கொண்டிருப்பவர் தான் நம்முடைய எ.வ.வேலு அவர்கள்! அவருக்கு துணையாக நின்று, திருவண்ணாமலையை எல்லோரும் அண்ணாந்து பார்க்கின்ற மலையாக வளர்த்தெடுக்கின்ற தமிழ் ஆர்வலர், மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இ.ஆ.ப., அவர்களுக்கும், மாவட்ட அரசு அலுவலர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

2025-ஆம் ஆண்டு நிறைவடையக்கூடிய நேரத்தில் உங்கள் எல்லோரையும் சந்திக்க வந்திருக்கிறேன். நிறைவான பல திட்டங்களை செய்திருக்கிறோம் என்ற அந்த உணர்வுடன் வந்திருக்கிறேன்!

நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்து நான்கரை ஆண்டுகள் ஆகிறது… இந்த நான்கரை ஆண்டுகளில், நாடே போற்றும் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்! நம்முடைய ஆட்சியின் ஒவ்வொரு திட்டமும், தமிழ்நாட்டில், ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேரவேண்டும் என்று கவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்!

தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் முத்திரை திட்டங்களை பற்றி மட்டும் இங்கே நான் சுருக்கமாக குறிப்பிடவேண்டும் என்றால், இங்கே ஏராளமான பெண்கள் இருக்கிறீர்கள்…. படித்து வேலைக்குச் செல்கின்ற பெண்களாக இருந்தாலும் சரி, வீட்டை கவனித்துக் கொள்கின்ற பெண்களாக இருந்தாலும் சரி, பெண்களான நீங்கள் முன்னேறி வரவேண்டும். உங்களுக்கு பொருளாதார சுதந்திரம் உண்டாக வேண்டும் என்று பார்த்து பார்த்து ஏராளமான திட்டங்களை செய்து கொண்டிருக்கிறோம்.

அப்படி, நாம் கொண்டுவந்த விடியல் பயணம் திட்டத்தின் மூலமாக, சுமார் 900 கோடி முறை, மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்திருக்கிறார்கள்.

அதேபோல, ஒவ்வொரு மாதமும், ஒரு கோடியே 30 இலட்சம் பெண்களுக்கு எங்கள் அண்ணன் ஸ்டாலின் வழங்குகின்ற சீர் என்று, நீங்கள் சேர்த்து வைக்கின்ற ஆயிரம் ரூபாயை வழங்குகின்ற, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்.

பெண் குழந்தைகள் - அதுவும் ஏழை – எளிய வீடுகளில் இருந்து, அரசுப் பள்ளியில் படித்த பெண்களுக்கு, கல்லூரிக் கனவு தடைபடக் கூடாது என்று புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கி, 6 இலட்சத்து 92 ஆயிரத்து 471 மாணவிகளுக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டிருக்கிறோம்!

அதேபோல, தமிழ்ப்புதல்வன் திட்டத்தை உருவாக்கி, 5 இலட்சத்து 40 ஆயிரத்தி 429 மாணவர்களுக்கும் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டிருக்கிறோம்!

யோசித்துப் பாருங்கள்… இந்த நான்கு திட்டத்திற்கு மட்டும், இதனால் பயன்பெறும் குடும்பங்களுக்கு, மாதா மாதம் 4 ஆயிரம் ரூபாய் மீதமாகிறது!

அதுமட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் 19 இலட்சத்து 34 ஆயிரத்து 69 குழந்தைகளுக்கு சூடான, சுவையான, சத்தான காலை உணவை வழங்குகிறோம்!

நம்முடைய வீட்டு பிள்ளைகளுக்கு அனைத்து வாய்ப்புகளும் கிடைத்து, பெரிய பெரிய நிறுவனங்களில், உயர் பதவிகளில் பொறுப்பு வகிக்கவேண்டும் என்று அவர்களுக்கு தேவையான திறன் பயிற்சிகளையும் - படிப்புகளையும் கொடுக்க வேண்டும் என்று நான் முதல்வன் திட்டத்தை உருவாக்கி, 48 இலட்சத்து 65 ஆயிரத்து 50 நபர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, மக்களைத் தேடி மருத்துவம் - இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 - நலம் காக்கும் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்லம் - அன்புக்கரங்கள் திட்டம் - தாயுமானவர் திட்டம் - ஸ்டார்ட்-அப் தமிழ்நாடு - சி.எம். அரைஸ் என்று ஒவ்வொரு திட்டத்திலும் பயனடைந்தவர்களின் விவரத்தையும், அவர்களுடைய வெற்றிக் கதைகளையும் சொன்னால், இந்த ஒரு விழா போதாது.

அதனால்தான், கல்வியில் சிறந்த தமிழ்நாடு - வெல்லும் தமிழ்ப்பெண்கள் என்று நம்முடைய குழந்தைகளையும், நம்முடைய வீட்டுப் பெண்களையும் மேடையேற்றி, அவர்களைப் பெருமைப்படுத்தி, அதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.

மேடையில் மக்களும், பார்வையாளராக முதலமைச்சரான நானும், அமைச்சர்களும், அதிகாரிகளும் இருப்பது போன்று ஒரு சமுதாய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது நம்முடைய அரசு.

நான் முதலமைச்சராகி தொடங்கிய திட்டங்களில் எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கக்கூடிய திட்டங்களில் ஒன்று மாடல் ஸ்கூல்! நேற்று கூட கள்ளக்குறிச்சியில், ஒரு மாடல் ஸ்கூலை திறந்து வைத்தேன். இன்றைக்கு இந்த நிகழ்ச்சியிலும், ஒரு மாடல் ஸ்கூலை திறந்து வைத்திருக்கிறேன்.

நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, இது போன்று மாணவர்கள் ஆண்டுக்காண்டு நாட்டில் பெரிய உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதை பார்த்திருக்கிறீர்களா? இல்லவே இல்லை. கடந்த கல்வியாண்டில், இந்த திருவண்ணாமலை மாவட்ட மாடல் ஸ்கூலில் இருந்து மட்டும் 137 மாணவர்கள் நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கு தேர்வாகி இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் மிக மிக எளிமையான பின்ணணியிலிருந்து வரக்கூடிய மாணவர்கள். இது ஒரு மிகப் பெரிய சாதனை. இந்த மாற்றமும், மகிழ்ச்சியும் உங்கள் எல்லோருடைய வீட்டிற்கும் வரவேண்டும் என்று தான் நான் பாடுபடுகிறேன்.

நேற்று இந்த மாவட்டத்திற்கு வந்தவுடனே, இந்த மாவட்டத்தில் செய்யப்பட்டு வருகின்ற திட்டங்கள் மற்றும் பணிகளின் பட்டியலை கேட்டேன்… லிஸ்ட் கேட்டால், ஒரு ‘புக்’கையே கொடுத்துவிட்டார்கள்… மிகவும் உன்னிப்பாக ஒவ்வொரு திட்டத்தைப் பற்றியும் சொல்லியிருந்தார்கள்… அதில் இருந்த விவரத்தை நான் சுருக்கமாக சொல்ல வேண்டுமா?

இந்த மாவட்டத்தில் இருக்கின்ற, ஆயிரத்து 762 பள்ளிகளில் படிக்கின்ற 80 ஆயிரத்து 859 குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் வயிறார சாப்பிட்டு, நன்றாக படிக்கிறார்கள்.

21 ஆயிரத்து 463 மாணவிகள் புதுமைப் பெண்களாக, 19 ஆயிரத்து 376 மாணவர்கள் தமிழ்ப் புதல்வன்களாக – மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று, கல்லூரிகளில் படிக்கிறார்கள்.

4 இலட்சத்து 66 ஆயிரத்து 841 சகோதரிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வழங்குகிறோம்!

நான் முதல்வன் திட்டத்தில், 1 இலட்சத்து 57 ஆயிரத்து 200 மாணவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்!

இந்த விழாவின் மூலமா, நகர்புறம் மற்றும் நகர்புறங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் இருப்பவர்களுக்கு, ஒருமுறை சிறப்பு வரன்முறைபடுத்தும் திட்டத்தில், ஆயிரத்து 802 வீட்டுமனை பட்டா உட்பட 23 ஆயிரத்து 240 இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கியிருக்கிறோம்.

இப்படி, இதுவரைக்கும் மொத்தமாக, 42 ஆயிரத்து 793 இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கியிருக்கிறோம்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், 19 லட்சத்தி 81 ஆயிரத்து 857 பேருக்கு பரிசோதனை செய்து, நோய் கண்டறியப்பட்டு, 6 இலட்சத்து 78 ஆயிரத்து 674 நபர்களுடைய வீட்டிற்கே சென்று மருந்துகள் வழங்கிக் கொண்டிருக்கிறோம்!

இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டத்தில், 17 ஆயிரத்து 772 நபர்களுடைய உயிர்களையும், அவர்கள் குடும்பத்தின் நம்பிக்கைகளையும் காப்பாற்றியிருக்கிறோம்!

இதையெல்லாம் முத்திரைத் திட்டங்களில் சில மட்டும்தான்… இதையெல்லாம் கடந்து, அத்தியந்தலில், புதிய உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகக் கட்டடம் - பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில், ஒருங்கிணைந்த இந்திய முறை மருத்துவக் கட்டடம் - 106 பல்வேறு மருத்துவக் கட்டடங்கள் கட்டுவதற்கு, 54 கோடியே 57 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, 52 கட்டடங்களை உங்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டோம். மீதமிருக்கின்ற 54 கட்டடங்களும் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

அதேபோல, போளூர், தண்டராம்பட்டு, செங்கம், வந்தவாசி மற்றும் வெம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில், அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புக்கான கட்டடங்களை கட்டியிருக்கிறோம்!

திருவண்ணாமலையை மாநகராட்சியாக தரம் உயர்த்தினோம். திருவண்ணாமலையில புதிய மினி டைடல் பூங்கா கட்டிக் கொண்டிருக்கிறோம்.

இப்படி, சொல்லச் சொல்ல பெருமை கொள்ளும் திட்டங்கள்; சொல்லிச் சொல்லி தீராத திட்டங்கள் என்று நம்முடைய திராவிட மாடல் அரசில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவருக்கும் என்னென்ன தேவை என்று பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறோம்! தொடர்ந்து செய்யதான் போகிறோம். செய்து கொண்டிருப்போம். அதற்கு உதாரணமாக சில அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.

ஒன்றிய பாஜகவின் கொடுங்கோல் ஆட்சிக்கு ஆதரவாக கூஜா தூக்கும் அதிமுக : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

முதல் அறிவிப்பு –

இந்த மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக சேத்துப்பட்டு வட்டம், ஏந்தல் கிராமத்தில், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 37 ஏக்கரில், புது சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

இரண்டாவது அறிவிப்பு -

கலசப்பாக்கம் வட்டம், பருவதமலை அருள்மிகு மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோயிலுக்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

மூன்றாவது அறிவிப்பு –

புதிதாக தொடங்கப்பட்டிருக்கின்ற செங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு, 18 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய கட்டடம் கட்டப்படும்.

நான்காவது அறிவிப்பு –

வந்தவாசி வட்டம் கீழ்-சீசமங்கலம் கிராமத்தில், 2.02 எக்டேர் பரப்பில் வீரிய ஒட்டு ரக குழித்தட்டு காய்கறி நாற்றுகளை உற்பத்தி செய்து வழங்கக்கூடிய வகையில், புதிய உயர் தொழில்நுட்ப நாற்றங்கால் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும். இதன்மூலம் கீழ் சீசமங்கலம் மற்றும் அருகாமையில் இருக்கக்கூடிய அனைத்து கிராம விவசாயிகளும் பயனடைய இருக்கிறார்கள்.

ஐந்தாவது அறிவிப்பு -

வேளாண்மை - உழவர் நலத்துறையின் திட்டங்கள், தொழில்நுட்ப ஆலோசனைகள், தரமான இடுபொருட்கள் மற்றும் வேளாண் சார்ந்த அனைத்துச் சேவைகளையும் விவசாயிகள் ஒரே இடத்தில் பெற்றுப் பயனடையக்கூடிய விதமாக, திருவண்ணாமலை மாவட்டம் மழையூரில்,

3 கோடியே 94 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கப்படும்.

ஆறாவது அறிவிப்பு -

திருவண்ணாமலை மாவட்டம், அத்தியேந்தலில், நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்ற பயிர்களின் உயர்விளைச்சல் ரக சான்றளிக்கப்பட்ட - தரமான விதைகளை விவசாயிகளுக்கு காலத்தே வழங்கிட, 250 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட, சேமிப்புக் கிடங்குடன் கூடிய விதை சுத்திகரிப்பு நிலையம் 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.

இங்கே ஆறு அறிவிப்புகள் புதிதாக நான் உங்களிடத்தில் அறிவித்திருக்கிறேன்.

அறிவித்துவிட்டு, இத்துடன் முடிவடைந்துவிட்டது என்று நாங்கள் சென்றுவிட மாட்டோம். அது எப்படி நடைபெறுகிறது? எப்போது தொடங்கப் போகிறார்கள்? எப்போது டெண்டர் விடப் போகிறார்கள்? எப்போது அடிக்கல் நாட்டப் போகிறார்கள்? அதன் பணி எப்போது துவங்கப் போகிறது? எப்போது முடிவடையப் போகிறது? என்பதை கண்காணித்து, அது முடிவடையும் வரையில், நானும் தூங்கமாட்டேன்; வேலு அவர்களும் தூங்கமாட்டார்; இங்கே இருக்கின்ற அதிகாரிகளும் தூங்க மாட்டார்கள்.

இப்படி, ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு குடும்பமும் என்று ஒட்டுமொத்தமாக தமிழ்நாடும் வளர வேண்டும் என்று உழைக்கிறோம். ஒட்டுமொத்த நாடே திரும்பி பார்க்கின்ற வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறோம். அதுவும் எப்படிப்பட்ட நிலையில் இருந்தது என்று யோசித்துப் பாருங்கள் - ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஜி.எஸ்.டி.யால் வரி உரிமை இல்லை – நமக்கு வரவேண்டிய நிதியும் வழங்கவில்லை - குடைச்சல் கொடுப்பதற்காகவே அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்ற ஆளுநர் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார் - தமிழ்நாட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு, தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுகின்ற துரோகிகள் - துரோகிகளுக்கு அடிமை சாசனம் எழுதி தந்து, சரணாகதி அடைந்த அடிமைகள் என்று அத்தனை சவால்களையும் முறியடித்து நாம் முன்னேறியிருக்கிறோம்! இதுதான், திராவிட மாடல்!

இந்த வளர்ச்சிதான் பலருடைய கண்களை கூச செய்கிறது… வயிறு எறிகிறது. அதனால் தான், எப்படியாவது தமிழ்நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று பார்க்கிறார்கள். பொறுப்புள்ள, ஒன்றிய அமைச்சர் பொறுப்புகளில் இருப்பவர்கள் கூட, அத்தனை வெறுப்புணர்ச்சியை பரப்புகிறார்கள்… தமிழ்நாட்டு மீது வெறுப்புணர்ச்சியை பரப்பினால், அதுமூலமாக, வட மாநிலங்களில் வாக்குகள் பெற முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் நினைப்பது நடக்கவில்லை. அதற்குப் பதிலாக என்ன நடைபெறுகிறது? தமிழ்நாட்டைப் பற்றி இப்படி பேசுகிறார்களே ஏன் என்று, வடமாநில யு-டியூபர்கள் தேடி பார்த்து, தமிழ்நாட்டின் தனித்தன்மையை - சாதனை திட்டங்களை - பொருளாதார வளர்ச்சியை தெரிந்து கொண்டு, நமக்கு ஆதரவாக வீடியோக்களைப் போட ஆரம்பித்துவிட்டார்கள்! வளர்ச்சி தொடர்பான எந்த மேப் எடுத்தாலும், இந்தியாவின் தெற்கு பகுதி வளமாக இருப்பதை எடுத்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

நம்முடைய திராவிட மாடல் அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு, இதே திருவண்ணாமலையில் இருந்துதான் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்கின்ற பெயரில், உங்களின் கோரிக்கை மனுக்களை பெற்று, ஆட்சிக்கு வந்ததும், 100 நாட்களில் தீர்த்து வைக்கின்ற பயணத்தைத் தொடங்கினேன்.

ஆட்சிக்கு வந்ததும் முதல் நாளே அதற்கென்று ஒரு தனித்துறையை ஏற்படுத்தி, அதற்கென்று ஒரு அதிகாரியை நியமித்தேன். வாக்களித்தவர்கள் மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களும் பாராட்டும் ஆட்சியை நடத்துவேன் என்று அன்றைக்கு நான் வாக்குறுதி அளித்தேன். அதை நான் செய்திருக்கிறேன். அதை செய்திருக்கிறேனா இல்லையா? கேட்கவில்லை, சத்தமாக சொல்லுங்கள் – நீங்கள் மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களில், பலர் போடுகின்ற பதிவுகளிலும், கமெண்ட்ஸ்-லும் நிறைய பேர் என்ன சொல்கிறார்கள் என்றால், “நான் தி.மு.க. ஆதரவாளர் இல்லைதான். ஆனாலும், நான் முதல்வன் உண்மையாவே இந்த ஆட்சியின் சிறந்த திட்டம். இதை பாராட்டாமல் இருக்க முடியாது” என்று ஒரு கமெண்ட் வருகிறது.

ஒன்றிய பாஜகவின் கொடுங்கோல் ஆட்சிக்கு ஆதரவாக கூஜா தூக்கும் அதிமுக : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

அதேபோல இன்னொருத்தர், என்ன சொல்லியிருந்தார் என்றால், “நான் எப்போதுமே தி.மு.க.வுக்கு வாக்களித்தது இல்லை. ஆனால், கல்வித்துறையை பொறுத்தவரைக்கும், கடந்த 4 ஆண்டுகளில், பெரிய முன்னேற்றத்தைப் பார்க்கிறேன். நிறைய சாதனைகளை செய்கிறார்கள். காலை உணவுத் திட்டம் போன்று ஒரு திட்டம் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வரவில்லை. இன்னும் எத்தனை ஆண்டு ஆகும் என்று தெரியவில்லை என்று சொல்லியிருந்தார்.

மாநில உரிமையை நாம் விட்டுக்கொடுக்காமல் இருப்பதைப் பற்றியும் நிறைய பேர் பாராட்டி எழுதி இருக்கிறார்கள். ஏன், “தொகுதி மறுசீரமைப்பு வந்தால், தமிழ்நாட்டின் ஜனநாயக வலிமை குறையும் - தி.மு.க. அரசு தான் இந்தியா முழுவதும் தலைவர்களை ஒன்றுதிரட்டி போராடுகிறார்கள் என்று எழுதியிருக்கிறார்கள்.

இப்படி தி.மு.க.வுக்கு இதுவரை வாக்களிக்காத மக்களிடம் கூட நல்ல பெயரை இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சி எடுத்திருக்கிறது. ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு இதற்கு அப்படியே தலைகீழாக நடக்கிறது. பா.ஜ.க. ஆதரவாளர்களே, இந்த ஒன்றிய அரசை கழுவி ஊத்துகிறார்கள். ‘எத்தனால்’ கலந்த பெட்ரோல், தலைநகர் டெல்லியை மூச்சுத்திணற வைக்கும் மாசடைந்த காற்று, இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி, பா.ஜ.க. அரசுகள் கட்டுகின்ற – கட்டடங்கள், சிலைகள், மேம்பாலங்கள் எல்லாம் சிறிது நாட்களிலேயே இடிந்து விழுகிறது!

தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். இத்தனை நாள் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், வெளியே சொல்லவும் முடியாமல் இருந்த பா.ஜ.க.காரங்களே இப்போது இதையெல்லாம் பார்த்து புலம்பத் தொடங்கிவிட்டார்கள். திராவிட மாடல் அரசு மீதும் சில பேர் விமர்சனம் வைப்பார்கள். அந்த விமர்சனத்தில் நியாயம் இருக்கிறதா? என்று பார்த்து, சரி செய்கின்ற முதலமைச்சர்தான் உங்கள் நம்பிக்கைக்குரிய இந்த ஸ்டாலின். ஆனால், ஒன்றிய பாஜக அரசு எந்தக் கோரிக்கையையும் கண்டு கொள்வதில்லை. எந்த விமர்சனத்தையும் நியாயத்துடன் பார்ப்பது இல்லை.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன் - திருவண்ணாமலை மாவட்டம் கிராமங்கள் அதிகமாக இருக்கின்ற மாவட்டம் இந்த மாவட்டம்! ஏன், விவசாயிகள் நிறைந்திருக்கின்ற மாவட்டம் இந்த மாவட்டம்! ஆரணி அரிசி என்றால் அவ்வளவு தரமாக இருக்கும். அதனால், மற்ற யாரையும் விட உங்களுக்குத்தான் நூறு நாள் வேலைத்திட்டம் எவ்வளவு முக்கியமானது என்று மிகவும் நன்றாக தெரியும். அந்தத் திட்டத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு இப்போது மூடுவிழா நடத்தியிருக்கிறார்கள்.

வறுமையை ஒழிப்பதிலும், கிராம மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிப்பதிலும் இந்தத் திட்டம் பெரிய சாதனையை படைத்தது. ஆனால், இப்போது பா.ஜ.க. அந்த திட்டத்தில் காந்தியடிகளின் பேரையும் எடுத்துவிட்டார்கள். 100 நாள் வேலை மக்களின் உரிமை என்று இருந்ததையும் தூக்கிவிட்டார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக, சிறிது சிறிதாக சிதைத்துவிட்டு வந்த இந்த திட்டத்தை, இப்போது மொத்தமாக நீக்கிவிட்டார்கள். இதை எதிர்த்தும், நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நாம்தான் போராடிக் கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் அவர்கள் கவனிக்கிறார்களா என்றால், இல்லை. தன்னை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள், இதை எதிர்த்து குரல் கொடுக்க துணிச்சல் இல்லாமல், ஆதரித்து பேசிக் கொண்டிருக்கிறார். அவர்கள் கட்சியும், நாடாளுமன்ற மாநிலங்களவையில் இதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள்.

இப்படியாக, ஒன்றிய பா.ஜ.க.வின் கொடுங்கோல் ஆட்சியாளர்களும் - அவர்களுக்கு கூஜா தூக்கும் அ.தி.மு.க. அடிமைகளும் - நம்முடைய அரசின் சாதனைகளை மறைக்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் திண்டாடுகிறார்கள். அவர்களுடைய எந்த பொய்யையும், மக்களான நீங்கள் நம்பத் தயாராக இல்லை. அதனால்தான் திராவிட மாடல் 2.0 அமைவது உறுதி, உறுதி, உறுதி என்று நான் தொடர்ந்து உரக்க சொல்கிறேன்! சொன்ன திட்டங்களைவிட அதிகமான அளவில், சொல்லாத முத்திரை திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்!

கழக அரசின் நலத்திட்டங்களால், பயனடையாத ஒரு குடும்பம் கூட தமிழ்நாட்டில் இல்லை என்ற அளவுக்கு செயல்படும், இந்த திராவிட மாடல் நல்லாட்சி தொடர, திருவண்ணாமலை மக்கள் எப்போதும் போல வரும் தேர்தலிலும், முழுமையான ஆதரவை எங்களுக்கு வழங்கவேண்டும்!

தமிழ்நாடு நம்பர் ஒன்றாக தொடர நீங்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அட்வான்ஸ் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன்! நன்றி! வணக்கம்!

banner

Related Stories

Related Stories