
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (22.12.2025) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் எழுத்தாளர்ப.திருமாவேலன் அவர்கள் எழுதிய தீரர்கள் கோட்டம் திமுக, திராவிட அரசியல் - திராவிட அரசு இயல், முறை செய்து காப்பாற்றும் முதலமைச்சர், ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை:-
நம்முடைய அருமை சகோதரர் திருமாவேலன் அவர்கள் ஊடகவியலாளராக, எழுத்தாளராக, வரலாற்றாசிரியராக என்று பன்முகம் கொண்டவராக விளங்கிக் கொண்டிருக்கிறார். அவர் எழுதியிருக்கின்ற தீரர்கள் கோட்டம் தி.மு.க. - திராவிட அரசியல், திராவிட அரசு இயல் - முறை செய்து காப்பாற்றும் முதலமைச்சர் ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்! பெருமை கொள்கிறேன்!
தீரர்கள் கோட்டம் என்பது நம்முடைய தியாகப் புத்தகம்! திராவிட அரசியல் - திராவிட அரசு இயல் என்பது நம்முடைய கொள்கைப் புத்தகம்! முறை செய்து காப்பாற்றும் முதலமைச்சர் என்பது, நம்முடைய சாதனைப் புத்தகம்! மூன்றாவது புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட திராவிட ஆழ்வார் ஜெகத்ரட்சகன் அவர்கள் பேச இருந்ததை எல்லாம் மறந்துவிட்டேன் என்று சொல்லி, நீண்ட நேரம் பேசினார். உண்மையிலேயே அவர் பேசிய குறிப்பில் புத்தகத்தைப் பற்றி எதுவுமே இல்லை. ஆனால், அவரே ஒரு புத்தகம் போடுவதைப் போல பேசி உட்கார்ந்திருக்கிறார்!
அடுத்து, பேசி இருக்கின்ற நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள் கொள்கை வகுப்பெடுத்து நூலைப் பற்றிச் சொல்லி, அடுத்து நமக்குள்ள கடமையைப் பேசி அமர்ந்திருக்கிறார்.
நூலின் அறிமுக உரையை பேசிய நம்முடைய பேராசிரியர் சுப.வீ. அவர்கள் திராவிட இயக்கத்தின் கொள்கை உறுதி தளராமல், தடம் மாறாமல், அந்தக் கொள்கைகளை வென்றெடுக்க ஆட்சி நடத்துகின்ற பெருமை தி.மு.க.வுக்குதான் இருக்கிறது என்று பெருமையாக பேசினார்!
அப்படிப்பட்ட நம்முடைய பெருமைகளை சொல்லுகின்ற புத்தகங்கள்தான் இந்த மூன்று புத்தகங்கள்! அரசியல் புரட்சியின் அடையாளமாக, ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்துகின்ற கருத்தியல் தெளிவின் அடையாளமாக, திராவிட இயக்கம் இருக்கின்ற காரணத்தால்தான், ஆதிக்கவாதிகளுக்கும், அவர்களுக்கு அடிமை சேவகம் செய்பவர்களுக்கும், திராவிடம் என்றாலும், திராவிட இயக்கங்கள் என்றாலும், திராவிட முன்னேற்றக் கழகம் என்றாலும் கசக்கின்றது! மிகவும் எரிகிறது!
ஒடுக்கப்பட்டவர்கள் மேலெழுந்து வருகிறார்கள் என்றதுமே, எவ்வளவு வன்மம் வெளியே வருகிறது. வரலாற்றை சிறிது திரும்பிப் பார்த்தோம் என்றால், விமர்சனங்கள் என்ற பெயரில், எத்தனை அவதூறுகள், எவ்வளவு காழ்ப்புணர்வு.. அந்தக் காலத்தில், “நீதிக்கட்சியை குழிதோண்டி புதைப்பேன்” என்று ஒருவர் சொன்னார். ஆனால், இன்றைக்கு நிலைமை என்ன? நூறாண்டுகள் கழித்தும், நீதிக்கட்சியின் நீட்சியாக நாம், தமிழ்நாட்டு மக்களுடைய ஆதரவுடன், மக்களுக்கான பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்!
நாம் திராவிட மாடல் என்று சொல்ல, சொல்ல அவர்களுக்கு திரும்ப, திரும்ப எரிகின்றது! அவர்களுக்கு திரும்ப, திரும்ப எரியவேண்டும் என்று தான், நாமும் திரும்ப, திரும்ப திராவிட மாடல் என்று சொல்கின்றோம்!
நூறாண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு எப்படி இருந்தது; இன்றைக்கு எப்படி இருக்கின்றது? இதே காலகட்டத்தில், நாட்டின் பிற மாநிலங்கள் அடைந்திருக்கின்ற சமூக வளர்ச்சி - பொருளாதார வளர்ச்சி - உட்கட்டமைப்பு வளர்ச்சி என்ன? மற்ற எல்லோரையும் விட, அனைத்து வகையிலும் நாம் இருபது ஆண்டுகள் முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோம்! கண்கூடாக தெரிகின்ற இந்த உண்மைகளை கூட மறைக்கலாம் என்று நினைத்து, சிலர் என்ன கேட்கிறார்கள்? “திராவிடம் என்ன செய்தது?” “திராவிட மாடல் என்றால் என்ன?” என்று கேட்கிறார்கள்! அவர்களுக்கெல்லாம், பதில் சொல்லுகின்ற வகையில், இந்த புத்தகங்களை எழுதியிருக்கிறார் நம்முடைய அருமை சகோதரர் திருமாவேலன் அவர்கள்.
ஒரு எழுத்தாளருக்கு, அதுவும், திராவிட இயக்க எழுத்தாளருக்கு இருக்க வேண்டிய உண்மையான கடமையை நம்முடைய திருமாவேலன் அவர்கள் செய்திருக்கிறார்.
2022-ல் இவர் எழுதிய, “இவர் தமிழர் இல்லை என்றால், எவர் தமிழர்?” அந்த நூலை நான் வெளியிட்டபோது சொன்னேன், “திராவிட இயக்கத்தின் வரலாறு, இந்த சாதனைகள் குறித்து தொடர்ச்சியாக எழுதவேண்டும்” என்று சொன்னேன். அந்தக் கடமையை செய்திருக்கின்ற அவருக்கு என்னுடைய மனதார பாராட்டுக்கள்! வாழ்த்துகள்! இதையெல்லாம் உணர்வோடு வருகிறது என்று அதை நிரூபித்திருக்கக்கூடிய வகையில் ஒரு தமிழ்க்குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!
இவருடைய தந்தை பெரும்புலவர் படிக்கராமு அவர்களை பற்றி உங்களுக்கெல்லாம் நிச்சயம் தெரிந்திருக்கும்! திருக்குறள் நெறி பரப்ப, தன்னையே ஒப்படைத்துக் கொண்டவர் அவர்! அதனால்தான், இந்த ஆண்டிற்கான ”திருவள்ளுவர் விருதை” அவருக்கு நாங்கள் வழங்கினோம்! இப்படிப்பட்ட, தமிழ்க்குடும்பத்தை, எழுத்துக் குடும்பத்தை சேர்ந்த திருமாவேலன் அவர்கள், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்கு தலைமைப் பொறுப்பில் இருந்து, சிறப்பாக செயல்பட்டு வருகிறார்; ஏன், முரசொலி நாளேட்டிலும் பங்களிக்கிறார்.
பொதுவாக, மீடியாவில் இருப்பவர்கள், அதிலும் நியூஸ் சேனலில் இருப்பவர்கள், எப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் இருப்பார்கள் என்று நமக்கு தெரியும்! பிரேக்கிங் நியூஸ் எடுக்கின்ற பரபரப்பிலேயும், தன்னுடைய எழுத்துப்பணிக்கு பிரேக் எடுக்காமல், இப்படிப்பட்ட நூல்களை படைப்பதற்காகவே திருமாவேலன் அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!
இன்றைக்கு வெளியிடப்பட்டிருக்கின்ற இந்த நூல்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், முதலில், தீரர்கள் கோட்டம் திமுக! இந்தப் புத்தகத்தை எழுதுவதற்காக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைத் தொண்டனாக என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்!
பேரறிஞர் அண்ணா உருவாக்கி, அரை நூற்றாண்டு காலம் தலைவர் கலைஞர் அவர்கள் வழி நடத்திய இயக்கம் இந்த இயக்கம், பவளவிழா கண்டிருக்கக்கூடிய காலகட்டத்தில் நான் தலைவர் பொறுப்பில் இருக்கிறேன். வெள்ளிவிழா - பொன்விழா – பவளவிழா என்று தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகம், நிச்சயம் நூற்றாண்டு விழா காலத்திலும், ஆட்சிப் பொறுப்பிலிருந்து, தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும்! அதற்கான வலிமை, கோடிக்கணக்கான உடன்பிறப்புகளுக்கு இருக்கிறது!
கடுமையான எதிர்ப்புகளை எல்லாம் வென்று, நெருப்பாற்றில் நீந்தி, அண்ணாவின் தம்பிகளாக, தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளாக, கட்டுக்கோப்பாக இருக்கின்ற இந்த இயக்கத்தை, “தீரர்கள் கோட்டம்” என்று சொல்லாமல், வேறு என்னவென்று சொல்வது? உழைப்பை மட்டுமல்ல; உயிரையே கொடுத்தவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம், இந்த இயக்கம்!
அந்த தியாக வரலாற்றை, கண்ணீர் வரவழைக்கக்கூடிய அந்த தியாகிகளின் வரலாற்றை, இன்றைய இளைய தலைமுறையினர் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்! தி.மு.க என்றால், என்னவென்று ஹிஸ்டரியை திரும்பி பார்த்தீர்கள் என்றால், போராட்டம்! போராட்டம்! போராட்டம்! சிறை! சிறை! சிறை! தியாகம்! தியாகம்! தியாகம்! - இதுதான் தி.மு.க.!
இந்தித் திணிப்புக்கு எதிரான போர்க்களம் - எல்லை மீட்பு போர்க்களம் - எமெர்ஜன்சி கொடுமைகள் - எதேச்சாதிகார அடக்குமுறைகள் என்று நம்முடைய மண் - மொழி - மானம் காக்க தி.மு.க. எதிர்கொண்ட வலிகள் மிகவும் பெரியது! அத்தனையும் கடந்து, ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருப்பதற்கு காரணம், தொண்டர்கள் தான்!
அரசியலில், பலரும் சொகுசை எதிர்பார்த்து வருவார்கள்… ஆனால், தி.மு.க.வுக்கு அந்த சொகுசு கிடையாது! சில இயக்கங்களைப் பார்த்தீர்கள் என்றால், சிறிய எஃப்.ஐ.ஆர். பதிவானாலே, கட்சிவிட்டு கட்சி தாவுவார்கள்! ஆனால், கொடூரமான அடக்குமுறைகளை எதிர்கொண்டு, அவதூறுகளையும், பழிச்சொற்களையும், வன்மத்தையும் தாங்கி, கருப்பு, சிவப்புதான் உயிர்மூச்சு, அண்ணாவும், கலைஞரும் சொன்ன கொள்கைகள்தான் கட்டளை என்று இலட்சியத்திற்காக வாழ்கின்றவர்கள் தான், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள்! இந்த வலிகளை எல்லாம், பட்டியலிட்டு, பதிவு செய்துள்ளதால்தான், “தீரர்கள் கோட்டம் - தி.மு.க.”-வை, தியாகப் புத்தகம் என்று சொன்னேன்!
அடுத்து, திராவிட அரசியல் - திராவிட அரசு இயல்! வரலாற்றின் குப்பைத் தொட்டியில், எத்தனையோ இயக்கங்கள் தூக்கி எறியப்பட்டிருக்கிறது! ஆனால், எதிர்ப்பாளர்களை எல்லாம் குப்பைத் தொட்டியில் எறிந்து, கோட்டையைப் பிடித்த இயக்கம் என்றால், அது திராவிட இயக்கம் தான்!
நிறைய பேர் என்னிடம் கேட்பார்கள். “இவ்வளவு அவதூறுகளை, தரம் தாழ்ந்த வசவுகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள்” என்று கேட்பார்கள்… அதற்கு என்னுடைய பதில் என்னவென்றால், இவைகள் எல்லாம் எங்களுக்கு புதிதா? இன்றைக்கு நேற்றா பார்க்கிறோம்! பேரறிஞர் அண்ணா சொன்ன வழியில், “வாழ்க வசவாளர்கள்” என்று தமிழ்ச் சமுதாயத்தை முன்னேற்றுவதற்கான நம்முடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம்! அதனால்தான், காலங்கள் மாறுகிறது! எதிரிகள் மாறுவார்கள்! ஆனால், தி.மு.க. மட்டும் கம்பீரமாக நிலைத்து நிற்கிறது!
காலந்தோறும் உருவாகின்ற அரசியல் எதிரிகளை சிங்கிள் ஹேண்டில் எதிர்கொண்டு, நூற்றாண்டை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்! நாம் சூரியனைப் போல, நிரந்தரமான ஒளியை வழங்கிக் கொண்டே இருக்கவேண்டும்! இதைத்தான் 'திராவிட அரசியல் - திராவிட அரசு இயல்' புத்தகம் சொல்கின்றது.
தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு பெயர் - தமிழுக்கு, செம்மொழி தகுதி - சமூகநீதி கருத்தியலை காப்பது - தமிழ்நாட்டின் வளர்ச்சியை திட்டங்களால் சாத்தியப்படுத்துவது - ஏராளமான கல்வி நிலையங்களை உருவாக்குவது என்று சொல்லித் தீராத சாதனைகளுக்கு சொந்தமான இயக்கம், நம்முடைய இயக்கம்! நீதிக்கட்சி காலத்திலிருந்து, அதன் நீட்சியான நம்முடைய திராவிட மாடல் அரசு வரைக்குமான சாதனைகளின் வரலாற்றுக் கருவூலமாக இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார்!
கண் முன்னால் ஏற்பட்டிருக்கின்ற வளர்ச்சியைக் கூட காணப் பிடிக்காமல், கண்மூடி குற்றம் சாட்டுகிறவர்களுக்கு, "இதோ ஆதாரம்! இப்போதாவது படியுங்கள்” என்று திருமாவேலன் இந்தப் புத்தகத்தை நமக்கு எழுதியிருக்கிறார்.

வரலாற்று அறிவும் - திராவிடப் பற்றும் - மொழித் திறனும் உள்ள ஒருவரால்தான், இப்படிப்பட்ட நூலை எழுத முடியும்! இது எல்லாவற்றிலும், தான் தேர்ந்தவர் என்று நம்முடைய திருமாவேலன் அவர்கள் நிரூபித்திருக்கிறார்!
அடுத்து, மூன்றாவது புத்தகமான, முறை செய்து காப்பாற்றும் முதலமைச்சர்! இந்தப் புத்தகத்தை பற்றி, நான் சொல்வதைவிட நீங்கள் வாங்கி படித்து, பொதுவெளியில் பேசவேண்டும்! நம்முடைய ஆட்சி, அனைவருக்குமான ஆட்சியாக, எப்படி சிறப்பாக செயல்படுகிறது என்று சொன்னார்களே,
அன்புப் பத்து
அறிவுப்பத்து
மகளிர் பத்து
உழவர் பத்து
இளையோர் பத்து
திராவிடப் பத்து
தமிழ் இனப் பத்து
எழுந்தது பத்து
தமிழ் மொழிப் பத்து
ஏற்றப்பத்து என்று அருமையாக எழுதியிருக்கிறார்!
மொத்தத்தில், திராவிட மாடலை சுருக்கமாக அவர் கொடுத்திருக்கிறார்! இதை புத்தகம் என்று சொல்வதைவிட, நம்முடைய ஆட்சியின் டைரி என்று சொல்லலாம்!
இந்தப் புத்தகத்தை, மானமிகு ஆசிரியர் அவர்கள் வெளியிட, நம்முடைய திராவிட ஆழ்வார் பெற்றுக் கொண்டுள்ளார்! இதையும் திருமாவேலன் காரணத்தோடு தான் செய்திருப்பார் என்று நினைக்கிறேன். இது எல்லோருக்குமான ஆட்சி என்று காட்ட இப்படி செய்திருப்பார் என்று நினைக்கிறேன்…
கடந்த வாரம், விமான நிலையத்திற்கு எதிரே உள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு நான் அடிக்கல் நாட்டினேன். அடுத்த சில நாட்களில் மனிதநேய மகத்துவத்தை சொல்கின்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றேன். மறுநாள், திருநெல்வேலி மாவட்ட அரசு விழாவில், நெல்லையப்பர் திருக்கோயில், வெள்ளித்தேர் வரும் ஜனவரியில் மீண்டும் ஓடும் என்று அறிவித்தேன்! இதுதான் திராவிட மாடல்! இதனால்தான் நம்மை எப்படி கார்னர் செய்வது என்று தெரியாமல் எதிரிகள் புலம்புகிறார்கள்!
இங்கே வந்திருக்கின்ற உங்களுக்கும், இந்தப் புத்தகங்களை வாங்கக் கூடியவர்களுக்கும் நான் வைக்கின்ற வேண்டுகோள் என்னவென்றால், “புத்தகம் என்பது அறிவாயுதம்!” பயன்படுத்தாமல் விட்டால் ஆயுதம் துருப்பிடித்துவிடும்!
அதேபோல, புத்தகங்களையும் அலங்காரத்திற்காக அலமாரியில் வைக்காமல் தினமும் எடுத்து வாசிக்கவேண்டும்! அப்போதுதான், நம்முடைய மூளையும் துருப்பிடிக்காமல் இருக்கும். புதிய சிந்தனைகள் பிறக்கும்! இன்றைக்கு முப்பது செகண்ட்ஸ் ரீல்ஸ் வீடியோவை கூட முழுவதும் பார்க்ககாமல் ஸ்கிப் செய்கின்ற அளவுக்கெல்லாம் வேகமாக சென்று கொண்டிருக்கிறது!
இந்த Addiction-னால் எந்த விஷயத்திலும், ஆழ்ந்து கவனம் செலுத்த முடியாமல் இளைஞர்கள் தவிக்கிறார்கள். ஆனால், Good Things Take Time என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்! இதுபோன்ற சூழ்நிலையில், புத்தக வாசிப்புதான் மனதை ஒருமுகப்படுத்துகின்ற மெடிடேஷன்! அதனால், நீங்கள் எவ்வளவு பிசியான வேலையில் இருந்தாலும், ஒரு நாளைக்கு அரை மணி நேரம்… அல்லது 15 நிமிடமாவது புத்தகங்களை வாசியுங்கள்! உங்களைப் பார்த்து வீட்டில் உள்ள குழந்தைகளும் இதை ஃபாலோ செய்வார்கள். பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் தான் எக்சாம்பிளாக இருக்கவேண்டும்!
மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்கள், ஜனவரியில் நான் தொடங்கி வைக்க இருக்கின்ற சென்னை புத்தகக் கண்காட்சி, அண்மையில், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி நடத்திய அறிவுத்திருவிழா, இது எல்லாமே ஆழ்ந்த வாசிப்பை நோக்கி இளைஞர்களை நகர்த்துகின்ற முயற்சிகள்தான்!
நம்முடைய அறிவுப் பாரம்பரியம் தொடரும் வரை, ஆரிய ஆதிக்கவாதிகள், வந்த வழி மறந்த அடிமைகள், அறிவற்ற அரைகுறைகள் என்று யாரும் இந்த ஆலமரத்தை அசைத்துப் பார்க்க முடியாது! இங்கே அறிவுத்தீ அணையாமல் இருப்பதால்தான் நம்முடைய ஊரில், கலவரத்தீயை பற்ற வைக்க முடியவில்லை! வாசிப்பும், வளர்ச்சியும் ஒன்றோடொன்று தொடர்புடையது! அதை உணர்ந்து, காலத்திற்கேற்ற கருத்து ஆயுதங்களை கூர்தீட்டிக் கொடுக்கக்கூடிய திருமாவேலன் அவர்களை மீண்டும் பாராட்டி, திராவிடம் எனும் அறிவொளி இயக்கத்தால் நிமிர்ந்த தமிழ்நாடு ஒருநாளும் தலைகுனியாது! பாசிசவாதிகளின் பகல்கனவு இங்கு பலிக்காது! வரலாற்றைப் படிப்போம்! தொடர்ந்து வரலாறு படைப்போம்!






