தமிழ்நாடு

மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!

திருப்பரங்குன்றம் மலையில் ஒரு கல் தூணில் தீபம் ஏற்றுவது என்ற பெயரால் மதக் கலவரத்தைத் தூண்டுவதா?

மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது என்ற பெயரால், சட்டத்திற்கு முரணான மதக் கலவரத்தை உண்டாக்குவதா? இதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி துணை போவதா? சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு எடுத்துள்ள 144 தடை நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டில் கல்வியிலும், மருத்துவத்திலும், சமூகநீதியிலும், பெண்ணுரிமையிலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எதிராகப் பலவிதத் தடைகளை ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஒன்றிய ஆட்சியும், அதன் அமைப்புகளும் திட்டமிட்டே கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து ஏற்படுத்தி வருவது உலகறிந்த செய்தியாகும்!

ஒரு போட்டி அரசை நடத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் மூலம்...

அரசியலமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிரமாணம் எடுத்தும், அதனை அப்பட்டமாக அனுதினமும் மீறி, தமிழ்நாடு ஆட்சியை எதிர்த்து ‘‘ஒரு போட்டி அரசை’’ நடத்தி, அவதூறுகளை அள்ளி நாளும் பரப்பிக் கொண்டுள்ளது ஆளுநர் ஆர்.என்.ரவி என்பவர் மூலம்.

தமிழ்நாட்டிற்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய, தரவேண்டிய ஒன்றிய அரசு நிதிகளைத் தராமல், தங்களது ஆர்.எஸ்.எஸ். கொள்கைத் திணிப்பைக் கல்வித் துறையில் ஏற்றால் மட்டுமே ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்குரிய கல்வி நிதி, மற்ற நிதிகளை வழங்குவோம் என்று கூறி, நிதி நெருக்கடிமூலம் தமிழ்நாட்டுத் ‘திராவிட மாடல்’ அரசைப் பணிய வைக்க திட்டமிடுகிறது. இயற்கைப் பேரிடர் நிதியில்கூட ஓரவஞ்சனை! மற்ற வகையிலும் வஞ்சித்தல்; நீதித்துறை ஒருபுறம், கூட்டணியை ‘‘அடகுக் கட்சிகள்’’மூலம் அமைக்க முயன்றும், முடியாத நிலையில், ‘எஸ்.அய்.ஆர்.’ என்ற தேர்தல் ஆணையத்தின்மூலம் ‘ஒரு வகையான’ வித்தையில் ஈடுபட்டும் வருவதுடன், பல லட்சம் வாக்காளர்கள், தி.மு.க. கூட்டணிக்கு வாக்கு ஆதரவினைத் தராமல் தடுக்க ஏற்பாடு, பீகார் மாதிரி நடைபெறுகிறதோ என்ற ஒரு சந்தேகம் தமிழ்நாட்டில் பரவலாக நிலவி வருகிறது!

இதற்குமுன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. வித்தைகள், ரோட் ஷோக்கள் (Road Shows), காட் ஷோக்கள் (God Shows) போன்றவற்றைப் பிரதமர் மோடி பலமுறை வந்து நடத்தியும், புதுவை மாநிலம் உள்பட 40 இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று, தமிழ்நாடு பெரியார் மண், சமூகநீதி மண், திராவிட மண் என்பதை நிரூபித்துவிட்டது.

ஒரு புது முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஒன்றிய அரசு முயற்சிக்கிறது!

வரும் 2026, ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலிலும் அது தொடரக்கூடும் என்பதைப் புரிந்து, அதனைத் தடுக்கும் நோக்கில், ஒரு புது முயற்சியில், குறுக்கு வழி குல்லுகப்பட்டர்கள்மூலம் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஒன்றிய அரசு முயற்சிக்கிறது!

மதவாத சக்திகள், மதக் கலவரத்திற்கு ஏற்பாடு!

அதுதான் அமைதிப் பூங்காவாக – மதக்கலவரம் என்றால் என்னவென்றே அறியாத தமிழ் மண்ணை – அமளிக்காடாய் ஆக்கி, ஏதோ சட்டம் ஒழுங்குப் பிரச்சினை இங்கே பெருமளவில் இருப்பதுபோன்று ஒரு ‘பூதாகரமான’ நிலையை, சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் இந்தக் காலகட்டத்தில் உருவாக்க முயலுவதற்கு ஓர் எடுத்துக்காட்டு நிகழ்ச்சியே நேற்று (3.12.2025) திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றுள்ளது. தீபம் ஏற்றும் நிகழ்ச்சி என்ற பெயரில், மதவாத சக்திகள் தங்கள் விஷமத்தின்மூலம் – மதக் கலவரத்திற்கு ஏற்பாடு செய்யத் தீவிரமாக முயற்சித்துள்ளனர்.

அண்ணாமலையின் தலைமையில் முயன்று தோற்றனர் முன்பு!

முன்பு தமிழ்நாட்டின் பா.ஜ.க. தலைவராக இருந்த அண்ணாமலை தலைமையில் ஒருமுறை முயன்றனர். தமிழ்நாடு அரசின் உரிய சட்ட – ஒழுங்கு நடவடிக்கைகளின்மூலம் அவை தோற்கடிக்கப்பட்டு, அடக்கப்பட்டன.

‘‘ஆர்.எஸ்.எஸ். நீதிபதி’’ என்று தன்னைப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் நீதிபதி!

அதே ஆயுதத்தை எடுத்து, திருவிழா, பக்தி என்ற போர்வையில், தீபம் ஏற்றல் என்பதன்மூலம், மதக் கலவரத்தை நடத்திட, தமிழ்நாடு தி.மு.க. அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திட, உயர்நீதிமன்ற ‘‘ஆர்.எஸ்.எஸ். நீதிபதி’’ என்று தன்னைப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் ஒரு நீதிபதியான ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் என்பவரையும் பயன்படுத்தி, ஒரு புது முயற்சியின்மூலம் தங்களது நிலைப்பாட்டை நிறைவேற்றிக் கொள்ள முயன்றனர்!

முன்பு நேரிடையான நடவடிக்கை; இப்போது உயர்நீதிமன்ற நீதிபதி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருவது சரிதானா? தமிழ்நாடு அரசின் சட்டப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அதன் அதிகாரிகள்மீது நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர்கள் போன்றவர்கள் அன்றாட சட்டம் ஒழுங்கு கண்காணித்தல் நடவடிக்கைகளை எடுத்து, மக்களைக் காப்பாற்ற மேற்கொள்ளும் சீரிய நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதற்கான மும்முர வேலையில் ஈடுபட்டுள்ளனர்!

வன்மையான கண்டனத்திற்குரியதாகும்!

இவர் தந்த தீர்ப்பை ஏற்காத தமிழ்நாடு அரசு, முறைப்படி மேல்முறையீடு செய்துள்ள நிலையில், உடனடியாக அவசரமாக அங்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை நடத்த, சில ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர்களை அனுப்பி, மாநில அரசின் சட்டம் – ஒழுங்கு பராமரிப்பிற்கு எதிராகக் கலவரத்தைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி, கடமையாற்றிய காவலர்களைத் தாக்கி, காயப்படுத்தும் அளவிற்குக் காலித்தனத்திலும் ஈடுபட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரிய நடவடிக்கை ஆகும்!

இந்த 144 தடை உத்தரவினை மீறும் கும்பலுக்குப் பாதுகாப்பாக ஒன்றிய அரசின் சி.அய்.எஸ்.எஃப். என்ற மத்திய போலீசையும் உடன் அனுப்புவது எதைக் காட்டுகிறது?

ஒரு பக்கம் ஆர்.எஸ்.எஸ். சார்பு நீதிபதியின் அவசர ஆணை – மாவட்ட ஆட்சியரை மிரட்டிய நீதிமன்றப் பேச்சு – கூடுதலாக சட்டத்தை மீறுவோருக்கு ஒன்றிய அரசின் காவல் படைப் பாதுகாப்பு!

அரசியலமைப்புச் சட்டப்படியும், நியாயப்படியும் இது ஏற்கத்தக்கதா?

ஆர்.எஸ்.எஸ். பழைமைவாதப் பாதுகாப்பாளரான அந்த நீதிபதி அறியமாட்டாரா?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மதச் சுதந்திர உரிமை ஷரத்து 25, 26 இல் உள்ள இரு பிரிவுகளும் கூறுவது என்ன?

‘‘மதச் சுதந்திர அடிப்படை உரிமை என்பது கட்டுப்பாடற்ற, லகான் இல்லாத குதிரை போன்றதல்ல’’ என்பதை – தீர்ப்பு வழங்கிய, தொடர்ந்து தன்னை ஓர் ஆர்.எஸ்.எஸ். பழைமைவாதப் பாதுகாப்பாளர் என்று காட்டிக் கொண்டு, தமிழ்நாடு, தி.மு.க. அரசிற்கு எதிராகத் தொடர் தீர்ப்புகளை வழங்குவதில் அதிதீவிர ஆர்வம் காட்டும் அந்த நீதிபதி அறியமாட்டாரா?

அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 25 & 26–ன்படி,

‘‘Subject to public order, morality and health and to the other provisions of this Part’’ என்ற கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதுதானே மதச் சுதந்திர உரிமை?

இதை எவரே மறுக்க முடியும்?

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குப் பெண்களும் போகலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியும்,

அதனை செயல்படுத்தப்படாததுபற்றி சம்பந்தப்பட்டவர்கள் வாய் திறக்காதது ஏன்?

மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்னொரு வழக்கு!

திண்டுக்கல் மாவட்டம் பெருமாள் கோவில் பட்டியில் மூடிக் கிடக்கும் மண்டுகருப்பணசாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடத்த அனுமதிப்பது தொடர்பான மற்றொரு வழக்கு!

அந்த வழக்கையும் நீதிபதி திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன்தான் விசாரித்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் முடிவுக்கு எதிராக, கார்த்திகைதீபம் ஏற்ற அனுமதித்துத் தீர்ப்பு வழங்குகிறார். இதற்கெதிரான அரசின் மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக ஏற்க முடியாது என்று நேற்று (3.12.2025) இரு நீதிபதிகள் (நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், நீதிபதி கே.கே.இராமகிருஷ்ணன்) நிராகரிக்கின்றனர்.

ஆனால், தனது உத்தரவை நிறைவேற்றாதது நீதிமன்ற அவமதிப்பு என்று முந்தைய மனுதாரர் தொடுத்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொண்ட நீதிபதி திரு.ஆர்.சுவாமிநாதன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.சரவணன் அவர்களை அழைத்துக் குறுக்கு விசாரணை செய்கிறார்.

சட்டம் ஒழுங்கு நிலவரத்தைச் சரிவரக் கண்காணித்து, முடிவு எடுக்கும் உரிமை மாவட்ட ஆட்சியருக்குத்தான் உண்டு. அது, மாவட்ட மக்களைப் பாதுகாக்கும், பராமரிப்புக்குரிய அவரது உரிமை. உயர்நீதிமன்ற நீதிபதிக்குக் கள நிலவரம்பற்றித் தெரிய வாய்ப்பில்லை.

அவர், அதைத் தெளிவுபடுத்திய பிறகும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, அவசர வழக்காகக் கையிலெடுத்து, மாவட்ட ஆட்சியரையும், காவல்துறைக் கண்கணிப்பாளரையும் உடனடியாக அழைத்து, குறுக்கு விசாரணை நடத்தியுள்ளார்! சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அழைப்பும், அதீத குறுக்கு விசாரணையும் முறையானதல்ல. காரணம், மத உரிமை என்பது அரசியலமைப்புச் சட்டப்படி, Absolute Right அல்ல. சட்டம் ஒழுங்கு பாதுகாத்தலுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஒன்று என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

உயர்நீதிமன்ற நீதிபதி அதை மீறலாமா?

கோவிட் 19 தொற்று காலத்தில், பல கோயில் திருவிழாக்களை, அ.தி.மு.க. அரசுகூட நடத்த அனுமதிக்காத முன் உதாரணம் உள்ளது.

“By passing the [prohibtory] order, the Dindigul Collector has prima facie committed contempt. The Collector has forbidden the usual religious celebrations” என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியது (The Hindu, 4.12.2025, Page 6) அரசியலமைப்புச் சட்ட விதிகள் 25, 26 பிரிவுகளுக்கு எதிரான ஒன்று.

அரசியலமைப்புச் சட்ட விதியை மதிக்காத, நீதிபதியின் இந்தக் கூற்றுதான் தவறான நிலைப்பாடு.

எனவே, இந்த நிகழ்வில் தவறு இழைத்திருப்பவர் மாவட்ட ஆட்சியர் அல்ல; நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்தான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்!

‘வேலியே பயிரை மேய்வது’போல...

இதன்படி, தமிழ்நாடு அரசு, அதன் மாவட்ட நிர்வாகப் பொறுப்பு அதிகாரிகள் 144 தடை உத்தரவின்மூலம் பொது அமைதி, சட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பது – தலையாய இன்றியமையாத கடமையல்லவா? அதற்கு எதிராக உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரே – ‘வேலியே பயிரை மேய்வது’போல ‘பழைய அரைக்கால் சட்டை ஷாகாக்காரர்’ என்ற நினைப்பு மாறாமலேயே, இப்படி தனது அதிகாரத்தைக் காட்டுவதை எப்படி அரசியலமைப்புச் சட்டக் கடமை உணர்வாளர்களால் ஏற்க முடியும்?

அதைவிடக் கொடுமை, 144 தடை உத்தரவை மீறி, மதக் கலவரத்திற்குத் தூபம் போட்டு, தீபம் ஏற்றும் முயற்சி என்ற போர்வை போர்த்திக் கொண்ட காவிக் கூட்டத்தாருக்கு ஆதரவாக, ஒன்றிய அரசின் காவல் படையும் உடன் செல்வதா?

இதைத் தமிழ்நாடும், நியாய உணர்வாளர்களும் பொறுத்துக் கொண்டு வேடிக்கைப் பார்க்க முடியுமா?

தேவையானால், மதுரைக்கோ அல்லது திண்டுக்கல்லுக்கோ விரைவில் சென்று, மக்கள் மன்றத்தில், மக்களிடம் நியாயம் கேட்க நாம் தயாராக உள்ளோம்.

மக்கள் மன்றம், நீதிமன்றத்தைவிட பெரியது. காரணம், அரசியலமைப்புச் சட்டம், மக்களே தமக்குத் தாமே வழங்கிய உரிமை ஆவணம் ஆகும்!

தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாட்டினை வரவேற்கிறோம்!

தமிழ்நாடு அரசும், அதன் துறைகளும் இதில் எடுத்த தெளிவான, உறுதியான நிலைப்பாட்டினை வரவேற்கிறோம். அதிகாரிகளுக்குத் தமிழ்நாடு அரசு போதிய பாதுகாப்பு, ஆதரவு வழங்க, தமிழ் மக்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories