
இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறியும் முறை சட்டப்படி குற்றமாகும். அதையும் மீறி யாரேனும் குழந்தையின் பாலினத்தை கண்டறிய முயற்சி செய்தால், அவர்களுக்கு அபராதமும், தண்டனையும் வழங்கப்படும். இருப்பினும் சட்டத்திற்கு புறம்பாக ஒரு சிலர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போதும் அரங்கேறி வருகிறது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பேளூர் துக்கியம்பாளையம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சட்டத்துக்கு புறம்பாக கர்ப்பிணி பெண்களை பரிசோதனை செய்து அவர்களின் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படுகிறது என்றும், இதற்காக அதிகளவில் பணம் பெறப்படுகிறது என்றும் சேலம் மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சேலம் மாவட்ட சுகாதார பணிகள் மாவட்ட அலுவலர்கள் சவுண்டம்மாள் மற்றும் யோகா ஆனந்த் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட வீட்டினை கண்காணித்து வந்தனர். அப்பொழுது அதிகாலை வேளையில் கர்ப்பிணி பெண்கள் சிலர் வீட்டிற்குள் சென்று வந்தது தெரிய வந்தது.

இதனை எடுத்து அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த சுகாதாரக் குழுவினர் அங்கு கர்ப்பிணி பெண்களுக்கு சட்டவிராதமாக ஸ்கேன் மூலம் கருவில் உள்ள பாலினம் குறித்து கூறி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சட்டவிரோதமாக கருவின் பாலினம் கூறிவந்த வெங்கடேசன் என்பவரை காவல்துறை உதவியுடன் கைது செய்த சுகாதார துறையினர் அவருக்கு உதவியாக இருந்த லதா என்பவரையும் அந்த வீட்டின் உரிமையாளரான சக்திவேல் என்பவரையும் கைது செய்து வீட்டில் இருந்த ஸ்கேன் கருவிகளையும், உபகரணங்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் இரவு மற்றும் அதிகாலை வேளையில் கர்ப்பிணி பெண்களை வரவழைத்து கருவில் இருக்கும் பாலினம் குறித்து கேட்டு அறிந்த வந்ததாகவும் இதற்காக நபர் ஒருவருக்கு சுமார் 30,000 வரை வசூலித்து வந்ததாகவும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால் அவர்கள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் கர்ப்பிணி பெண்களை அழைத்து வந்த திருப்பத்தூரைச் சேர்ந்த கனகா மற்றும் மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர்கள் இடைத்தரதர்களாக செயல்பட்டு வந்ததாகவும் அவர்கள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








