
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பைப் போட்டி, தமிழ்நாட்டில், சென்னை மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம் மற்றும் மதுரையில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஹாக்கி விளையாட்டரங்கம் ஆகிய இரு இடங்களிலும் 28.11.2025 முதல் 10.12.2025 வரை சிறப்பாக நடைபெற உள்ளது.
இதனையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (24.11.2025) சென்னை மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மைதானத்தில் பார்வையாளர்கள் அமர்வதற்கும், போட்டியில் விளையாட உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கான வசதிகள், மின்விளக்கு வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் உள்ள டாக்டர் கலைஞர் பார்வையாளர் மாடத்தில் இருந்து வெளிநாட்டு அணியினர் பயிற்சி ஆட்டம் மேற்கொள்வதை பார்வையிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அலுவலர்கள் மற்றும் ஹாக்கி இந்தியா நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.
பின்னர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.
இராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. அதை மேற்பார்வையிடுவதற்காகதான் வந்திருக்கின்றேன். அனைத்து விதமான பாதுகாப்பு வசதி, உணவு வசதி, போக்குவரத்து வசதி, தங்கும் வசதி இது போன்று அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கிறது.

வருகின்ற 28 ஆம் தேதி சென்னை மற்றும் மதுரையில் போட்டிகள் தொடங்க இருக்கின்றது. மதுரையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏற்கனவே அங்கே பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி டிக்கெட் குறித்து விளக்கி இருக்கிறார். டிக்கெட்டுகளுக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. பொதுமக்களிடமும், விளையாட்டு வீரர்கள், ஹாக்கி ரசிகர்களிடமும் கேட்பதெல்லாம், இந்த உலக கோப்பை இளையோர் ஹாக்கி பற்றி நீங்கள் நிறைய பேரிடம் சொல்லுங்கள். போட்டிகளை நேரடியாக வந்து பாருங்கள். இந்த போட்டியை உற்சாகப்படுத்துங்கள்.
ஹாக்கி விளையாட்டிற்கு எப்போதுமே, தென்தமிழகத்திலும் சரி, சென்னையிலும் சரி தமிழ்நாட்டிலிருந்து நிறைய ஒலிம்பிக் வீரர்கள் வந்திருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த போட்டி புது உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஹாக்கி ஆசிய கோப்பை போட்டிகள் நடக்கும் போது ஒவ்வொரு போட்டிக்கும் இங்கு இருக்கக்கூடிய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் (SDAT) விடுதி மாணவர்கள் அத்தனைபேரையும் இங்கு அழைத்து வந்து, அவர்களுக்கெல்லாம் இந்த போட்டியை நேரில் பார்ப்பதற்கான, இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அந்த வீரர்களுடன் பேசுவதற்கான வாய்ப்புகள் எல்லாம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
இந்த முறையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் (SDAT) விடுதி விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் அனைத்து போட்டிகளையும் இலவசமாக கட்டணமில்லாமல் பார்க்கும் வசதியோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
SDAT ஹாக்கி விளையாட்டு வீரர்கள் அனைவரும் வந்து பார்க்கலாம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் விடுதியில் இருக்கின்ற மற்ற விளையாட்டு வீரர்களும் வந்து இந்த போட்டிகளை பார்ப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது.
மிகப்பெரிய போட்டிகள் நடத்தப்படும் போது எல்லா மாநிலங்களுக்கும் கோப்பை அனுப்படும். பல்வேறு மாநிலங்களுக்கும் உலகக் கோப்பை பயணம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் டெல்லியில் நடைபெற்ற ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழாவின்போதும் ஒன்றிய அமைச்சர் கோப்பையை அறிமுகம் செய்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹாக்கி உலகக்கோப்பை பயணம் மேற்கொள்ளப்படுகின்றது என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் தெரிவித்தார்.








