முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (5.11.2025) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 23 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் நான்கு தளங்கள் கொண்ட புதிய மருத்துவக் கட்டடம் கட்டப்பட்டு, 225 படுக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைத்திட, புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுதல், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவக் கருவிகளை நிறுவுதல், அனைவருக்கும் நலவாழ்வு என்கிற உயரிய நோக்கினை செயல்படுத்தும் வகையில் “மக்களைத் தேடி மருத்துவம்” சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் “இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும்-48” போன்ற பல்வேறு திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வாயிலாக அரசு செயல்படுத்தி வருகிறது.
மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனை நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 728 வெளிநோயாளிகள், 117 உள்நோயாளிகள், மாதத்திற்கு 105 பிரசவங்கள், 13,691 ஆய்வக பரிசோதனைகள், 677 USG Scan மற்றும் 204 பெரிய அறுவை சிகிச்சைகள் மற்றும் 707 சிறிய அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வருகிறது.
மே 2021-ல் இவ்வரசு பொறுப்பேற்ற பின், திருச்செங்கோடு பகுதி மக்களின் நலன்கருதி, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தும் பொருட்டு 2023ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டு, 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி, 23 கோடி ரூபாய் செலவில் தரைத்தளத்துடன் கூடிய நான்கு தளங்களுடன் புதிய மருத்துவக் கட்டடம் கட்டப்பட்டு, இக்கட்டடத்தின் தரைத்தளத்தில் புறநோயாளிகள் பதிவு சீட்டு வழங்குமிடம், 8 படுக்கைகள் கொண்ட தலைக்காய சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு மற்றும் நோய் பகுப்பு பிரிவு மருந்தகம், ஊசி போடும் இடம் பல் மருத்துவப் பிரிவு, தொற்றாநோய் பிரிவு, மருத்துவர் அறையும், முதல் தளத்தில் மகப்பேறு தாய்மார்கள் புறநோயாளிகள் பிரிவு, குழந்தைகள் புறநோயாளிகள் பிரிவு, பிரசவித்த தாய்மார்கள் பாலூட்டும் அறை, தடுப்பூசி மையம், அறுவை சிகிச்சைக்கு முன் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவுகள், கண் சிகிச்சைப் பிரிவு, முதலமைச்சரின் காப்பீட்டு பிரிவு, எக்ஸ்ரே, ஆய்வகம், நுண்கதிர் ஆகியவையும், இரண்டாவது தளத்தில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்பு பிரிவு, பிரசவத்திற்கு பின் கவனிப்பு வார்டு, மருத்துவர் அறை, செவிலியர் அறையும், மூன்றாவது தளத்தில் குழந்தைகள் நலப்பிரிவு 1 மற்றும் 2, பிரசவ அறை, பிரசவத்திற்குப் பிந்தைய பிரிவு, USG Scan அறை, பிரசவத்திற்கு அவரச சிகிச்சை பிரிவும், நான்காவது தளத்தில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு நிலை 1,2 மற்றும் 3, தாய்ப்பால் வங்கி, மயக்கவியல் நிபுணர் அறை, அறுவை அரங்கம், மயக்கவியல், செவிலியர் அறை ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இக்கூடுதல் கட்டடத்தின் அடிப்படையில் 150 படுக்கைகள் அதிகரித்து, 225 படுக்கை வசதிகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.








