
ஒன்றியத்தின் பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர் தன்னாட்சி கொண்ட அமைப்புகளை எல்லாம் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. அதன்படி தேர்தல் ஆணையத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பாஜக அதன்மூலம் பல்வேறு மோசடிகளை செய்து வருகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல், மஹாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் என பாஜகவின் தேர்தல் மோசடிகளை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது பாஜகவின் மற்றொரு தேர்தல் மோசடியை ராகுல் காந்தி அம்பலப்படுத்தியுள்ளார்.
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேடுகளை இன்று செய்தியாளர் சந்திப்பில் ராகுல்காந்தி வெளிக்காட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "ஹரியானாவில் தபால் வாக்குகளில் பெரும் மோசடி நடந்துள்ளது, தபால் வாக்கு எண்ணிக்கை தேர்தல் முடிவுகளுடன் பொருந்தவில்லை. ஹரியானாவில் 2 கோடி வாக்குகளில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளது.

பிரேசிலிய மாடலின் புகைப்படத்தைக் கொண்டு, 20 வெவ்வேறு பெயர்களில், ஹரியானாவின் 20 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் ஒரே பெண் 100 இடங்களில் வாக்காளராக உள்ளார். இங்கு பதிவான 8 வாக்குகளில் சராசரியாக ஒரு வாக்கு போலியானது. 1,24,177 வாக்காளர்கள் போலி வாக்காளர் புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியலில் உள்ளனர்.
ஹரியானாவின் ஹோடல் தொகுதியில் ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் வசிப்பதாக மாபெரும் மோசடி அரங்கேறியுள்ளது. அதே போல் பாஜக நிர்வாகி ஒருவர் வீட்டில் கூட 66 வாக்காளர்கள் உள்ளதாக மோசடி நடந்துள்ளது. பாஜகவை சேர்ந்த பலர் உ.பி, ஹரியானா என இரண்டு மாநிலங்களிலும் வாக்களித்துள்ளார்கள்"என்று விமர்சித்துள்ளார்.




