
முரசொலி தலையங்கம் (05-11-2025)
பழனிசாமியின் இரட்டை வேடம்!
தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் குறித்து தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளன. அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
தி.மு.க. எதற்காக எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பதையே உணராதவர் போல உளறிக் கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. ஆனால் அவரே என்ன செய்கிறார் தெரியுமா? தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை அ.தி.மு.க.வினர் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளார்.
அக்டோபர் 29 ஆம் தேதியன்று பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்,“அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளைக் கண்காணிக்க வேண்டும்” என்று அறிக்கை வெளியிட்டார். பழனிசாமி எதற்காக இதனைக் கண்காணிக்க உத்தரவிட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை முழுமையாக நம்புகிறவர் எதற்காக கண்காணிக்க வேண்டும்?
“வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தப் பணியை அ.தி.மு.க. முழு மனத்துடன் ஆதரிக்கிறது' என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்சொல்லி இருக்கிறார். “தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியல் 100 சதவீதம் முழுமையானதாகவும், சரியானவையாகவும் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
எனவே, இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இரட்டை வாக்குகள், இறந்தவர்கள் மற்றும் இடம் பெயர்ந்தவர்களை நீக்குவதும், புதிதாக தகுதி உள்ளவர்களை சேர்ப்பதும் அவ்வப்போது சுருக்கத் திருத்தம் மற்றும் தீவிர திருத்தம் (Revision மற்றும் Intensive Revision) என்ற முறைகளைப் பின்பற்றி சரியான வாக்காளர் பட்டியலை உறுதிபடுத்துவது இயல்பான ஒரு நடைமுறை.
இந்தியாவின் சிறப்பே ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்துவதுதான். அதற்கு இந்தியா முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியல் 100 சதவீதம் சரியானதாக இல்லை. எனவே இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அ.தி.மு.க. சார்பில் முழு மனதுடன் வரவேற்கிறோம்” என்று அறிக்கை கொடுத்திருந்தார் ஜெயக்குமார்.

தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சியினரும், தி.மு.க. கூட்டணிக்கு வெளியில் இருக்கும் கட்சிகள் கூட, வாக்காளர் பட்டியல் சீர்திருத்தத்தை எதிர்க்கவில்லை. எதற்கு அவசரமாகச் செய்கிறீர்கள்? எதற்காக மழை காலத்தில் செய்கிறீர்கள்? எதற்காக தேர்தல் நெருக்கத்தில் செய்கிறீர்கள்? என்றுதான் கேட்கிறார்கள்.
'S.I.R. நடவடிக்கையை தி.மு.க. எதிர்த்தால், SIR நடவடிக்கையை அ.தி.மு.க.ஆதரிக்கும்’என்றும் அதிமேதாவி ஜெயக்குமார் சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் இன்னொரு பக்கம் என்ன செய்கிறது அ.தி.மு.க.?
S.I.R. நடவடிக்கையானது அ.தி.மு.க.வையும் பதற வைத்துள்ளது என்பதுதான் உண்மை. அ.தி.மு.க.வில் மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் கடந்த 2 ஆம் தேதியன்று பழனிசாமி தலைமையில் நடந்துள்ளது. இக்கூட்டத்தில் என்ன தீர்மானம் போட்டுள்ளார்கள் தெரியுமா?
“1.1.2026- -ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவதால், முறையான வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கு ஏதுவாக, கழகத்தின் சார்பில் சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்வதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் உறுதுணையோடு, தங்களுக்கான மாவட்டங்களுக்கு நேரில் சென்று, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியினை கண்காணித்து, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியை முழுமையாக செய்து முடித்து, அதன் விபரங்களை தலைமைக் கழகத்துக்கு தெரிவிக்க வேண்டும்” என்று பழனிசாமி சொன்னதாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பழனிசாமியின் ஒப்புதலோடு இந்தச் செய்தி வெளியிடப்படுகிறது' என்று அந்த செய்திக் குறிப்பு சொல்கிறது. இதைப் பார்த்து பழனிசாமி என்ன சொல்லி இருக்க வேண்டும்? நியாயமாக தேர்தல் ஆணையம் நடந்து கொள்ளும், பிறகு எதற்காக நாம் ஏன் கண்காணிக்க வேண்டும்?' என்று அல்லவா பழனிசாமி கேட்டிருக்க வேண்டும்?
மாறாக வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியைக் கண்காணிக்க வேண்டும் என்று எதற்காக பழனிசாமி சொல்ல வேண்டும்? கட்சிக்காரர்களுக்கு ஏன் உத்தரவு போட வேண்டும்? 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை கண்காணிக்க வேண்டும்- அ.தி.மு.க. மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்' என்றுதான் அனைத்து நாளிதழ்களும் பழனிசாமியின் செய்தியை வெளியிட்டுள்ளன. அப்படியானால் பழனிசாமிக்கே, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை மீது சந்தேகம் இருப்பதாகத்தானே அர்த்தம்?
‘பா.ஜ.க.வுக்குப் பயந்துதான் பழனிசாமி இதை வெளிப்படையாகப் பேச மறுக்கிறார்' என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்வதுதானே உண்மை? பா.ஜ.க.வுக்குப் பயந்து தமிழ்நாட்டின் அனைத்து நலன்களையும் பலி கொடுத்தவர்தான் பழனிசாமி. அதே செயலைத்தான் இப்போதும் செய்கிறார்.
“தமிழ்நாட்டுக்கு எதிராக எந்தச் சட்டம் வந்தாலும் பரவாயில்லை, இரட்டை இலை சின்னம் முடக்கப் படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஆமாம் சாமி போடும் நிலையில் இருக்கிறார் பழனிசாமி. துரோகத்துக்கு மட்டுமல்ல; அடிமைத்தனத்துக்கும் பழனிசாமிக்குத்தான் நோபல் பரிசு தரவேண்டும்” என்று சொல்லி இருக்கிறார் துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி அவர்கள்.
இன்னும் எத்தனை உரிமைகளைத்தான் பழனிசாமி காவு கொடுக்கப் போகிறாரோ?






