
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2022ஆம் ஆண்டு ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ நிதித்திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, பல்வேறு நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் தங்களால் முடிந்த நிதியை அளித்ததன் வழி, மொத்தமாக இதுவரை ரூ.1,000 நிதி பெற்று சாதனைப் படைத்துள்ளது தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை.
இந்நிலையில், இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தது பின்வருமாறு,
“ஆயிரம் கோடியைத் தொட்டது ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி’; நல்லுள்ளங்களுக்கு நன்றி!

இந்த ஆண்டு மட்டுமே 46,767 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் இந்தியாவிலேயே பள்ளிக்கல்வியில் பெரும் கவனம் செலுத்தி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.
அரசின் முயற்சிகளுக்குப் பக்கபலமாக, 5 லட்ச ரூபாயை முதல் நன்கொடையாக வழங்கி, நான் தொடங்கி வைத்த 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' முன்னெடுப்பில் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் ஆயிரக்கணக்கிலான STEM ஆய்வகங்கள், Smart வகுப்பறைகள், நவீன கழிப்பறைகள், திறன் பயிற்சிகள் உள்ளிட்ட பணிகளை அரசுப் பள்ளிகளில் நிறைவேற்றியுள்ளோம்!
நம்மை வளர்த்த சமூகத்துக்கும் பள்ளிக்கும் உதவ வேண்டுமென்ற உயர்ந்த உள்ளத்தோடு பங்களித்த 885 நிறுவனங்கள் & 1,500 நன்கொடையாளர்களுக்கும் நனிநன்றிகள்.
இத்தனை பேரின் நம்பிக்கையைக் காப்பாற்றும்படி வெளிப்படைத்தன்மையோடும் நேர்மையாகவும் செயல்பட்டு, நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் NSNOP அறக்கட்டளைத் தலைவர் வேணு சீனிவாசன் ஆகியோருக்குப் பாராட்டுகள்.
We rise higher only when we reach back and lift someone else with us.”






