தமிழ்நாடு

“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!

கடந்த 26 மாதங்களாக, 1 கோடியே 20 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுக்கின்றார்.

“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்  இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிகழ்ச்சியில் ஆற்றிய உரை  

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ராணிப்பேட்டை மாவட்டத்தில்
இன்றைக்கு மட்டும் சுமார் 73 ஆயிரம் பேருக்கு, இந்த அரங்கத்தில் மட்டும் 22 ஆயிரம் பேருக்கு, சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான  நலத்திட்ட உதவிகளை உங்கள் முன்பு வழங்கி உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமையடைகின்றேன்.

இந்த வாய்ப்பை எனக்கு அளித்த உங்களுடைய மாவட்ட அமைச்சர் அண்ணன் ராணிப்பேட்டை காந்தி அவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் முதலில் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இங்கே அண்ணன் ராணிப்பேட்டை காந்தி அவர்கள் பேசும்போது குறுகிய காலத்தில்  ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி என்று கூறினார். நான்கே நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி என்றாலும், இந்த நிகழ்ச்சியை கிட்டத்தட்ட ஒரு மாவட்ட மாநாடு போல இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்ததற்கு முதலில் என்னுடைய பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

இந்த மாவட்டத்துக்கு பெயரே ‘இராணி'ப்பேட்டை. நம்முடைய தமிழ்நாட்டில்  ராஜாக்கள் பெயரில் நிறைய ஊர்கள் இருக்கிறது. ஆனால், ராணியின் பெயரில் இருக்கும் மிகச் சில ஊர்களில் மிக, மிக முக்கியமான ஊர் இந்த இராணிப்பேட்டை. அதனால்தான் இந்த விழாவில் கூட ராஜாக்களைவிட ராணிகள் அதிகமாக பங்கேற்றுள்ளீர்கள்.

ஆண்களை விட பெண்கள் மகளிர் அதிக அளவில் வந்து இருக்கின்றீர்கள். அதனால்தான், இந்த ராணிப்பேட்டையில் இராணிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்ற இந்த நிகழ்ச்சியை அண்ணன் ராணிப்பேட்டை காந்தி அவர்கள் ஏற்பாடு செய்து, எனக்கு அதில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திக்கின்ற அந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றார்.

73 ஆயிரம் பேருக்கு நலத்திட்டம் கொடுக்கின்றோம் என்றால்,
அதில், 55 ஆயிரம் பேர் மகளிர், பெண்கள் என்று சொல்வதில்  நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். இந்த நிகழ்ச்சியில் மட்டுமல்ல, பொதுவாகவே நம்முடைய அரசு அமைந்தபிறகு, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து அது மகளிருக்கான அரசாக, பெண்களுடைய முன்னேற்றத்திற்கான அரசாகவே தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மகளிர், பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறவேண்டும். யாரையும் எதிர்பார்த்து இல்லாமல், அவர்களுடைய சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றார். நம்முடைய அரசு கொண்டு வந்திருக்கக்கூடிய திட்டங்களை எல்லாம் பார்த்தாலே  உங்களுக்கு புரியும்.

ஆட்சிக்கு வந்த உடனே  நம்முடைய முதலமைச்சர் அவர்கள் போட்ட முதல் கையெழுத்து, மகளிருக்கான  அந்த விடியல் பயணம் திட்டத்திற்கான கையெழுத்துதான். இன்றைக்கு அந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் இந்த நான்கரை வருடங்களில் மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் மூலமாக 820 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு மகளிரும் மாதா, மாதம் 900லிருந்து 1,000 ரூபாய் வரை சேமிக்கின்றார்கள். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், இந்த இராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் சுமார் 8 கோடி பயணங்களை மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் மூலம் மகளிர் மேற்கொண்டு இருக்கின்றார்கள். இதுதான் அந்த திட்டத்தினுடைய இந்த அரசினுடைய வெற்றி.

அதே மாதிரி இன்றைக்கு அரசுப்பள்ளியில் படித்து பள்ளிக்கூடம் சென்றால் மட்டும் பத்தாது, உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அறிவித்த திட்டம் தான் திட்டம் புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம்.  உயர்கல்வி சேரும் போது ஒவ்வொரு மாணவனுக்கும், மாணவிக்கும் மாதம் 1,000 ரூபாய் கல்வி ஊக்கத் தொகை.

இப்படி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கின்றோம்.  இன்றைக்கு புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலமாக 8 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் 16 ஆயிரம் மாணவர்களுக்கு இந்தக் கல்வி ஊக்கத்தொகையை நம்முடைய அரசு வழங்கிக் கொண்டு வருகின்றது.

“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!

அதே போல, முதலமைச்சருடைய காலை உணவுத்திட்டம். முன்பெல்லாம் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள், காலையில் எழுந்து சமைப்பதற்கு நேரம் இருக்காது, குழந்தைகளை வெறும் வயிற்றில் பசியோடு பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிடுவார்கள். ஆனால், இன்றைக்கு பெற்றோர்கள் நிம்மதியோடு, மகிழ்ச்சியோடு குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புகிறார்கள். என் குழந்தையை பார்த்துக் கொள்வதற்கு நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பார்த்துக் கொள்வார். பள்ளிக்கூடத்திற்கு சென்றால் அவன் பசியோடு இருக்கமாட்டான். முதலில் அவனுக்கு தரமான காலை உணவு, அதன்பிறகு தரமான கல்வி என்று வாழ்த்தி நம்முடைய பெற்றோர்கள் இன்றைக்கு பள்ளிக்கூடத்திற்கு மகிழ்ச்சியோடு அனுப்புகிறார்கள். 

ஒவ்வொரு நாளும் சுமார் 22 லட்சம் குழந்தைகள் முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயன்பெறுகிறார்கள். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும்  25 ஆயிரம் குழந்தைகள் முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள்.

அதுமட்டுமல்ல, இன்றைக்கு இந்தியாவையே திரும்பி பார்க்கக்கூடிய ஒரு திட்டம். பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது. நம்முடைய அமைச்சர் அண்ணன் ராணிப்பேட்டை காந்தி அவர்கள் பேசும்போது கிட்டத்தட்ட அனைத்து திட்டங்களையும் உங்களிடத்தில் விளக்கினார்.

இது எல்லாவற்றிற்கும் மேலான மிக, மிக முக்கியமான ஒரு திட்டம் அதுதான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் உறுதி மொழியாக கொடுத்தார்கள்.

ஆட்சியில் பொறுப்பேற்கும்போது எவ்வளவு கடன் சுமை, எவ்வளவு நிதி நெருக்கடி என்று உங்களுக்கு தெரியும்.  எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்றவே முடியாது என்று சொன்னார்கள். ஆனால், நம்முடைய தலைவர் அவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு செப்டம்பர் 15 ஆம் தேதி அந்த திட்டத்தை நிறைவேற்றினார். 

கிட்டத்தட்ட  1 கோடியே 20 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொடுத்து கொண்டு வருகிறார்கள். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், கடந்த 26 மாதங்களாக, 1 கோடியே 20 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் முதலமைச்சர் அவர்கள் கொடுக்கின்றார்.

இந்த ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு மாதமும் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மகளிர்  கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மூலம் பயன்பெற்று வருகிறார்கள். 

வருகின்ற டிசம்பர் மாதம் முதல், இன்னும் கூடுதலான மகளிருக்கும், யார், யாருக்கெல்லாம் விடுபட்டுள்ளதோ அவர்களுக்கும் முதலமைச்சர் அவர்கள் கொடுப்பதற்கு உத்தரவிட்டிருக்கிறார். அவர்களுக்கும்  மகளிர் உரிமைத்தொகை வர இருக்கின்றது. அதற்கான அறிவிப்பை நான்தான் சட்டமன்றத்தில்  வெளியிட்டேன்.

நம்முடைய திராவிட மாடல் அரசினுடைய ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து, பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களும் பாராட்டி உள்ளார்கள். பஞ்சாப் மாநில முதலமைச்சர் அவர்கள் பாராட்டிச் சென்றுள்ளார். தெலங்கானா  மாநில முதலமைச்சர் அவர்கள் நம்முடைய பள்ளிக் கல்வித் திட்டங்களை பாராட்டிச் சென்றுள்ளார். இப்படி பலவகையில் இன்றைக்கு இந்தியாவிற்கு ஒரு எடுத்துக்காட்டு மாநிலமாக, ஒரு எடுத்துக்காட்டு முதலமைச்சராக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சிறப்பாக இந்த மாநிலத்தை வழிநடத்தி கொண்டிருக்கிறார்.

குறிப்பாக, இங்கு ஏராளமான மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த அருமை சகோதரிகள் வந்து இருக்கின்றீர்கள். நீங்கள் குழுவில் இருப்பதின் மூலம் மற்றவர்களுக்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக,  Inspiration-ஆக உங்களுடைய செயல்பாடுகள் இருக்கின்றது. அதனால் தான், நம்முடைய முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி இன்றைக்கு மட்டும் 50 ஆயிரம் மகளிருக்கு வங்கிக்கடன் இணைப்பை கொடுக்க இருக்கின்றோம்.

அதுமட்டுமல்ல, குழுக்களுக்கு அடையாள அட்டைகளை நம்முடைய முதலமைச்சர் அவர்கள்
அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் கிடையாது. சுய உதவிக் குழுக்களுக்கு ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு அடையாள அட்டை.  இந்த மேடையில் அடையாள அட்டைகளை நாங்கள் கொடுக்க இருக்கின்றோம்.

குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள். இது உங்களுடைய அடையாள அட்டை மட்டும் கிடையாது. உங்களுடைய அடையாளத்தை மாற்றப் போகின்ற அட்டை என்பதை நீங்கள் உணர வேண்டும். அந்த அளவுக்கு அந்த அடையாள அட்டையில் பல பயன்கள் இருக்கின்றது. 

உங்களுடைய தயாரிப்புகளை, நீங்கள் என்ன Product செய்கின்றீர்களோ, அதை அரசு பேருந்துகளில்  25 கிலோ எடை வரைக்கும் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு இனிமேல் கட்டணமே இல்லாமல் நீங்கள் எடுத்து செல்லலாம் என்ற சலுகையை முதலமைச்சர் அவர்கள் உங்களுக்கு கொடுத்திருக்கிறார்.

“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!

ஆகவே, இந்த அடையாள அட்டைகளை எல்லாம் நீங்கள் சிறப்பாக பயன்படுத்த வேண்டும். பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அடையாள அட்டைகளை பெறவந்துள்ள சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கு என்னுடைய அன்பையும், பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மகளிர் குழுக்களுக்கு மட்டுமல்ல, இன்றைக்கு 12 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை கொடுக்க இருக்கின்றோம். உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் என்பது தான் ஒரு மனிதனின் அடிப்படை தேவை. அதில் இருக்க இடம் என்ற தேவையை நம்முடைய முதலமைச்சர் அவர்கள், நம்முடைய அரசு தொடர்ந்து அதை  பூர்த்தி செய்து வருகின்றது. நம்முடைய அரசு அமைந்த இந்த நான்கரை வருடத்தில் மட்டும் சுமார் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கி இருக்கின்றது நம்முடைய அரசு.

குடியிருக்கின்ற வீட்டுக்கு பட்டா வேண்டும் என்பது  உங்களுடைய கோரிக்கை மட்டும் கிடையாது. அது உங்களுடைய உரிமை.  உங்களுடைய உரிமையை நம்முடைய அரசு இன்றைக்கு உண்மையாக்கி இருக்கின்றது. அதனால் தான், எப்போது ஆய்வுக் கூட்டம் நடத்தினாலும், நம்முடைய முதலமைச்சர் அவர்கள்  எத்தனைபேர் பட்டா கேட்டிருக்கின்றார்கள்.

அந்த பணிகள் எல்லாம்  எப்படி நடக்கிறது. உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு பட்டாக்களை கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள்  எங்களையெல்லாம் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கின்றார். அதன்படிதான் இன்றைக்கு மாவட்ட ஆட்சியாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக அளவிலான பட்டாக்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

இன்றைக்கு மட்டும் இந்த மாவட்டத்தில் 12 ஆயிரம் பேருக்கு பட்டா கிடைக்க உள்ளது. அந்த 12 ஆயிரம் பேரும் உங்களுடைய வீட்டில் இன்றைக்கு இரவு நீங்கள்  நிம்மதியாக தூங்கலாம். உங்கள் இடத்துக்கான சட்டப்பூர்வ உரிமையை நம்முடைய முதலமைச்சர் அவர்கள், நம்முடைய அரசு செய்து காட்டியிருக்கின்றது.

பட்டா வேண்டும் என்று நீங்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்ற காலம் மாறி, இன்றைக்கு அரசு உங்களைத் தேடி உங்களுக்கு பட்டா வழங்க இன்றைக்கு இந்த அரசு வந்திருக்கின்றது.

அதேபோல், அன்புக்கரங்கள் அதனுடைய பயனாளிகள் அந்த குழந்தைகள் எல்லோரும் இங்கு வந்திருக்கின்றார்கள். உங்களுக்கு நம்முடைய அரசு, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எல்லா வகையிலும் துணை நிற்பார்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களுடைய படிப்பில் நீங்கள் கவனம் செலுத்துங்கள். உங்களுடைய கல்வி மிக, மிக முக்கியம். விளையாட்டில் உங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள். உங்களைப் பார்த்துக் கொள்வதற்கு நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் என்றென்றைக்கும் உங்களோடு துணை நிற்பார் என்று கூறிக்கொண்டு,

இன்றைக்கு வீட்டுமனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லம், சுய உதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டை 
இப்படி பல்வேறு, நலத்திட்டங்களை எல்லாம் பெறவந்துள்ள
உங்கள் அத்தனை பேரையும் மீண்டும் நான் பாராட்டி, வாழ்த்தி உங்களுக்கு என்னுடைய  நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். 

தமிழ்நாட்டை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்ல,
தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியை பெருக்க, உங்களுக்காக தொடர்ந்து உழைக்க நம்முடைய முதலமைச்சர் அவர்களும், நம்முடைய அமைச்சர் பெருமக்களும், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் அத்தனை பேரும்  தயாராக இருக்கின்றோம் என்று கூறிக்கொள்கின்றேன்.

எனவே, இந்த வளர்ச்சி மென்மேலும் பெருக வேண்டும், அதற்கு எப்போதும் போல உங்களுடைய ஆதரவு நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கும், நம்முடைய அரசுக்கும் தொடர வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.

இறுதியாக இந்த விழாவை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய மாவட்டத்தினுடைய அமைச்சர் அண்ணன் ராணிப்பேட்டை காந்தி அவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் என்னுடைய மீண்டும் என்னுடைய பாராட்டுக்களையும்,  வாழ்த்துகளையும், நன்றியையும் கூறி விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories