
சென்னையில் வெள்ளத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை காரப்பாக்கம், ஒக்கியம் மடுவில் மழைநீர் தடையின்றி சீராக வெளியேறும் வகையில் செய்யப்பட்டுள்ள பணிகளைப் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விவரங்களைக் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி நெடுஞ்சாலையின் மேல் பகுதியில் ஒக்கியம் கரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளையும், நீர் வழித்தடத்தின் கொள்ளளவையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
அதேபோல், மேம்பாலத்தின் கீழ் நடைபெற்றுள்ள Vent Clearance பணிகளையும் ஆய்வு செய்தார். பின்னர் சென்னை கண்ணகி நகரில் உள்ள ஒக்கியம் மடுவின் இடதுபுறத்தில் தடுப்புச் சுவர் கட்டும் பணியினை துணை முதலமைச்சர் ஆய்வு மற்கொண்டு, இப்பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து, சோழிங்கநல்லூர் அருகே நெடுஞ்சாலைத் துறையின் மூலம் செம்மொழி சாலை எல்காட் பகுதியில் ரூ.42 கோடி மதிப்பீட்டில் 1.700 கிலோ மீட்டர் நீளத்திற்கு இரண்டு கண்கள் கொண்ட பெரிய அளவிலான மூடு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை துணை முதலமைச்சர் ஆய்வு செய்து,அந்தப்பணியின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.








