
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (1.11.2025) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 18 கோடியே 90 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
‘108’ அவசரகால ஊர்தி சேவையானது 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் நாள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசானது EMRI GHS என்ற தனியார் நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவையை வழங்கி வருகிறது.
இச்சேவை 24x7 மணி நேரம் என்ற சேவையின் அடிப்படையில், பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அவசரகால மருத்துவ தேவைக்கு “108“ என்ற கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறுகின்றனர்.

அவசரகால நெருக்கடியின் போது தேவையான மருத்துவ உதவியை எளிதாகவும், உடனடியாகவும் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் வழங்க, தற்போது 1,353 எண்ணிக்கையிலான ‘108’ அவசரகால ஊர்திகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 977 - அடிப்படை வசதி கொண்ட அவசரகால ஊர்திகள், 307 - மேம்படுத்தப்பட்ட அவசரகால ஊர்திகள், 65 - பச்சிளங்குழந்தைகளுக்கான ஊர்திகள் உள்ளிட்ட ஊர்திகள் அடங்கும்.
இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை '108' அவசரகால ஊர்திகளின் சேவை மூலம் கருவுற்ற தாய்மார்கள், சாலை விபத்துகளில் காயமுற்றோர், இதர அவசரகால மருத்துவ தேவைகள் என மொத்தம் 85,98,054 மருத்துவ பயனாளிகள் பயன்பெற்று உள்ளனர்.
இவைத்தவிர, 41 இரு சக்கர வாகன அவசரகால ஊர்திகள் மூலம் 1,61,688 மருத்துவ பயனாளிகளும், பச்சிளங்குழந்தைகளுக்கான சேவை மூலம் 95,119 மருத்துவ பயனாளிகளும், பழங்குடியினர் பகுதிகளில் வசிக்கும் 4,30,697 மருத்துவ பயனாளிகளும் பயன்பெற்றுள்ளார்கள்.
87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகள்
'108' அவசரகால ஊர்திகளின் சேவையை மேலும் செம்மையாக செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் 18 கோடியே 90 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவையினை இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.








