
கடந்த 19.10.2025 அன்று சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து திருவாரூர், தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மேற்கொண்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும், 21.10.2025 அன்று தலைமைச் செயலகத்தில், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்;
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொண்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட விவசாய பெருங்குடி மக்கள் பாதிக்கப்படாத வகையில் நெல் கொள்முதல் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், மழையால் நெல் மூட்டைகள் சேதம் அடையாமல் பாதுகாத்திடவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விரைந்து கிடங்குகளுக்கு கொண்டு செல்லவும் உத்தரவிட்டார்.
அதன்தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (24.10.2025) சென்னை, சீனிவாசபுரம் அருகில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு. ஆய்வு செய்து முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்திடுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

சென்னை நகரின் மூன்று முக்கிய ஆற்றுப்படுகையில் ஒன்றான அடையாறு ஆறு ஆதனூர் ஏரியில் இருந்து உருவாகி மொத்தம் 42.38 கி.மீ நிளத்திற்கு பயணித்து பட்டினபாக்கம், சீனிவாசபுரம் அருகில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
தற்போது, பெய்துவரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருவதன் காரணமாக இன்று (24.10.2025) 945 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை சுமார் 150 மீட்டர் அகலப்படுத்த ஏற்கனவே உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, இன்றையதினம் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், முகத்துவாரப் பகுதியில் பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அகலப்படுத்தும் பணிகளை பார்வையிட்டார்.
கரைப்பகுதியில் தூர்வாரி தூர்வாரி அள்ளப்பட்ட மணல் குவியலை உடனடியாக அகற்றிடவும், இப்பகுதியில் கூடுதலாக இரண்டு பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்தி, முகத்துவாரப் பகுதியினை அகலப்படுத்தி தூர் வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.
மேலும், அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியினை மாநகராட்சி வட்டார துணை ஆணையர் தலைமையில் நீர்வளத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் கொண்ட குழுவினை அமைத்து வடகிழக்கு பருவமழை காலம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.








